கபீர்தாஸர்

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் முன்பு சுகப்பிரம்மர் வணங்கி நின்றிருந்தார். பாரத பூமியில் பக்தி குறைந்திருந்த அந்த சமயத்தில் நாராயணன் சுகப்பிரம்மரை பூமியில் அவதரிக்க ஆணையிட்டார். மறுபடியும் ஒரு கருவறைக்குள் புக விரும்பாத சுகப்பிரம்மர் சுயம்புவாக பூமியில் காசியில் உள்ள கங்கை கரையில் தோன்றினார்.

புண்ய சேத்ரங்களிலேயே சிறந்த காசி மாநகரில் தமால் எனும் பெரியார் ஒருவர் தன் மனைவியுடன் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் நாள் தோறும் ஒருவருக்காவது அன்னதானம் செய்தும் தான் நெய்த துணிகளை தானமாக வழங்கி விட்டு தான் உணவு அருந்துவார்கள். இருவருமே தங்களுக்கென ஒரு குழந்தை இல்லை என பெரிதும் வருந்தினார்கள். ஒருநாள் விருந்தினராக வந்த பெரியவர் ஒருவர் அவர்களது சேவையை கண்டு வியந்து நீங்கள் செய்யும் இந்த விருந்தோம்பல் உங்களோடு நின்று விட இறைவன் விடமாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு மகனை அளிப்பார் என்று வாழ்த்திவிட்டு சென்றார். தமால் ஒரு நாள் குழந்தை இல்லையே என மனம் நொந்தவராக துணி நெய்வதற்கான நூல் சுருள்களை அலசுவதற்காக கங்கைக்கு கரைக்கு சென்றார். அங்கும் பலர் பகட்டான வழிபாடுகளைச் செய்வதைக் கண்டு காசிக்கு வந்தும் உலக ஆசைகளில் உழல்கிறார்களே என வருந்தி நினைக்கையில் அவரின் கையில் இருந்த நூல் சுருள் கங்கை நதியோடு சென்றது. இந்த நூல் இருந்தால் துணி நெய்து ஐம்பது பேருக்கு கொடுக்கலாமே என வருந்தியவராக அதைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓடினார். அந்த நூல் சுருள் கங்கையின் வேகத்தில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று மறைந்தது. அவர் நின்ற இடத்துக்கு அருகே ஒரு பர்ணசாலை இருந்தது. வருத்ததுடன் இருந்த தமால் இறைவனை தியானிப்போம் என்று அங்கே அமர்ந்தார்.

கங்கைக் கரையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் தமால். நாராயணனின் ஆணைக்கினங்க சுயம்புவாக தோன்றிய சுகப்பிரம்மர் குழந்தையாக அழும் குரல் கேட்டுக் கண் விழித்தார் தியானத்தில் இருந்த தமால். வேறு யாரும் அருகில் இல்லாத நிலையில் தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அவரால் எடுத்துவரப்பட்ட குழந்தையைக் கண்டு அவரது மனைவியும் மனம் மகிழ்ந்தார். அக்குழந்தைக்கு கபீர் எனப் பெயரிட்டனர். கபீர் என்றால் பெரிய என்று பொருள். குழந்தை கபீரின் விளையாட்டுகள் கூட தெய்விக மணம் கமழ்ந்த வண்ணம் இருந்தன. தளர்நடை போட்ட பருவத்திலேயே தந்தையிடம் நெசவும் கற்றான். எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சிறுவன் தெய்வத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டே செய்தான். நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே கபீருக்கு அவனது பெற்றோர் மணமுடிக்க விரும்பினர்.

