சக்தி பீடம் 22. மகாலட்சுமி – கோலாப்பூர்

சக்தி பீடத்தில் 22 ஆவது கோயில் மகாலட்சுமி கோயிலாகும். இக்கோயில் மகாராஷ்டிரவில் உள்ள கோலாப்பூரில் அமைந்துள்ளது. புராணபெயர் குளபுரம் ஆகும். கோலாசுரன் என்ற அரக்கனை மகாலட்சுமி நவ துர்க்காக்களின் உதவியுடன் எதிர்த்து அழித்ததால் இவ்வூர் கோலாப்பூர் எனப் பெயர் பெற்றது. கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று கர வீர மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது. இக்கோயில் கரவீர சக்தி பீடமாகும். பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் தனக்குள் எடுத்துக் கொள்ள இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலட்சுமியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர் கர என்றால் கை என்று பொருள். வீர் என்றால் வீரம் என்று பொருள். ஆகவே கரவீர சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் மகாராஷ்டிரத்தில் மராட்டிய பாணியில் கட்டப்பட்டது. சில நூல்களின் படி சக்தி பீடங்களில் சிறப்புமிக்க ஆறு சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். மகாலட்சுமி கோலாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம். இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று கோயில் புராண வரலாறு தெரிவிக்கிறது. இந்தக் கோவிலின் பெயர் திருமாலின் மனைவியாக விளங்கும் மகாலட்சுமியின் ஆகும். மகாலட்சுமி தனது துணைவரான திருமாலுடன் வாசம் செய்து மூல தெய்வமாக அருள் பாலிக்கிறாள். கோயில் 634 ஆம் ஆண்டு கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டிய கோவிலாகும்.

கோயிலில் அம்பாள் கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது சுமார் மூன்று அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்து மேற்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறாள். மகாலட்சுமிக்கு மிகவும் அரிதான கரும் ரத்தினக் கல்லால் ஆன காப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் எடை சுமார் 40 கிலோ கிராம் அளவாகும். மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு மற்றும் சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பட்டுள்ளது. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும் வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும் இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடது கரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். மகாலட்சுமியின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் உள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனமான சிங்கத்தின் உருவச் சிலை உள்ளது. மேற்கு சுவர்ப் பகுதியில் ஒரு ஜன்னல் அமைந்துள்ளது. அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று தேவியின் பாதங்களை பூஜை செய்து வணங்கிச் செல்கிறது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும். முதல் நாளன்று சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும் இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும் மூன்றாம் நாள் தேவியின் முகத்திலும் விழுகின்றன. கோலாப்பூர் மகாலட்சுமிக்கு ₹.17 கோடி மதிப்புள்ள தங்கத்திலான புடவை உள்ளது. முக்கிய விழாக்காலங்களில் அணிவிக்கப்படுகிறது.

மகாலட்சுமி கருவறைக்கு எதிரில் கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் உள்ளன. கோயில் பிரகாரத்தில் விஷ்ணு, கோகர்ணேஸ்வரர், கவுரி சங்கர், சனீஸ்வரர், முரளிதரர், கால பைரவர், சிம்மவாஹினி, துளஜா பவானி, மஹா சரஸ்வதி, மஹா காளி, தத்தாத்ரேயர், காசி விஸ்வேச்வரர், அகத்தியர், லோபா முத்திரா தேவி, பஞ்ச காப்கா தேவி, இலக்குமா பாயி சந்நிதிகள் அமைந்துள்ளன. வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள் சூரியன் மகிஷாசுரமர்த்தினி, விட்டல் ரகுமாயி, சிவன், விஷ்ணு, துளஜா பவானி, காளி, சரஸ்வதி, பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், அனுமனுடன் ராமர் மேலும் பல தெய்வங்கள் உள்ளார்கள். கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகே சத்ய நாராயணர் சந்நிதி உள்ளது. இவற்றில் சில சிலை வடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும். சில சிலைகள் சமீபத்தில் நிறுவியவை ஆகும். இந்தக் கோயிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் என்ற குளம் உள்ளது. இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோயில் உள்ளது. மகாதுவாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்கள் உள்ளது. கோயிலைச் சுற்றி 50 சிறு கோயில்களும் ஊர் முழுவதிலும் 3000 கோயில்களும் உள்ளன. மகாலட்சுமி கோயிலுக்கு இடது புறத்தில் மாகாளி கோயில் உள்ளது. இதற்கு எதிரில் கங்கை மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.

முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய மகரிஷி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் நான்கு வேதங்கள், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம், ஆயுர்வேதம், ஜோதிடம், தர்ம அர்த்த மந்திரங்களை கற்றுணர்ந்தவராக விளங்கினார். ஒருநாள் அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து முக்தி அடைய எண்ணினார். இதுகுறித்து நாரத மகரிஷியின் ஆலோசனையை வேண்டினார். முக்தி அடைய தவம் மேற்கொள்ள தகுந்த இடத்தையும் குறிப்பிடுமாறு நாரத மகரிஷியை கேட்டுக் கொண்டார். அதற்கு
நாரத மகரிஷி அவரிடம் கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள சிவபெருமான் நடத்திய திருவிளையாடல் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

சிவபெருமானுக்கும் மகாலட்சுமிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆதிகாலத்தில் தான் வசித்து வந்த கரவீரத்தலமே சிறந்தது என்று மகாலட்சுமியும் தான் உறையும் காசித் தலமே சிறந்தது என்று சிவபெருமானும் வாதிட்டனர். அப்போது திருமால் ஒரு தராசைக் கொண்டு வந்து ஒரு தட்டில் காசித் தலத்தையும் மற்றொரு தட்டில் கரவீரத் தலத்தையும் வைத்தார். கரவீரத்தலம் இருந்த தட்டு தாழ்ந்தது. காசித் தலம் இருந்த தட்டு உயர்ந்தது. இதனால் கரவீரத்தலமே உயர்ந்தது என்று திருமால் கூறினார். இதற்கான காரணத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படி சொல்லுங்கள் என்று திருமாலை கேட்டுக் கொண்டார் சிவபெருமான். உடனே திருமால் காசித் தலம் முக்தியை மட்டுமே அருளும். கரவீரத்தலம் இந்த உலக வாழ்க்கைக்கு தேவையான புத்தி முக்தி இரண்டையும் அருளும் என்பதால் கரவீரத்தலம் காசியை விட உயர்ந்தது என்றார். சிவபெருமான் உடனடியாக தனது கணங்களுடன் கரவீரபுரத்தை அடைந்தார். சிவனைத் தொடர்ந்து மணிகர்ணிகை, பிரயாகை, கங்கை முதலான தீர்த்தங்களும் கரவீரத்தலத்தை அடைந்தனர். கரவீரத்தலம் அருகே 10 கிமீ தொலைவில் உள்ள ஜெயந்தி நதி, கோமதி நதி இணையும் இடத்தில் பஞ்சகங்கா என்ற திருநாமத்துடன் கங்கை வசிக்கத் தொடங்கினாள்.பாண்டுரங்கர் முதலான தேவர்களும் துர்வாசர், நாரத மகரிஷி போன்றவர்களும் கரவீரத்தலம் வந்தடைந்தனர். இந்த இடத்திற்கு அருகே தான் துவாரகாபுரி நிர்மாணம் ஆனது. இத்தகவல்களை நாரத மகரிஷி மார்க்கண்டேய மகரிஷிக்கு கூறியதால் மார்க்கண்டேய மகரிஷிக்கு ஒரு தெளிவு பிறந்தது. உடனே தேவி கோலாப்பூர் மகாலட்சுமி அருள்பாலிக்கும் கரவீரத்தலத்துக்கு விரைந்து வந்து அங்கு கடும் தவம் புரிந்தார்.

ஒரு சமயம் பராசர முனிவர் திருமாலை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தின் பயனாக அன்னை மகாலட்சுமி அவர் முன் தோன்றினார். திருமாலை நோக்கி தவம் புரிந்ததற்கு அன்னை மகாலட்சுமி தோன்றியதால் பராசரர் அவரிடம் எந்த வரத்தையும் கேட்காமல் அவரை அலட்சியம் செய்தார். சற்று நேரத்தில் திருமால் பராசரர் முன் தோன்றினார். திருமாலைப் போற்றிப் புகழ்ந்த பராசரர் தனக்கு பிள்ளை வரம் அளிக்குமாறு வேண்டினார். அப்போது திருமால் பராசரரை நோக்கி நான் வேறு மகாலட்சுமி வேறு அல்ல. என் மீது கொண்ட பக்தி காரணமாக மகாலட்சுமியை அலட்சியம் செய்தபடியால் அது என்னையும் அலட்சியம் செய்தது போலாகும். அதனால் உன் மனைவியை விட்டுப் பிரிந்து பிறகு அவருடன் இணைந்து வாழும்போதுதான் உனக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்று அருளினார். அதன்படி பராசர முனிவர் தன் மனைவி சத்தியவதியைப் பிரிந்தார். சத்தியவதி செம்படவனின் மகளாக வளர்ந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகே இவர்களின் மகனாக வேத வியாசர் அவதரித்தார்.

