துக்காராம்

துக்காராம் 16 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புனேவிற்கு அருகில் உள்ள தேகு என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். இவரது மனைவி பெயர் கமலாபாய். இவர் ஒரு சம்சார துறவி. மராத்திய கவிஞர் மற்றும் சமய சீர்திருத்தவாதி ஆவார். சமூக சமத்துவம் அன்பு மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பக்தி பாடல்களை இயற்றினார். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சத்ரபதி சிவாஜி கோயிலுக்கு வந்த போது அவரை சிறைபிடிக்க அவுரங்கசீப் சுற்றி வளைத்தார். அப்போது துக்காராம் இறைவனை வேண்டிப் பாடல்கள் பாட இறைவனே சிவாஜியைப் போல குதிரையில் வந்து எதிரிகளுடன் சண்டை போட்டு அவர்களை ஓட வைத்தார். துக்காராமின் போதனைகள் மற்றும் பாடல்கள் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகக் கருதப்பட்டார். துக்காராமின் படைப்பு நூல்களில் ஒன்று துக்காராம் கீதை ஆகும். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் ஒன்று.

கமலாபாய் தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி தனது கணவருக்கு சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியை வாங்கிக் கொடுத்தாள். வேலை நேரத்தில் பரண்மேல் ஏறி ஆனந்தமாக பஜனைப் பாடல்களைப் பாட பறவைகள் ஆனந்தமாக வந்து அத்தனை சோளத்தையும் கொத்திச் சென்று விட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார். வருமானத்திற்கு வழியும் இல்லை. துக்காராம் உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவரை திட்டிக் கொண்டே இருப்பார்கள். சம்பாதிக்கா விட்டால் போகிறது. ஆனால் ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டாள். அதற்கு அனைவரும் ஒரே மனித ஜாதிதான் என்று சிரித்தார். ஊரில் நல்ல பெயரும் இல்லை. வருமானமும் இல்லை. ஒரு நாள் கோயிலுக்கு மாலை செல்ல வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தார்கள். நல்ல புடவையாக கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஒருவர் துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் தீவிர ரசிகர். அன்பளிப்பாகக் கொடுத்த புடவை ஒன்று இருந்தது. ஒருமுறை மட்டுமே கட்டிய அந்த புடவையை துவைத்து வீட்டின் பின்புறம் காய வைத்திருந்தாள்.

துக்காராம் வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும் பக்தியின் ஆழமும் கமலாபாயையும் உருக்கத்தான் செய்தது. இலட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கீழ் ஜாதி பெண் என்று தெரிந்தது. அவளை பார்த்த துக்காராம் ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்கார் என்று அன்போடு அவளை உபசரித்தார். இதனைப் பார்த்த கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள் என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். கச்சேரி தொடர்ந்தது. எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கிருஷ்ணரிடம் கிடையாது. அனைவரும் கிருஷ்ணரைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழி தேடுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தி இசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏன் அம்மா நீ புறப்படவில்லையா? என்று கேட்டார்.

அனைவரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள் என்றாள். உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா? என்று கேட்டார். நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால் யாரோ ஒரு பெண் மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் அனைத்தையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவை தான் என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோக வைத்தார் இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று கவலையுடன் சொன்னாள். இதனைக் கேட்ட துக்காராம் வேகமாக கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார். அம்மா இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது என்று சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள் ஐயா நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்டாள். அவள் கோபம் சிறிது நேரம் இருக்கும். பிறகு சமாதானமாகி விடுவாள். அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. ஆகவே நீ யோசிக்க வேண்டாம் இப்போது உனக்குத்தான் இந்த சேலை அவசியம் தேவை என்றார். துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடை பெற்றாள்.

துக்காராம் ஒன்றும் தெரியாதவர் போல் அமர்ந்து கொண்டார். மாலைநேரம் வந்தது. கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணவில்லை. கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள். புடவை எங்கே? என்று கேட்டாள். கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்து விட்டேன். உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே? என்று குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால் இவரோ வள்ளல் ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர் என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கணவரோடு புறப்பட்டாள். அழாதே கமலா நமக்குத் தேவையானவற்றைக் கிருஷ்ணர் கொடுப்பான் என்றார். கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்? என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலாபாய். இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். கமலாபாய் கண் திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது. அப்படியானால் கீழ் ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்துகொண்டேன் என்று ஆனந்தக் கண்ணீருடன் வழிபட்டாள்.

கிருஷ்ணரையும் ருக்மிணியையும் விழுந்து வணங்கிய அவள் வாருங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள். வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார். அம்மா என்னை மறந்துவிட்டீர்களா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம் என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா. அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன் என்றார். கமலாபாய் திகைத்துப் போனாள். கமலா நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக் கொண்ட அந்த கிருஷ்ணன் அந்த புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா? என்று துக்காராம் சிரித்த போது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்து கொண்டது.

துக்காராம் நாற்பத்தைந்து ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த துக்காராம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தடியில் நின்று கொண்டு நான் போய் வருகிறேன் என்று கூறினார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு ரதவிமானத்தை அனுப்ப அதில் ராம் ராம் என்று சொல்லிக் கொண்டே இந்தப் பூத உடலுடன் வைகுண்டம் கிளம்பினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.