முன்பொரு காலத்தில் சுகப்பிரம்மரை மணக்க முயன்று தோற்ற ரம்பை அவர் பூவுலகில் பிறந்திருப்பது அறிந்து அவரைப் பின்பற்றி அவரது உறவினருக்கே சீந்தரா எனும் மகளாகப் பிறந்திருந்தாள். அவளின் அழகைக் கண்டு கபீரின் பெற்றோர் அவளை கபீருக்கு திருமணம் பேசி முடித்தனர். திருமணத்துக்கு முன் தங்களது மத வழக்கப்படி சுன்னத்து செய்ய அவரது உறவினர்கள் முயன்றனர். சுன்னத் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் வாதிட்டுக் கபீர் வென்றார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மதச்சடங்குகளை அவமதிக்கும் கபீரை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமெனக் கூறினர். கபீரும் வீட்டைத் துறந்து ஓட முயன்றார். கபீரை இழக்க மனமின்றி அவரது பெற்றோர் அவரைத் தடுத்து வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி கூறினார்கள்.

நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்ற கபீர்தாஸர் ராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடலாக பாடி வளர்ந்து வந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால் நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும் ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. திருமணப் பேச்சு மீண்டும் ஆரம்பித்தது. சுன்னத்து செய்து கொள்ளாதவனுக்கு பெண் கொடுக்கமாட்டோம் எனப் பெண் வீட்டார் கூறிவிட்டார்கள். கபீரின் தாய் தந்தையர் மனம் வெதும்பினர். சீந்தராவின் தந்தையின் கனவில் தோன்றிய இறைவன் உன் மகளைக் கபீருக்கே மணம்முடி எனக்கூறினார். இதனால் தந்தை குழப்பமடைந்த நிலையில் இருந்தார். சீந்தராவும் கபீரையே மணப்பேன் இல்லை என்றால் வேறு ஒருவரை மனதாலும் நினைக்க மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தாள். இறுதியில் இறைவனே ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி திருமணத்தை செய்து வைத்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும் இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும் ராமரின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். தமாலின் வீட்டில் இரவும் பகலும் தறியின் இசையும் கபீரது இசையும் இறைவனது புகழைப் பாடியபடி இருந்தன. ஒருநாள் மெய்மறந்து கபீர் பாடும் போது அவரது கை நெசவு செய்வதை நிறுத்தி விட்டது. பக்தனின் பணியில் இறைவனே அமர்ந்து தறியை இழுத்தார். தறி தானாகவே நகர்ந்து துணிகளை நெய்தது. ஒரு முழம் துணி நெய்து விட்டு பின்பு கபீர் தியானத்தில் அமர இறைவன் இன்னொரு முழம் நெய்தார். காலையில் வந்து கண்ட அவரது தாயார் சோம்பேறி இரவெல்லாம் நெய்தது இரண்டே முழம்தானா இதை விற்றுப் பணம் வந்தால் தான் உனக்கு இன்று உணவு எனக் கடிந்தார்.

கபீரும் தறியிலிருந்து துணியை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். அந்த அழகிய துண்டை எவரும் வாங்கவில்லை. மனம் தளர்ந்த கபீர் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஓர் அந்தணர் அந்தத் துணியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். கபீர் ஓடி அவரை வழி மறித்துத் துணியைப் பிடித்து இழுத்தார். அந்த இழுபறியில் துணி இரண்டாகக் கிழிந்து விட்டது. தான் கிழித்த துணியைத் தானே எடுத்துக் கொள்வதாகக் கூறிய அந்தணர் சில சோழிகளை அதற்கு விலையாகத் தந்தார். கோபம் கொண்ட கபீர் அந்த சோழிகளை வீசி எறிந்தார். அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமில்லை. அந்தத் துண்டை இலவசமாக தந்தால் நான் பிருந்தாவனம் செல்வதால் அதைக் கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார். அதை விற்றுப் பணம் எடுத்துச் செல்லாவிட்டால் தான் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் கபீர் தர மறுத்தார். ஆனால் அந்தணரோ ராமரின் திருநாமத்தின் பெருமையையும் அதை காசி விஸ்வநாதரே காசியில் இறப்பவர்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பதையும் கூறி தானத்தின் பயனைப் பற்றி எடுத்துக்கூறி நீண்டதொரு பிரசங்கம் செய்து அவரது தயக்கத்தைப் போக்கினார். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து பக்தி மார்க்கத்தின் வழியாக இறைவனை அடைந்து கொள். அதற்கு சற்குரு ஒருவரைத் தேடி அடைந்து கொள் என்று சொல்லி ஒரு துண்டுத் துணியுடன் மறைந்து விட்டார்.

