சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.
ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.
