இரட்டைக் கோயில்

ஸ்ரீ மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் ஸ்ரீ மல்ல கோவில் என்ற இரட்டைக் கோயில்கள் ஒன்றாக இருக்கிறது. இக்கோயில் அசலேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு முக்கிய கோவில்கள் மற்றும் மூன்று சிறிய மண்டபங்கள் உள்ளன. இந்த இரட்டைக் கோயிலின் இரண்டு கர்ப்ப கிரகங்களுக்கும் பொதுவான மண்டம் உள்ளது. மண்டபத்தின் வடக்கிலும் தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கிழக்கு சன்னதியின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. ஒரு பெரிய நந்தி கிழக்கு சன்னதிக்கு எதிரே உள்ளது. கிழக்கு சன்னதி இரண்டிலும் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கு சன்னதி தற்போது காலியாக உள்ளது. இந்தக் கோயில் கிபி 1054 இல் கட்டப்பட்டது. அனந்தசயனா விஷ்ணுவின் சிற்பம் உள்ளது. கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் சுடி. இக்கோயில் கல்வெட்டுகளில் சுண்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ரிஷபாரூடர்

காளையுடன் இருக்கும் சிவனின் உருவத் திருமேனி ரிஷபாரூடர் என்று அழைக்கப்படுகிறது. காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தருகின்றார். இடம் அருள்மிகு கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோயில் திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம்.

நாகபைரவர்

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டத்தில் உள்ள போங்கிர் கோட்டைக்கு செல்லும் படிகளுக்கு அருகில் இச்சிலை உள்ளது. பச்சை நிற பாசால்ட் சிற்பம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையடிவாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணியின் போது தோண்டி எடுக்கப்பட்டு தற்போது போங்கிர் கோட்டையின் அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ளது. 850 ஆண்டுகள் பழமையான சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்த இந்த சிற்பம் புவனேஸ்வரி கோயிலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. நாக பைரவர் அஷ்ட பைரவர்களில் ஒருவராவார். சிவனின் எட்டு உக்கிரமான பைரவ அவதாரங்கள் எட்டு திசைகளையும் பாதுகாத்து கட்டுப்படுத்துகிறார்கள். நாக பைரவா தெற்கு திசையின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.

சுவர்ண ஆகார்ஷண பைரவர்

திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் உள்ள சுவர்ண ஆகார்ஸன பைரவர் தனது துணைவியான பைரவியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார்.

சோமாஸ்கந்தமூர்த்தி

சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தி. இந்த உருவில் சிவன் உமையம்மையுடன் கந்தனும் சேர்ந்து மூன்று கடவுளரும் கொண்டு அருள்பாலிப்பார். முருகர் அன்னை உமையம்மை மடியில் சிறு பிள்ளையாக அவளை ஒட்டியபடியே அமர்ந்திருப்பார். ஆனால் திருமழபாடியில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி சிற்பத்தில் முருகன் சிவன் மடியில் அமர்ந்திருக்கிறார். இச்சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இடம் அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி திருக்கோயில் திருமழபாடி அரியலூர் மாவட்டம்.

நான்கு தெய்வங்களுடன் சிவலிங்கம்

சிவலிங்க பாணத்தின் நான்கு பக்கங்கிலும் பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் சூரிய தேவரின் உருவங்கள் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கலத்திய ராஜஸ்தானை சேர்ந்ததாக கருதப்படும் இந்த சிவ லிங்கம் தற்போது அமெரிக்காவில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

உமாமகேஸ்வரர்

சிவன் மற்றும் பார்வதிதேவி. உமாமகேஸ்வரர் கோலத்தில் இயல்பாக அமர்ந்துள்ளனர். 5 – 6 ஆம் நூற்றாண்டு. இடம்: பரசுராமேஸ்வரர் கோவில் புவனேசுவர் ஒடிசா மாநிலம்.