கபீர் அந்தணர் கூறியபடி ராம நாமத்தினையே துணையாகக் வைத்துக் கொள்வோம் என எண்ணியவராக மீதியிருந்த ஒரு முழத்துண்டை மடித்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தார். கபீரின் எதிரே ஒரு முஸ்லீம் முதியவர் வந்தார். கபீரை நெருங்கி ஐயா குளிர் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். இந்த ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன் என்றார். சற்று முன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி அந்தத் துண்டை முதியவரிடம் தந்தார். அதற்கு அந்த முதியவர் அல்லாவின் பெயரை சொல்லாமல் ஏதோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன் எனக்கூறி கபீரின் பெற்றோரிடம் இதனை சொல்வதற்கு கபீரின் வீட்டிற்கு விரைந்தார். தாய் அடிப்பாள் என்று பயந்த கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை கொடுத்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் இத்தனை சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும். ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கபீரை பற்றி குற்றம் சொல்லி விட்டு சென்றார்.

துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த அவரது தாயார் இதனை கேட்டதும் கபீரை பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர் ஹரே ராம் ஹரே ராம் எனக் கதறினார். அந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன் அம்மா நீ பாக்யவதி கபீர் பரம ஞானி எனது மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது எனது முதுகிலும் பட்டிருக்கிறது பார் என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற தாயாரை தெளிவித்து விட்டு தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.

வாரணாசியில் ராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழி நடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற சென்றார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ராமானந்தரின் சீடர்கள் மடத்துக்குள்ளேயே விடாமல் கபீரை தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார். ராமானந்தரை சந்திக்க விடாமல் கபீர் ஒரு திருடன் எனக் கூறி அங்கிருந்து அடித்து விரட்டி விட்டனர். ராமானந்தரிடம் தீட்சை பெற கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை செய்தாலும் இறைவனுடைய திரு நாமத்தையே சொல்லுவார்கள். அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று திட்டமிட்டு அன்று இரவே கங்கை படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார். அன்றிரவு ஸ்ரீராம லட்சுமணர்கள் அந்த மடத்தை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறுவதைப் போல ராமானந்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு எழுந்து கங்கைக்கரை நோக்கி சென்றார். கபீரை இருட்டில் மிதித்துவிட்ட ராமானந்தர் வழக்கப்படி ராம் ராம் என உச்சரித்த வண்ணம் கங்கையில் இறங்கி நீராட சென்று விட்டார். அப்போது ராமனந்தர் செபித்த ராம ராம என்ற திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.

ராம மந்திரத்தை தனது குருவின் பாத தீட்சையாக ஏற்றுக் கொண்ட கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளசி மாலையணிந்து ராம நாமத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தார். சிறு வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். இதனால் ஊரில் இருக்கும் தன் குல மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கபீரின் ராமநாம ஜபம் செய்வதினால் அவருக்கு எதிராக முஸ்லீம்கள் நமது மதத்திற்கு எதிரானது என்று அவருடன் வாதிட்டனர். அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை ராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் வாதிட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்.

அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு மகான் இருந்தார். அவருடைய சீடர் கோரக்நாதர் என்பவர் சில சித்திகள் கைவரப்பெற்றார். அதனாலேயே கர்வம் கொண்டவராக ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வென்றார். ராமானந்தரையும் வெல்ல விரும்பி காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதத்தற்கு அழைத்தார். ராமானந்தரின் சீடர்கள் கோரக்நாதரை கண்டு ஓடி ஒளிந்தனர். சாந்த சீலரான ராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாதம் புரிய ராமானந்தரின் அனுமதியைக் கோரினார். ஆனால் ராமானந்தர் இது சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதத்தில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என அனுமதி கொடுக்கவில்லை. கபீரோ குருவின் ஆசிகள் மட்டுமே போதும் கோரக்நாதர் உடனான வாதில் நிச்சயம் வெற்றி பேறுவேன் எனக்கூறி ராமானந்தரின் அனுமதியை பெற்றார்.

