நந்தி பகவான் தன் சக்தியுடன் மனித உருவில்

நந்திகேஸ்வரரும் நந்திகேஸ்வரியும் மனித உருவில் சிவபெருமானின் மீது அசையாத பக்தியுடன் பாதுகாவலர்களாக கச்சபேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். புராணத்தின் படி சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது அதனைக் காண்பதற்கு நந்தி பகவான் மனித ரூபத்தில் காண விருப்பம் கொண்டு தனது சக்தியுடன் வந்து தரிசனம் செய்தார். இடம் பெரிய காஞ்சிபுரம்.

முக்கண் பைரவர்

உத்திரபிரதேசம் பரேலி மாவட்டம் அஹிச்சத்ரா என்னும் ஊரில் 3 ஆம் நூற்றாண்டில் சூலத்துடன் அருள்பாலித்த இந்த முக்கண் பைரவர் தற்போது அமெரிக்க நாட்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள LACMA அருங்காட்சியகத்தில் உள்ளார்.

ஈசன்

ஈசனின் சிலை கர்நாடக மாநிலத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது காலஹஸ்தி அருவி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் கல்ஹட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகத்திய முனிவர் தவம் இருந்துள்ளார். இடம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள கல்லத்திகிரியில் உள்ள கல்ஹட்டி நீர்வீழ்ச்சி.

மூன்று அம்சங்களுடன் தட்சிணாமூர்த்தி

உட்குடிகாசனத்தில் அமர்ந்தபடி அருளுவதால் யோக தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வீணை வைத்திருப்பதால் வீணா தாரா தட்சிணாமூர்த்தி என்றும் கையில் வியாக்யான முத்திரையில் இருப்பதினால் வியாக்யான தட்சிணாமூர்த்தி என்றும் மூன்று அம்சங்களின் கலவையாக அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் முன் வலது கை வியாக்யான முத்திரையினையும் பின் வலது கை அக்ஷரமாலையும் முன் இடது கையில் ஏடுகளை ஏந்தியும் பின் இடது கையில் வீணை ஏந்தியுள்ளார். தலையில் சடாமுடி தரித்து சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கிறார். இடது காதினில் சங்கபத்ர குண்டலமும் வலது காதினில் குண்டலமும் அணிந்துள்ளார். இடம் மைசூர் சாம்ராஜ் நகர் ஷம்புலிங்கேஸ்வரர் மலை. காலம் 9 ஆம் நூற்றாண்டு.

ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

சங்கில் சிவலிங்கம் நந்தி

சங்கில் சிவலிங்கம் நந்தி மற்றும் கணபதி வடிவமைக்கப்பட்டது. நுணுக்கமாக பொறிக்கப்பட்டுள்ள யாளியும் உள்ளது. தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் மாநகரின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பெருநகரக் கலை அருங்காட்சியகத்தில் (MET – The Metropolitan Museum Of Art) உள்ளது.

வீணாதரதட்சிணாமூர்த்தி

இந்தியாவின் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்சத்தில் குகைக் கோயில் உள்ளது. கிபி 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இக்கோயில். குடைவரை கோவில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் சன்னதியை கொண்டுள்ளது. குகையின் வெளிப்புறச் சுவர் சிவனின் முடிக்கப்படாத சிற்பம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகச்சிறிய பாறை குடைவரை ஆலயமாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் இருபுறமும் சிவன் மற்றும் பார்வதியின் முடிக்கப்படாத சிற்பங்களும் உள்ளன. கேரளாவின் ஆரம்பகால குடைவரை குகைக் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த குடைவரை குகைக் கோயில் 1965 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

சிவன் பார்வதி

கயிலையில் சிவன் தனது துணைவி பார்வதி தேவியுடன் அமர்ந்திருக்கிறார். ஒடிசாவில் இருந்த சிற்பம் தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.