அபிராம பட்டர்

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம்.

இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார்.

திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.