ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரில்

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும் அன்றைய கால கட்டத்தில் அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை நிலைநாட்டினார். கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமானுஜரை மெச்சி ஸ்ரீ பாஷ்யகாரர் என்னும் பட்டம் சூட்டியுள்ளார்.

ராமானுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார் தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத 3 ஆசைகளை ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி என்னும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தார். போதாயன விருத்தி மூலம் 2 லட்சம் படிகளை உடையது. ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன் ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார். மூன்று மாதங்கள் நடந்து சென்று காஷ்மீரை அடைந்தனர்.

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள சரஸ்வதி பீடத்தில் வைக்கப் பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும் அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர் கூரத்தாழ்வாரை அரசவையில் படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் நீங்கள் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடுங்கள். அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம் என்றார். ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது தமது தத்துவார்த்த விளக்கத்தையும் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்த ஓலைச் சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர் பண்டிதர்கள் ராமானுஜர் கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்த போது சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச் சுவடிகள் சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்தனர்.

மன்னர் மிக வியந்து ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள் ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில் ஒர் இரவு தங்கியிருந்த இடத்திலிருந்து அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் இனி என்ன செய்வது? என்று சோகப்பட கூரத்தாழ்வார் சுவாமி அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் சொல்லவா என விண்ணப்பித்தார். எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமானுஜர். ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதினார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான ஶ்ரீ பாஷ்யம் எனப்படுகிறது.

ராமாநுஜர் தம் இரண்டாவது காஷ்மீர் விஜயத்தில் ஶ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட சரஸ்வதி பீடத்துக்குச் சென்றார். அவரை சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து இறங்கி வந்து வரவேற்றார். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து தன் கையை நீட்டி உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய் இது பிரஷிப்தமன்று சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து இவருக்கு ஶ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கி வந்த லக்ஷ்மிஹயக்கிரீவர் விக்ரகத்தையும் ராமானுஜருக்குத் தந்தருளினார்.

இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமானுஜரின் பரம சீடராகி அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள் மந்திர தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக சூன்யம் வைத்தவர்கள் மீதே அந்த ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள் திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக நிர்வாணமாகத் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர்.

இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் மண்டியிட்டு இந்த பண்டிதர்களை மன்னித்து அருளவேண்டும் என்றார். மன்னா அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது அணுக வேண்டியவர் அவை அணுக முடியாத சுத்தன் ஆக இருந்தால் அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும் என்றார். ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம் ஶ்ரீபாததீர்த்தத்தைப் தெளிக்க அவர்கள் சித்த ஸ்வாதீனமடைந்து ராமானுஜரைச் சரணடைந்தனர். ராமானுஜரைக் கண்டு பிரமிப்பும் மரியாதையும் அடைந்த மன்னர் அவருக்கும் அவருடன் வந்த சீடர்களுக்கும் உயர்ந்த மரியாதைகள் செய்து அவர்களுடன் பல மைல்கள் நடந்து வந்து வழியனுப்பி வைத்தார்.

சரஸ்வதி கோவில் (சாரதா பீடமும் இது தான்) இன்றைய நிலை சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் நீலம் நதிக்கரையில் சாரதா என்னும் குக்கிராமத்தில் (ஶ்ரீநகரிலிருந்து 70 மைல் கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில்) மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007 ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை. பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக சர்வ ஞான பீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து சாரதா பண்டார் என்னும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும் பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆன்மீகம் அறிவுடமை அமைதி விளைந்த மண் உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம் வேதத்தை எதிர்ப்போர் பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது. காஷ்மீர் மீண்டும் பழைய பொலிவுடன் கலாசார பீடமாக மலர ஶ்ரீ லக்ஷ்மிஹயக்கிரீவரையும் ஶ்ரீ சரஸ்வதி தேவியையும் ஸ்ரீராமாநுஜரையும் நெஞ்சம் நெகிழப் பிரார்த்திப்போம்.


2 thoughts on “ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் காஷ்மீரில்

  1. SundarShantha Reply

    வணக்கம். 4 பாரா இராமனுஜர் சொல்ல கூரத்தாழ்வார் எப்படி எழுதியிருக்க முடியும், கூரத்தாழ்வார் நினைவில் அல்லவா சூத்திர பாஷ்யம் இருந்தது?

    • Saravanan Thirumoolar Post authorReply

      4 ஆவது பாராவில் சொல்லப்பட்ட கருத்தின்படி கூரத்தாழ்வார் நினைவில் சூத்திர பாஷ்யம் இருந்த‍து. சூத்திர பாஷ்யத்திற்கான வியாக்யான உரையை ராமானுஜர் எழுதினார் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply to SundarShanthaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.