சக்தி பீடம் 9. கமலாம்பாள் – திருவாரூர்

சக்தி பீடத்தில் 9 ஆவது கோயில் திருவாரூர் கமலாம்பாள் கோயில் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும். அம்பாள் கமலாம்பிகை. வேறு பெயர்கள் அல்லியங்கோதை நீலோத்பலாம்பாள். உற்சவர் அம்பாள் அல்லியங்கோதை. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே திருவாரூருக்கு ஸ்ரீபுரம் கமலாபுரி கமலா நகரம் கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தனிக்கோயில் கொண்டு கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து தலங்களுள் இளம் பெண் பருவத்தினை இத்தலம் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை ஆத்ம தத்துவம் வித்யா தத்துவம் சிவ தத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி இடது கரத்தை இடையில் வைத்தும் நீலோத்பல மலரை வலக்கரத்தில் வைத்தும் வளர்பிறை சந்திரனை நெற்றியில் சூடியும் கங்கையையும் தலையில் தரித்து தவ யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறாள். க-கலைமகள் ம-மலைமகள் ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும் பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன. லலிதா ஸஹஸ்ரநாமம் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. லலிதா சஹஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக கமலாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். வார்த்தைகளுக்குள் சிக்காத வடிவழகி அம்பிகை. இங்கு அவள் இருவகை உருவங்களுடன் காட்சி அளிக்கிறாள். ஒன்று கமலாம்பிகை. மற்றொருவர் நீலோத்பலாம்பிகை. கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அம்பிகையின் அருகில் தோழி ஒருத்தி தனது தோளில் பாலமுருகனைச் சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலைத் தந்து இடது கரத்தில் பற்றியபடி நிற்கிறாள் அம்பிகை. அம்பாள் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில் ஐயப்பனும் அருள்பாலிக்கிறார். இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும் கமலாம்பாளையும் துதித்து முத்துசுவாமி தீட்சிதர் நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பாள் அம்பாளுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. கோயில் உருவங்கள் மற்றும் கட்டுமானம் அனைத்தும் ஸ்ரீவித்யா கருத்தின்படி கட்டப்பட்டுள்ளன. தலவிருட்சம் பாதிரிமரம். தீர்த்தம் கமலாலயம் சங்கு கயா வாணி தீர்த்தம்.

அம்மாள் இத்தலத்தில் இருவகை வடிவம் தாங்கி உலகத்து உயிர்களுக்கு அருள்பாலிக்கிறார். பராசக்தி மகாத்மியம் எனும் நூல் கமலாம்பிகையின் தவத்திற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. தர்மம் தழைத்தோங்கவும் சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவும் வீடு பேறு பெறவும் கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள். இக்கோயிலின் 2 ஆவது பிரகாரத்தில் வீற்றிருக்கும் நீலோத்பலாம்பாள் அறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளும் அன்னையாகத் திகழ்கிறார். இளைய மைந்தன் வேலவனின் கைபிடித்தபடி அருள்பாலிக்கிறாள். வறுமை நீக்கி பிணிகளைக் களைந்து மக்கட் செல்வம் அருளும் அன்னையாக விளங்கும் நீலோத்பலாம்பாள் இல்லற பகைமையைத் தீர்ப்பவராகவும் உள்ளார்.

திருவாரூர் கமலாம்பாள் கோயில் 9 ராஜ கோபுரங்கள் 80 விமானங்கள் 12 பெரிய மதில்கள் 13 மிகப்பெரிய மண்டபங்கள் 15 தீர்த்தக் கிணறுகள் 3 நந்தவனங்கள் 3 பெரிய பிரகாரங்கள் உள்ளது. 365 லிங்கங்கள் இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிக்கிறது. 100க்கும் மேற்பட்ட சன்னதிகள் 86 விநாயகர் சிலைகள் 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக இக்கோயில் உள்ளது. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள் முன்காலத்தில் திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கோயில்களின் சுற்றுப் பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால் திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள் அனைத்தும் பெரிய சன்னதிகள் அளவில் இருக்கிறது.

சதயகுப்தன் என்ற அசுரன் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இதனால் இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர்.  சிவன் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து நவக் கிரகங்களை காப்பாற்றினார். எனவே நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. நவகிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கிறதா என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. தியாகராஜர் கோயிலில் 86 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. 1. நடுக்கம் தீர்த்த வினாயகர் 2. மேற்கு கோபுரத்தின் அருகில் சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன் நிஜத்தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த மாற்றுரைத்த விநாயகர். 3. சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். 4. சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்று தான் திருவாரூர் முத்துசுவாமி  தீட்சிதர் வாதாபி கணபதிம் எனத்  தொடங்கும் பாடலை பாடினார்.