சிவபெருமான் மீது பக்தி கொண்டு காசி தலத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட அகத்திய முனிவர் ஒருசமயம் சத்யும்ன முனிவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அகத்திய முனிவரை சத்யும்ன முனிவர் சரியாக உபசரிக்காததால் கோபம் கொண்ட அகத்தியர் அவரை யானை வயிற்றில் பிறக்கும்படி சபித்தார். தனக்கு அகத்தியரின் சாபம் கிடைத்து விட்டதே என்று வருந்திய சத்யும்ன முனிவர் இதுகுறித்து சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் அகத்திய முனிவரை காசி தலத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தார். அதன்படி நாரத முனிவரை அழைத்து ஏதேனும் செய்து அகத்திய முனிவரை காசி தலத்தில் இருந்து வெளியேறுமாறு பணித்தார்.

சிவபெருமானின் கட்டளைப்படி நாரத முனிவர் மேரு மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்தார். தான் தான் பெரியவன் என்பதைக் காட்டிக் கொள்ள விந்திய மலை நீண்டு வளர்ந்தது. அதன் காரணமாக ஒரு பக்கம் அதிக வெப்பம் (வெளிச்சம்) கொண்டதாகவும் மறு பக்கம் குளிர்ந்த (இருள்) பகுதியாகவும் மாறியது. இதுகுறித்து அகத்திய முனிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அகத்திய முனிவர் வருவதை அறிந்த விந்திய மலை அவரால் சபிக்கப்படலாம் என்று அஞ்சி தன் உயரத்தை பழையபடி குறைத்துக் கொண்டு அவருக்கு வழிவிட்டது. அகத்திய முனிவரும் தான் தென்பகுதிக்கு சென்றுவிட்டு வரும்வரை இப்படியே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால் தென்பகுதியில் இருந்து திரும்பும்போது களைப்பு ஏற்பட்டு நடக்கு முடியாமல் அமர்ந்தார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து தட்சிணகாசியான கோலாப்பூரில் தங்கினாலே அது உத்தர காசியில் வாழ்ந்ததற்குச் சமம் என்று அருள் புரிய அகத்தியரும் கோலாப்பூர் கரவீரபுரத்தை அடைந்தார்.

ஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்கும். அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக் கொண்டு தெய்வீகப் பாடல்கள் பாடிக் கொண்டு துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும். இரண்டாவது சேவை காலை 8 மணிக்கு தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும். இதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை பூஜைகள் நடைபெறும். இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும். தேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் பௌர்ணமி நாட்கள் அன்றும் மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும். பிற்காலத்தில் பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள் இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்துள்ளார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன. பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால் சில சிற்பங்கள் சிதிலமடைந்து உள்ளது.

நவராத்திரி விழாக்காலத்தில் முதல் நாள் கலச பூஜையுடன் ஆரம்பிக்கப் பட்டு ஒவ்வொரு நாளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் மகாலட்சுமி காட்சியளிப்பாள். நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப் புடவைகள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இன்றும் வருகிறது. அஷ்டமி அன்று இரவு அம்மன் தூங்காமல் ஊர் முழுவதும் சுற்றி வந்து அருள்பாலிக்கிறாள். மறு நாள் விடியற் காலை தேவி ஸப்தஸதி பாராயணத்துடன் ஹோமம் செய்யப்பட்டு பூரணாஹூதியுடன் நவராத்திரி உற்சவம் முடிவடைகிறது. காந்தம் இரும்புத் துகள்களை தன் வசம் ஈர்ப்பது போல மகாலட்சுமி வானவர்கள் முனிவர்கள் மண்ணகத்தார் அனைவரையும் இத்தலத்தை நோக்கி வரச் செய்கிறாள். இன்டர்நெட் மற்றும் சர்வர் சரியாக இயங்கும் போது கீழ்கண்ட வலைதள லிங்கின் வழியாக மகாலட்சுமியின் தரிசனத்தை நேரடியாக காணலாம்.

https://www.mahalaxmikolhapur.com/shri-ambabai-mahalaxmi-live-darshan.php

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.