அசுரன் தாரகனுக்கு தாரகாக்ஷா, கமலாக்ஷா மற்றும் வித்யுன்மாலி என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இந்த அசுர இளவரசர்கள் பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் செய்து மகத்தான சக்தியின் வரத்தைப் பெற்றனர். பிரம்மா அவர்கள் மீது மகிழ்ச்சியடைந்து மாயாசுரனால் கட்டப்பட்ட தங்கம் வெள்ளி மற்றும் இரும்பு என ஒவ்வொன்றும் வானத்தில் சுழலும் ஒரு வான் கோட்டையை அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அவர்கள் ஒரு ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்றும், மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றை எரியூட்டக்கூடிய ஒரு அம்பு மூலம் மட்டுமே அழிக்க முடியும் என்றும் அந்த வரம் வழங்கினார். இந்த வரம் பெற்ற அசுரர்கள் உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தினார்கள். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று காக்குமாறு வேண்டினர்கள்.
சிவபெருமான் ஆணைப்படி விஸ்வகர்மா தேரின் சக்கரங்கள் சூரியனையும் சந்திரனையும் வைத்து பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் மற்றும் கூறுகளுடன் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாக்கி பிரம்மா சாரதியாக இயக்க ஒரு ரதம் ஒன்றை தயாரித்தார். மேருமலையை வில்லாகவும் வாசுகி பாம்பை நாணாகவும் வைத்துக் கொண்டு திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன் வெள்ளி இரும்பு கோட்டைகள் ஒரே இடத்தில் வந்து நிற்க மூன்று அசுரர்களும் சிவபெருமானுடன் போர் புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும் தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான் சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சிவபெருமான் லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை கவிழ்ந்தனர். திரிபுரத்தையும் எரித்ததால் சிவபெருமான் திரிபுராந்தகன் என்று அழைக்கப்பட்டார். இக்காட்சி எண் 16 எல்லோலா குகைக் கோயில்களில் கைலாசா கோயிலில் சிற்பமாக உள்ளது.