திருமால் மகாலட்சுமியுடன் பிள்ளைப் பேறு வேண்டி சிவபெருமானை பூஜித்தார். சிவபெருமான் அவருக்கு சிறிய மரகத லிங்கத்தை அளித்தார். திருமால் அந்த லிங்கத்தை தன் நெஞ்சில் வைத்து தினம் பூஜித்து வந்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார். அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் ஆரம்பித்தது. இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியுடன் இந்திரன் அதில் இருந்து தப்பினார். மன்னருக்கு ஏதேனும் கைமாறு செய்ய நினைத்த இந்திரன் அவருக்கு வரம் அளிப்பதாகக் கூறினார். இந்த வரத்தின் படி இந்திரனிடம் திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த மரகத லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். தேவர்கள் மட்டுமே வணங்கக் கூடிய விடங்க லிங்கத்தை ஒரு மானிடருக்கு அளிக்க விரும்பாத இந்திரன் தேவசிற்பி மயனை வரவழைத்து அதே போன்று 6 லிங்கங்களை செய்து அதனை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். முசுகுந்த சக்ரவர்த்தி அவை அனைத்தும் போலி என்பதை உணர்ந்து தனக்கு நிஜ லிங்கமே வேண்டும் என்று கேட்டார். வேறு வழியில்லாமல் நிஜ லிங்கத்தை மன்னரிடம் அளித்தார் இந்திரன். முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டார். தற்போது திருவாரூரில் திருமால் நெஞ்சில் வைத்து பூஜித்த வீதி விடங்க லிங்கமே உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தியாக உற்சவ மூர்த்தியாக, தியாகராஜப் பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இந்திரன் கொடுத்த மற்ற லிங்கங்கள் நாகப்பட்டினம் (சுந்தர விடங்கர்) திருக்குவளை (அவனி விடங்கர்) திருவாய்மூர் (நீல விடங்கர்) வேதாரண்யம் (புவனி விடங்கர்) திருக்காரவாசல் (ஆதி விடங்கர்) திருநள்ளாறு (நகர விடங்கர்) ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன.

சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்றிருக்கிறார். சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின் திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்றார். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த தலம் (கமலாபுரம்). கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர் முத்துசாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். நமிநந்திஅடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். விறன்மிண்ட நாயனார் நமிநந்திஅடிகள் நாயனார் செருத்துணை நாயனார் தண்டியடிகள் நாயனார் சுழற்சிங்க நாயனார் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 150 வது தேவாரத்தலம் இத்தலம் ஆகும். பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாகும். சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. காண முக்தி சிதம்பரம். இறக்க முக்தி காசி நினைக்க முக்தி அண்ணாமலை. கேட்க முக்தி அவிநாசி. பிறக்க முக்தி திருவாரூர் ஆகும். இவ்வூரின் புராண பெயர்கள் க்ஷேத்ரவரபுரம் ஆடகேசுரபுரம் தேவயாகபுரம் முசுகுந்தபுரம் கலிசெலா நகரம் அந்தரகேசுபுரம் வன்மீகநாதபுரம் தேவாசிரியபுரம் சமற்காரபுரம் மூலாதாரபுரம் கமலாலயபுரம்.

மூலவர் தியாகராஜர் வன்மீகநாதர் புற்றிடங்கொண்டார் புற்றிடங்கொண்ட நாதர் மூலட்டானமுடையார், பூங்கோவில் புண்ணியனார். சிவன் சுயம்புலிங்கமாக பாம்புப் புற்றில் தானே விரும்பி எழுந்தருளி குடிகொண்டிருக்கும் தலம். இவர் தலையில் பிறைச் சந்திரனை சூடியுள்ளார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள் 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பார்கள். தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும் பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது. தியாகராஜருக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) காலை 8.30 11மணி இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப் பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில் பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். தியாகேசப் பெருமான் ராஜாதி ராஜர் ஆகையால் அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை அவருடன் 1. அருளிப்பாடியார் 2. உரிமையில் தொழுவார் 3. உருத்திரப் பல்கணத்தார் 4. விரிசடை மாவிரதிகள் 5. அந்தணர்கள் 6. சைவர்கள் 7. பாசுபதர்கள் 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார். உற்சவர் தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி.

சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும் திருச்சிற்றம்பலம் எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை திருச்சிற்றம்பலம் என்று சொல்வதுண்டு. ஆனால் சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால் இந்தக் கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால் எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமன் சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார்.

திருவாரூர்த் தேரழகை ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன் மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த் திருவிழா நடந்து வருவதை அறியலாம். தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. ஆழி என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால் மகனையே தன் தேர்க் காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1748 இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள் சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப் பைகளும் 50 டன் எடையுள்ள மூங்கில்களும் சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை. 1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் 2 நாட்கள் எரிந்தது. பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்று விட்டது. 1970 ஆம் ஆண்டு வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

திருவாரூர்க் கோயிலுக்குள் சென்று விட்டால் குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும். இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப் பட்டதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும் பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. சோழர்கள் மட்டுமல்லாமல் பல்லவர்கள் பாண்டியர்கள் விஜயநகர் தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. இரண்டாம் ராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும் வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும் திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன் புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர் பழையாறை தஞ்சாவூர் கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல் தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல் தேர் அமைந்துள்ளது. கல் தேரை இன்றும் காணலாம். திருவாரூர் கோவில் அளவும் தெப்பக்குளமும் ஒரே அளவு கொண்டதாகும்.

இக்கோவிலைப் பற்றி 330 தேவாரப் பாடல்களும் திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் ஆகியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன. கோவில் குளம் வீதி தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தனித்தனியாக தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் கல்தூண்களால் ஆனது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் தனது பாடல்களில் பாடியுள்ளார். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின் போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

One thought on “சக்தி பீடம் 9. கமலாம்பாள் – திருவாரூர்

  1. K Balaji Reply

    அனைத்து விவரங்களும் அடங்கிய அற்புதமான இந்தப் பதிவுக்கு நன்றி 🙏

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.