கோரக்நாதரின் எதிரில் சென்ற கபீர் என் குருவின் வல்லமை தெரியாமல் இருக்கின்றீர்கள். வாதிலும் பிரம்ம ஞானத்திலும் அவர் முன் நிற்கக்கூட உங்களுக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்று விடுங்கள் என்று கர்ஜித்தார். சிறுவனே உன்னை என்ன செய்கிறேன் பார் என கோரக்நாதர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ராமானந்தரை தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு மரம் போல் வளர்ந்து நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்நாதரை வானவெளியில் அமர்ந்து வாதம் புரிய அழைத்தார். கோரக்ராதர் திகைத்தார் எனினும் நொடியில் ராமானந்தரின் உருவத்திற்கு மாறி அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராக கோரக்நாதரின் குருவான மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார். உடனே கோரக்கர் மஹாவிஷ்ணு உருவத்திற்கு மாறினார். கபீரும் சரபமூர்த்தியானார். கோரக்நாதர் மாறும் உருவத்திற்கு ஏற்ப ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறமை கண்டு தனது கர்வத்தை விட்டார் கோரக்நாதர். ராமானந்தரிடன் சென்ற கோரக்நாதர் சிறந்த சீடனை அடைந்த நீங்கள் மிகவும் பாக்யசாலி எனக்கூறி வணங்கி அங்கிருந்து சென்றார். தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்த ராமானந்தர் இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் பிரம்ம ஞானத்தை அடைந்து விட்ட நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசி கூறினார். காசி நகர் முழுவதும் ராமானந்தரையும் கபீர்தாசரையும் புகழ்ந்தது. குருநாதர் மெச்சும் சீடனாக கபீர் விளங்கினார்.

ஒருநாள் நூறு சாதுக்கள் படைசூழ இறைவன் கபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தார். வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி. இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் சீந்தரா ஒரு யோசனை கூறினாள். கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் பணத்தை கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசி தீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தால் என்ன என்றாள். கபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். விருந்தோம்பல் முடிந்த பின் பொருளுக்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன் என்றார். மதிமயங்கி அவனும் பொருள் அளித்தான். சாதுக்களுக்கு வயிறார விருந்து சாப்பிட்டனர். பிறகு கபீர்தாசர் வாக்களித்தபடி சீந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாமல் சுமந்து சென்று சௌகாரின் வீட்டில் விட்டார். அப்போது அந்த ஊர் அரசு அதிகாரி வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார். உள்ளே சீந்தராவைக் கண்டு இவள் கபீரின் மனைவி. இந்த உத்தமியையா கடத்தி வந்தாய் எனக்கூறி சீந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.

வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட கபீர் என் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என அரசு அதிகாரியின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்க கை ஓங்கினார். அப்போது அங்கே அந்த அதிகாரி காணவில்லை. மாறாக ஶ்ரீராமர் காட்சி அளித்து அதிகாரியாக சென்று உன் மனைவியை மீட்டது நான்தான் உனக்கு அடிக்க வேண்டுமென்று தோன்றினால் என்னை அடி என்றார். இறைவனின் தரிசனம் கண்ட கபீர் கலங்கிப் போய் ராமனைத் தொழுது பாடல்கள் புனைந்தார். இது போல் கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார் கபீர்தாசர்.

கபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மகானாகவும் விளங்கினான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான். அவனைப் பிரிய மனமின்றி கபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் அனுமதி அளித்தார். செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினான். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை கிருஷ்ணரின் உருவமாகவே கண்டனர். அந்த ஊரில் இருந்த ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தீராத வயிற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த வியாபாரி இந்த நோயை கமால் தீர்த்தால் அவரை ஒரு மகான் என நம்பலாம் என்றார். மறுநாள் காலையில் வலியினால் துடித்த போது முன் தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது. உடனே கமாலை நினைத்து வணங்கினார். உடனே அவரது வயிற்றுவலி மறைந்தது.

