ரெணபலி முருகர்

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் செல்லும் வழியில் பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோவில் உள்ளது. மூலவர் சிவ சுப்பிரமணியசுவாமி இவர் ரெணபலி முருகர் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார். தலவிருட்சம் மகிழம் மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இக்கோயிலின் சிறப்பு முருகரின் வேல் ஆகும். இந்த வேல் பற்றி திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று சொல்லி தன் சொற்பொழிவுகளில் எல்லாம் இந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகம் கோயிலில் அவர் புகைப்படத்தோடு உள்ளது. இரணபலி முருகன் கோயிலானது கட்டயத்தேவர் என்ற குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கிபி 1728-1735) முதலமைச்சரான வைரவன் சேர்வை என்பவரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலுக்கு கிபி 1736 இல் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி பெருவயல் கலையனூர் என்ற சிற்றூரை கொடையாக அளித்துள்ளார்.

ரெணபலி முருகர் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கி கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் இரண்டு குதிரை சிலைகள் உள்ளது. ஒரு குதிரையில் பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும் இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின் போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது. இராஜ கோபுரத்தைக் கடந்தால் ஜெயம் கொண்ட விநாயகள் உள்ளார். அவரைத் தாண்டினால் பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறை உள்ளது. கருவறையில் வள்ளை தெய்வாணையுடன் ரெணபலி முருகர் உள்ளார். கோயில் பிரகாரத்தில் இராமநாதசுவாமி பர்வதவர்தினி சண்முக சக்கரம் நாகர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதிக் கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. உற்சவர்களாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும் முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் மட்டுமே பக்தர்களால் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் கோயிலிற்கு கொண்டு வந்து அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு.

இராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் சேதுபதி ஆண்டு வந்த சமயம் அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர் சாத்தப்பன் என்கிற காத்த  வீரதளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி என்னை  வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே  கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார். இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால் இருவரும் மறுநாள் சந்தித்து கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் இரணத்துடன் (காயத்துடன்) திரும்பினார்கள். இறுதியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார். செய்தியை அறிந்த மன்னர் தன் அரண்மனையில் இராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக் கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களை கொடுத்தார். அதன்பின்னர் கோயிலிற்குப் பணிகள் விரைவாக நடைபெற்று கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும் விழாக்களும்  நடைபெறுகின்றன. வயிரவன் சேர்வை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால் இராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல்  தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் இரணம் (காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி ரெணபலி முருகன் என்றே  அழைக்கப்படுகிறார்.

கோயிலில் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பதினாரு நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திருச்செந்தூர் முருகரைப் போல் சிவசுப்ரமணிய சுவாமி சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இக்காட்சி இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10 ஆம் நாள் தேரோட்டமும் 11 ஆம் நாள் கோயில் தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாவில் 6 ஆம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை காணலாம். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டால் கிடைக்கும் என்பது கோயில் வரலாறு. இக்கோயிலில் இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும் செப்பேடுகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயர் பெருவயல் கலையனூர் என்றும் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரெணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.

பேளுக்குறிச்சி முருகன்

வேலவன் குறிச்சி கொல்லிமலையின் அடிவாரத்தில் உள்ளது. முருகனின் பெயர்களில் ஒன்று வேலவன். வேல் + அவன் = வேலவன். வேலே அவன்தான். முருகனின் ரூபமே வேல்தான் என்பதை இப்பெயர் குறிக்கும். ஒரு காலத்தில் இந்த கோயில் பழனியப்பர் கோயில் என்றும் கூகை மலை என்றும் அழைக்கப்பட்டது. படைப்புக்குரிய மூல மந்திரமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மாவிடம் முருகப்பெருமான் கேட்டார். பிரம்மாவால் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் பிரம்மாவை தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன் பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.

மூலவர் பழனியாண்டவர். பழனி மூல விக்ரஹத்தை உருவாக்கிய சித்தரான போகர் பழனி விக்ரஹத்தை உருவாக்குவதற்கு முன்பு கொல்லி மலையின் மூலிகைகளைக் கொண்டு ஒரு முருகரின் மூர்த்தியை உருவாக்கி இங்கு பிரதிஷ்டை செய்தார். எனவே இக்கோயில் பழனியை விட பழமையானது. இதனால் முருகர் பழனி அப்பா என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் நுழைவாயிலில் ஒரு சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் இரண்டு பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகளுக்குக் கீழே ஒரு பச்சை கல் உள்ளது. மேலும் இந்தக் கல்லில் அமர்ந்து தியானம் செய்பவர் தனது பிரார்த்தனைகளில் நினைத்ததைப் பெறுவார்கள். பழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும் எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. தீர்த்தம் யானைப்பாழி தீர்த்தம். மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை உள்ளது. இதற்கு யானைப்பாழி தீர்த்தம் என்று பெயர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது.

