தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.
சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.
எல்லை இல்லாத இறைவனை அளப்பவர்கள் யாருமில்லை என்று திருமூலர் அருளியிருக்கிறார். அளக்க முடியாத இறைவனை சிற்பி தன்னுடைய சிற்பத்தில் காண்பித்து கற்பனையில் இறைவனின் அளவை மனிதர்களின் அறிவுக்கேற்ப புரிந்து கொள்ளும்படி செதுக்கியிருக்கிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் இறைவன் சன்னதிக்கு வெளியே இருக்கும் துவாரபாலகரின் காலடியில் ஒரு மரம். மரத்தில் ஒரு பாம்பு இருக்கும். அந்த பாம்பின் வாயில் யானை இருக்கும். யானை மிகவும் பெரியது. பாம்பின் வாயில் யானை என்றால் அந்த யானையையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அந்த பாம்பு ஒரு மரத்தில் இருக்கும். அப்படி என்றால் அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்த மரம் துவாரபாலகர் காலடியில் இருக்கிறது. அப்படி என்றால் துவாரபாலகரின் பாதம் எவ்வளவு பெரியது. பாதமே இவ்வளவு பெரியதென்றால் துவாரபாலகரது உருவம் எவ்வளவு பெரியது. அந்த துவாரபாலகர் தனது கையை கோயிலின் உள்ளே காட்டுகிறார். கோயிலின் உள்ளே இறைவன் இருக்கின்றார். அப்படி என்றால் இறைவன் எத்தனை பெரியவராக இருப்பார்.
சுகலன் என்னும் வேளாளனின் புதல்வர்கள் பன்னிருவர். தேவகுரு பிரஹஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி பன்றிக் குட்டிகளாக பிறந்தனர். காட்டுப்பகுதியில் பாண்டிய மன்னன் வேட்டையாடும் போது இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். தாயின்றி பசியால் வாடிய பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து பாலூட்டி அவர்களின் பசியைப் போக்கினார். பின்பு அவர்களுக்கு மனித உருவம் அளித்து பாண்டியன் அரசவையில் அமைச்சர்களாக ஆக்கி முக்தி அளித்தார். பெற்ற தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய சிவபெருமானின் பெருங்கருணை குறித்து பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். திருவிளையாடல் புராணத்தில் 45 ஆவது படலமாக உள்ளது. இச்சிற்பம் உள்ள இடம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் மதுரை.
ஹரிஹரன் என்பது சைவ வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாக உள்ள இறைவனின் திருவுருவம். இந்தத் திருவுருவம் சங்கரநாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றது. வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். 4 அடி உயரமுள்ள இந்த சிற்பம் உள்ள இடம் கோவா ஸ்ரீ மஹாலசா நாராயணி கோயில்.
சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு இரண்டு முறைதான் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஒருவர் நடனமாடிக் கொண்டே இருந்தால் அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாது. சதாசர்வ காலமும் நிற்காமல் நடனமாடும் நடராஜரின் முகத்தை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அலங்காரமானது செய்யப்படுகிறது.
அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஒருமுறை வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது மரத்தடியில் தவம் புரிந்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்துப் போட்டான். இதை ஆசிரமத்திலிருந்த முனிவரின் மகன் கண்டுவிட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட பரீட்சித்திடம் கோபம் கொண்டு என் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட நீ இன்னும் ஏழுநாளில் பாம்பு கடித்து இறப்பாய் என்று சபித்துவிடுகிறார். அதன்படியே பரீட்சித்து மகாராஜா ஏழாவது நாளில் கார்க்கோடகன் என்னும் பாம்பு கடித்து இறந்து விட்டார். அஷ்ட நாகங்களில் ஒருவனும் நாகங்களின் தலைவனுமான கத்துருவின் மகன்தான் கார்க்கோடகன்.
முனிவரின் மகன் இட்ட சாபத்தின் காரணமாக தன் தந்தை இறந்துவிட்ட தகவல் பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜயனுக்குத் தெரிய வந்தது. எனவே அவன் ஒரு யாகம் செய்து உலகத்திலுள்ள அனைத்து வகைப் பாம்புகளும் யாக அக்னியில் விழுந்து பொசுங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டான். அந்த யாக அக்னியில் விழாமல் கார்க்கோடகன் பாம்பு மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. தப்பிச் சென்ற கார்க்கோடகனால் தனக்கு ஆபத்து எதுவும் வரக் கூடாது என்பதற்காக ஜனமேஜயன் மகா விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாவிஷ்ணு சோழ மண்டலத்திலுள்ள காமரசவல்லி என்னும் தலத்தில் கார்க்கோடகனால் வழிபடப்பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வழிபட்டால் கார்க்கோடகனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறினார். அதன்படியே ஜனமேஜயன் காமரசவல்லிக்கு வந்து அருள்மிகு சௌந்தரேஸ்வரரை பக்தியுடன் வழிபட்டான். ஜனமேஜயனின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் இனி உன் வம்சத்துக்குக் கார்க்கோடகனால் எந்த ஆபத்தும் நேராது என்று வரம் கொடுத்ததுடன் அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்றும் அருள்புரிந்தார். ஜனமேஜயன் பூஜித்த இந்த ஈசனை கார்க்கோடகனும் பூஜித்ததால் ஈசனுக்கு கார்க்கோடகன் என்ற திருப்பெயரும் பெற்றது. இந்த சிற்பம் உள்ள இடம் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் காமரசவல்லி அரியலூர்.
முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.
பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.
சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. தாருகாவன முனிவர்கள் சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி நடத்தி அதில் இருந்து கஜசூரன் என்ற யானையை உருவாக்கி சிவபெருமான் மீது ஏவி விட்டனர். இறைவன் கஜசூரன் என்ற யானையின் தோலை உரித்து தனது மேல் போர்த்திக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தியாக நின்று தாருகாவன முனிவர்களின் அகங்காரத்தை அழித்து அவர்களுக்கு அருள் பாலித்தார். இவர் கரி உரித்த சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். கரி என்றாலும் யானை என்று பொருள். இந்த சிற்பம் உள்ள இடம் திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில் கடலூர் மாவட்டம்.
இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் முதல் சிற்பம் நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி. இரண்டாவது படம் எல்லோரா குகை கோயில் சிற்பம்