ரத்ன வியாபாரி கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளித்தார். கமால் இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை என ஏற்க மறுத்தார். வியாபாரி கமாலுக்கு தெரியாமல் அவரது துணியில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தார். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும் போது மரகதகல் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய இறைவன் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் மரகதக் கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூறினார். கபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார். அதே சமயத்தில் நடக்க விருப்பதை முன்பே அறிந்து அங்கு வந்து சேர்ந்தா ராமானந்தர். இறைவன் சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, அனும சமேதராக அங்கு தோன்றி அனைவருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.

ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த கபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை கபீரிடம் தந்து விட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறி விடுவது என திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுவதற்கு முன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.

சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து என் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது என வற்புறுத்தினான். தயக்கத்துடன் கபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலை மட்டும் காவலர்களிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்க விடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழியாக வந்தார்கள். தலையற்ற அந்த உடல் இரு கைகளையும் கூப்பி அவர்களை வணங்கியது. இதனைக் கண்ட சாதுக்களும் ஊர்மக்களும் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம் தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது. அன்பனே கமால் எழுந்திரு எனக்கூற அடுத்த கனம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண நாமத்தை சொல்லி சாதுக்களையும் பெற்றோரையும் வணங்கினார்.

சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே கபீர்தாஸரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ராமனை தன்னுள் உணர்ந்த கபீர்தாஸர் இந்து முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கபீர்தாஸரின் குரு ராமாநந்தரின் தாக்கம் இவரிடம் அதிகம் காணப்பட்டது. கபீர் தன்னுடைய குருவான ராமானந்துக்கு சிலை எழுப்பினார். இந்து சமயம் இசுலாம் ஆகிய இரு சமயங்களிலும் தவறு இருந்தால் அதனை கபீர் கடுமையாக விமர்சித்தார். வேதங்களை தவறான முறையில் மொழி பெயர்த்து சொல்லிக் கொடுக்கப்பட்டு இந்து சமயம் தவறான வழியில் செல்லப் படுவதாகவும் உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர். அவரது கருத்துகளுக்காக இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார். எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான். அவன் எந்த ஆலயத்திலும் இல்லை என்று உபதேசித்தார். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார். ஆதிகிரந்தம், பிரம்ம நிருபன், ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றியுள்ளார்.

ஜபமாலையை உருட்டுகிறாய் நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய் கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய் என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை அன்பு இல்லை நீ எப்படி இறைவனை அடைவாய்.

என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து பாடினார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறிய கபீர்தாசர் ராமர் சீதாவின் திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டார். கபீரின் போதனைகள் இந்து இசுலாமிய மதங்களைக் கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப் பில் கபீரின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவரின் பிரபலமான பாடல் ஒன்று

நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.

இதற்கு அர்த்தம் உலகம் இறைவனின் படைப்பு என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள் என்று பாடுகிறார். 1518 ஆம் ஆண்டில் காசியில் கபீர் இறைவனைத் துதித்தவாறே மோட்ச பிராப்தி அடைந்தார். அவர் இறந்த பொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இந்து முஸ்லீம் சமயத்தை சேர்ந்தவர்களால் அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார். கபீரின் இறந்த உடல் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பெரியவர் ஏன் வீணாகச் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்தி விட்டு செல்லுங்கள். நாளை இறுதி ஊர்வலத்தின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும் இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் அவரது திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர். போர்வையை எடுத்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள். கபீரின் உடல் மறைந்து அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன. இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப் பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி இருந்தன. இரு தரப்பினரும் சச்சரவு இல்லாமல் சரிபாதியாக பூக்களைக் கொண்டு சென்று இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள். அதுபோல முஸ்லிம்கள் பாதி பூக்களைப் புதைத்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.