முருகன் வள்ளியைத் துரத்திச் சென்று திருமணம் செய்ய வேட்டைக்காரனின் வடிவத்தில் வரும் இடம் இது. மூலஸ்தானத்தில் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய திசையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தலையில் கொண்டை போல் முடி முடிச்சு போடப்பட்டிருக்கிறது. தலையில் கொன்றை மலர்கள் உள்ளன. அவர் தனது கால்களில் காலணிகளை அணிந்துள்ளார். அவரது இடது கை இடுப்பில் இருந்தாலும் ஒரு சேவல் இருக்கிறது. பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும் அவனை முருகர் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளார். அவரது வலது கை வஜ்ர வேல் வைத்திருக்கிறார். வேலின் உயரம் மூர்த்தியை விட உயரமாக இருக்கிறது. பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நள்ளிரவு நேரத்தில் சித்தர்கள் இங்கு பூஜைகள் செய்ய வருவதால் இரவு 11:50 மணிக்கு அபிஷேகம் பின் அலங்காரம் முடிந்ததும் சன்னதியின் கதவுகள் மூடப்படுகிறது. அனைத்து பக்தர்களும் வெளியே காத்திருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் நள்ளிரவில் கதவுகள் திறக்கப்படும் போது சித்தர்கள் பூஜை செய்த சான்றுகளாக அலங்காரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இருக்கும். இது இன்றும் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் இறைவனின் மூக்கு கன்னம் மற்றும் மார்பின் நுனியிலிருந்து வியர்வை வெளிப்படுகிறது.

கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கியவர் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவறாக விளங்கினார். இவரது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி என பல இடங்களில் சிவாலயங்களில் கட்டியிருக்கிறார். பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலையும் அவர்தான் கட்டினார். ஔவையார் இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஔவையார் தனது எந்தவொரு பயணத்திற்கும் முன் இங்கு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்புகள் உள்ளது. இந்த முருகப்பெருதான் மீது அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். அகத்தியர் பூஜை செய்துள்ளார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஞானமலை முருகப்பெருமான்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாதையில் மங்கலம் என்னும் ஊரில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலையில் கோவிந்தச்சேரி என்னும் கிராமத்தில் இந்த ஞானமலை உள்ளது. ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்குச் செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. வள்ளி மலையில் வள்ளியினை மணமுடித்த முருகப்பெருமான் திருத்தணிக்குச் செல்லும் வழியில் இங்கு எழுந்தருளினார். இந்த தலம் அக்காலத்தில் இருந்தே பல முனிவர்களாலும் ரிஷிகளாலும் வழிபடப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் ஞானசித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். வழியில் கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. வழியில் ஞான தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மலை உச்சியில் ஒரு முகம் நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். வள்ளியை கரம் பிடித்த முருகப்பெருமான் வள்ளி மலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் உள்ள இந்த மலையில் வள்ளியோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார்.

அருணகிரிநாதர் தன் கர்ம வினையால் கீழான வாழ்வில் சிக்கிச் சீரழிந்து பின் தற்கொலை செய்ய திருவண்ணாமலை வந்தபோது முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார். அப்போது முருகப்பெருமானின் பாதங்களை அருணகிரிநாதர் கண்டார். அருணம் எனும் திருவண்ணாமலை மலை (கிரி) யில் ஞானம் பெற்றவர் என்பதால் அருணகிரிநாதர் என பெயர் பெற்றார். அதன் பின் அவர் ஒவ்வொரு முருகப்பெருமான் தலங்களுக்கும் சென்று பாடினார். அப்படி ஒவ்வொரு தலமாக செல்லும் போது இந்த தலத்துக்கும் வந்தார். அங்கேதான் அவருக்கு திருவண்ணாமலையில் முருகப்பெருமான் பாதம் கண்ட காட்சி நினைவுக்கு வந்து மீண்டும் முருகப்பெருமான் திருப்பாதம் காண ஆவல் கொண்டு முருகரிடம்

அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது
அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே

என்று பாடலாகப் பாடி மன்றாடினார். அப்போது வந்த முருகப்பெருமான் அவர்முன் தோன்றி அவர் விரும்பிய அந்த பாதத்தை காண்பித்து அங்கே பதித்தும் வைத்தார். இதனை அருணகிரிநாதர் இத்தலத்தில் பாடிய தனது பாடல்களில் சொல்லியிருக்கிறார். முருகப்பெருமான் பாதம் பதிந்த ஒரே மலை இந்த ஞானமலை மட்டுமே. முருகரின் திருப்பாதம் ஞானத்தின் உறைவிடம். அந்த பாதம் இங்கு பதித்தபடியால் ஞானமலை என்று பெயர் பெற்றது. ஞானமலை திருப்புகழ் என அருணகிரியார் ஒன்றைப் பாடியதாக ஒரு கருத்து நிழவுகிறது. அந்த பாடல்கள் கொண்ட சுவடி கிடைக்கவில்லை. எனினும் திருப்புகழில் இந்த மலை பற்றிய குறிப்புகள் உண்டு.

கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த நிகழ்வு சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன் இடது புறம் மடி மீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில் அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார். இந்த சிற்பத்திற்கு குறமகள் தழுவிய குமரன் என்று பெயர். இந்தக் கோயிலின் வடமேற்கில் வள்ளி மலையும் வடகிழக்கில் திருத்தணிகையும் சம தூரத்தில் உள்ளது. இந்த மூன்று மலைகளும் சேர்ந்து ஒரு முக்கோண அமைப்பில் உள்ளது. திருக்கோயிலைச் சுற்றி விட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, காடுவெளி சித்தர் சமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அருள்காட்சிகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14 ஆம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டில் கோயிலின் திருப்பணி பற்றிய தகவல்கள் உள்ளது.

முருகப்பெருமானின் திருப்பாதம்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். மூலவர் சுப்பிரமணியர். உற்சவர் தண்டாயுதர். தீர்த்தம் வள்ளி தெய்வானை தீர்த்தம். ஊர் திண்டுக்கல் அருகில் சாணாா்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த திருமலைக்கேணி. புராண பெயர் மலைக்கிணறு. இக்கோயில் இரண்டு அடுக்காக அமைந்திருக்கிறது. மலை மீது ஒரு முருகரும் மலையின் கீழ் ஒரு முருகரும் அருள் பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் சக்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள மாமரத்தின் அடியில் அருணகிரியார் திருவுருவம் உள்ளது. இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தா் பல காலங்களுக்கு முன்னா் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளாா். அவருக்கென அருகில் தனிக் கோயில் உள்ளது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா் சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி மன்னா் இங்கு கோயில் எழுப்பினாா்.

மூலஸ்தானத்தில் முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. உடன் வள்ளி தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுகிறார்கள். கிணற்றில் வள்ளி தீர்த்தம் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம் மலைக்கேணி என்று பெயர் பெற்றது. கேணி என்றால் கிணறு என்று பொருள்.

மலையில் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால் முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார் கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கிலுள்ள ஆதி முருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே ஒரு துளையும் உள்ளது.

திருச்செந்தூர்முருகன் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதியின் மகத்துவம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது பன்னீர் இலை விபூதியாகும். ஒரு முறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில் பாடல் பாடுமாறு கேட்டார். அதற்கு அவர் நான் எம்பெருமானை மட்டுமே பாடுவேன் என்று கூறினார். இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமானை அப்போது அங்கு வந்த எம்பெருமான் கண்டார். முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை அறிந்த எம்பெருமான் ஆதிசங்கரரிடம் சென்று முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை நினைத்து பாடு என்று கூறினார். அதுபோலவே முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு பாடினார் ஆதிசங்கரர். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் எம்பெருமான் இருந்தார். எம்பெருமான் தான் முருகன் முருகன் தான் எம்பெருமான் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர் முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப் பச்சிலையில் (பன்னீர்இலை) வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியது.

தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

சோமஸ்கந்த மூர்த்தி

அரிய பழங்காலச் சிலை. அந்தச் சிற்பத்தில் இருக்கும் தன் சிறு குழந்தை கந்தனைப் பார்த்துக் கொள்ளும் அன்னை பார்வதி. சிவனின் உடையும் பார்வதியின் புடவையும் அலங்காரம் மிகவும் அருமை. இடம்: காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி கோயில்.

திருசெந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் தல புராணம் புத்தகம் PDF வடிவில் டவுண்லோடு செய்து கொள்ளும் வசதி இந்த பக்கத்தில் உள்ளது.

வேடுவ கோலத்தில் முருகன்

நமது சங்க இலக்கியம் சொல்லும் வடிவோடு பொருந்தக் கூடிய முருகனின் சிற்பம் ஒடிசாவில் உள்ளது. கொற்றவை சிறுவ பழையோள் குழவி என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்ட கொற்றவையின் மகனாக குறிப்பிடப்படும் வடிவம் ஒடிசாவில் உள்ளது. துர்க்கை என ஆகிவிட்ட கொற்றவை ஆதி குடிகளின் தெய்வமாய் திகழ்ந்து தற்போது துர்க்கை வடிவமாகி விட்டாள். அவளின் மைந்தன் முருகனும் அவ்வாறே. இந்த தொன்ம தொடர்ச்சி பழங்குடிகளின் பண்பாட்டில் இருப்பது சான்றாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இடம் சித்தேஷவர் கோவில். புவனேஷ்வர். ஒடிசா மாநிலம்.

கார்த்திகேயன்

ஒடிசாவின் கட்டாக் கலிங்கன் கட்டிடக்கலையில் லலித்கிரியின் கைவினைஞர்களால் காதி கல்லில் செதுக்கப்பட்ட கார்த்திகேயனின் சிற்பம். அவருடன் மயிலும் நாகமும் உள்ளது. இடம் பத்ரேஸ்வர மஹாதேவ் கோவில் மெஹங்கா ஒடிசா மாநிலம்.

அரோகரா என்ற சொல்லின் பொருள்

ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.