வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர். அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது. இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார். பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார். அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார். ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார். வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன். மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார்.
இதனைக் கேட்ட ராமானுஜர் அழியப்போகும் அழகின் மேல் இவ்வளவு ஆசையாய் இருக்கிறாரே என்று வில்லிதாசரிடம் உங்கள் மனைவியின் கண்களை விட வேறு ஒரு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவீர்களா என்று கேட்டார். வில்லிதாசரும் அத்தகைய கண்களை காண்பித்தால் அந்த கண்களுக்கு தான் அடியாமையாவதாக ஒப்புக்கொண்டார். ராமானுஜர் வில்லிதாசரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துச் சென்று திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதர் காட்டியருளிய அழகிய கண்களை வில்லிதாசருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். ரங்கநாதரும் தம்முடைய அழகிய கண்களை வில்லிதாசருக்கு காட்டியருளினார். வில்லிதாசரும் அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்து உடனே ராமானுஜரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார். வில்லிதாசருடைய மனைவியும் ராமானுஜருடைய பெருமையை உணர்ந்து ரங்கநாதரிடம் சரணடைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டினாள். தம்பதிகள் இருவரும் தங்களுடைய உடைமைகளைத் துறந்து ரங்கநாதர் மற்றும் ராமனுஜருடைய திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். தன் சீடரான வில்லிதாசருக்கு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியை ராமானுஜர் ஒப்படைத்தார்.
ஸ்ரீரங்கநாதர் வில்லி தாசரை முழுமையாக ஆட்கொண்டார். ஸ்ரீ ராமரின் வனவாசத்தின் பொழுது லட்சுமணன் உறங்காமல் ராமருக்கு காவல் காத்தது போல் வில்லி தாசரும் ரங்கநாதரை இடைவிடாமல் துதித்துக் கொண்டிருந்தார். இதனால் அவருக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. வில்லிதாசரும் அவர் மனைவியும் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் ஆனர்கள். ராமானுஜருக்கு பணிவிடை செய்து தங்களுடைய எளிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை ரங்கநாதரின் கடைசி நாள் உற்சவம் தீர்த்தவாரியன்று ராமானுஜர் வில்லிதாசரின் கரங்களை பிடித்தபடி கோயிலின் குளத்திலிருந்து ஏறி வந்தார். இதனை கண்ட சீடர்கள் சன்யாசியாகிய ராமானுஜர் பிறப்பால் தாழ்ந்த வில்லிதாசரின் கரங்களை பிடிப்பது முறையில்லை என்று நினைத்தார்கள். சீடர்கள் தாங்கள் நினைத்ததை ராமனுஜரிடம் கூறினார்கள்.
ராமானுஜர் வில்லிதாசர் மற்றும் அவரது மனைவி பொன்னாச்சியாரின் மகிமையை சீடர்கள் அனைவரும் புரிந்து கொள்வதற்காக சீடர்களிடம் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்று அங்கேயுள்ள நகைகள் பொருட்கள் அனைத்தையும் முடிந்தவரை களவாடிக் கொண்டு வரச்சொன்னார். சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும் நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும் இந்த இவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த சீடர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளை கழற்றிய பின் அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில் கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது போல பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக் கண்டு அச்சமடைந்த சீடர்கள் வில்லிதாசரின் இல்லத்திலிருந்து ராமானுஜரிடம் ஓடினர். நடந்த சம்பவங்களைக் கேட்டபின் ராமானுஜர் சீடர்களை மறுபடியும் வில்லிதாசரின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச் சொன்னார்.
ராமானுஜரின் உத்தரவுப்படி மீண்டும் வந்த சீடர்கள் வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். வில்லிதாசர் பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும் காணவில்லை எங்கே என கேட்டார். அதற்கு பொன்னாச்சியார் சிலர் தான் அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது நான் உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில் களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம் களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட வில்லிதாசர் மன வருத்தமுற்று நீ கல்லை போல கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் இருவரும் களவாட வந்தவர்களுக்குக் கூட உதவும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தனர். வில்லிதாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட சீடர்கள் ராமானுஜரிடம் திரும்பச் சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு மறுநாள் ராமானுஜர் வில்லிதாசரிடம் நடந்தவற்றை விவரித்து நகைகளை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.
வில்லிதாசர் தனது இறுதி நாட்களின் பொழுது வைஷ்ணவர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு அழைத்துத் பாதபூஜைகள் செய்தார். அப்பொழுது பொன்னாச்சியாரிடம் தாம் பரமபதத்தை அடையப் போவதாகவும் நீ தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராமானுஜரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டே தனது திருமேனியை நீத்தார் வில்லிதாசர். வைணவர்களுக்கு உண்டான முறைப்படி அவருக்கு இறுதிக்கடன்களை செய்தார்கள் வைணவர்கள். வில்லிதாசரின் திருமேனியை பல்லக்கில் வைத்து தெருக்கோடி வரை சென்றவுடன் வில்லிதாசரின் பிரிவை தாங்கமுடியாமல் பொன்னாச்சியார் வாய்விட்டு கதறி அழுது தன் உயிரை அப்பொழுதே நீத்தார். அதைக்கண்டு திகைத்த வைணவர்கள் பொன்னாச்சியாரையும் வில்லிதாசருக்கு பக்கத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். மணவாள மாமுனிகள் இயல் சாற்றுமுறையை (உற்சவகாலங்களின் முடிவில் ஓதப்படுவது) பல்வேறு ஆசார்யர்களின் பாசுரங்களின் அடிப்படையாக கொண்டு தொகுக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசர் இயற்றிய பாசுரம் முதலில் இடம்பெற்றுள்ளது. பிள்ளை லோகாச்சார்யர் தனது தலை சிறந்த க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாஸனத்தை விவரிக்கும் பொழுது பிள்ளை உறங்கா வில்லிதாசரைக் கொண்டாடியுள்ளார்.