சக்தி பீடத்தில் 12 ஆவது கோயில் மங்களாம்பிகை கோயிலாகும். இக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மந்திரிணி சக்தி பீடமாகும். அம்பாளின் உடற்பாகம் 51 சக்தி வடிவ பாகங்களாக 51 தலங்களில் காட்சியளிக்கின்றன. இதில 50 தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள் 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். கோயில் விமானம் மங்கள விமானம். இறைவி மங்களாம்பிகை. வினாயகர் மங்கள விநாயகர். தீர்த்தம் மங்கள தீர்த்தம். புராணபெயர் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. ஆகவே இத்தலம் பஞ்ச மங்கள சேத்ரம் எனப்படுகிறது.
இறைவியின் பெயர் மங்களாம்பிகை ஆகும். மந்திரபீட நலத்தாள் என்ற பெயரும் உள்ளது. தேவி விஷ்ணுவைப் போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களத்தை பொழிகிறாள். மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு மங்களத்தை அருளுகின்றாள் ஆகையால் மங்களநாயகி என்றும் சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும் தம் திருவடிகளை சரணடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர் பெற்றாள். திருஞானசம்பந்தர் இவளை வளர்மங்கை என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால் மொத்தம் 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபீடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்பாளின் வலது கையில் சாத்திய தாலிக் கயிறுகளை பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஊர் கும்பகோணம். புராண பெயர் திருக்குடமூக்கு திருமங்களக்குடி. தலவிருட்சம் வன்னி.
தீர்த்தம் மகாமகம் குளம் பொற்றாமரை தீர்த்தம் வருண தீர்த்தம் காஸ்யப தீர்த்தம் சக்கர தீர்த்தம் மாதங்க தீர்த்தம் மற்றும் பகவத் தீர்த்தம் (காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்நானத் தலங்கள்) என கோயிலுக்கு வெளியே ஏழு தீர்த்தங்கள் உள்ளது. மங்கள குள தீர்த்தம் நாக தீர்த்தம் குர தீர்த்தம் ஆகிய மூன்று கிணறுகள் மற்றும் சந்திர தீர்த்தம் சூரிய தீர்த்தம் கௌதம தீர்த்தம் மற்றும் வராக தீர்த்தம் ஆகிய நான்கு குளங்களும் கோயிலுக்குள் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணி கோவிலுக்கும் நடுவில் உள்ளது.
கும்பகோணம் ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை பூமி குழிந்து தாங்குக என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. இத்திருவிழாவின் போது கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி குமரி பயோடினி சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுகின்றனர். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச் சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத் திருவிழாவும் சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கிமீ தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம் ஆனியில் திருமஞ்சனம் ஆடியில் பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பூரம் பங்குனித் திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. திருவிழாக் காலங்களில் கோயில் தெய்வங்களை ஏற்றிச் செல்வதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட ஐந்து தேர்கள் கோயிலில் உள்ளன.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 89 வது தேவாரத்தலம் இக்கோயில் ஆகும். மூலவர் சிவலிங்க வடிவில் ஆதிகும்பேசுவரர் அமுதேசுவரர் குழகர் கற்பகநாதேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும் மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். இங்கு மூலவருக்கு அபிசேகம் கிடையாது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. உலகம் பிரளய காலத்தில் அழிந்த போது உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான் பிரம்மா மூலம் படைப்புக் கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். அந்த கும்பமானது பிரளய காலம் முடிந்ததும் உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்திருந்த போது கும்பமானது இத்தலத்தில் ஒதுங்கியதால் இந்த ஊருக்கு கும்பகோணம் என்று பெயர் ஏற்பட்டது. இறைவன் கும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றார். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர்.
இராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால் பலி பீடம் கொடி மரம் தொடர்ந்து நந்தி தேவர் உள்ளார். முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் காமதேனு பவலிங்கம் சர்வ லிங்கம் ஈசான லிங்கம் பசுபதி லிங்கம் ருத்ர லிங்கம் உக்ர லிங்கம் பீம லிங்கம் மகாலிங்கம் தட்சிணாமூர்த்தி சற்று தள்ளி வலஞ்சுழி விநாயகர் பிட்சாடனர் முருகன் அட்சயலிங்கம் சகஸ்ரலிங்கம் அன்னபூரணி கஜலட்சுமி மகாலட்சுமி கோஷ்டத்திலுள்ள பிரம்மா சரஸ்வதி அஷ்ட புஜ துர்கை நவநீத விநாயகர் கிராத மூர்த்தி பைரவர் கால பைரவர் ஜுரகேஸ்வரர் சாஸ்தா மகான் கோவிந்த தீட்சிதர் நாகாம்பாள் ஆகியோர் உள்ளனர். நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகத்துடன் ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.
கோயிலில் வேடமூர்த்திக்கு சன்னதி உள்ளது. சிவபெருமான் வேடர் வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இந்த சன்னதி உள்ளது. முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது பிரம்மா தனது படைப்புத் தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் இந்த இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது. கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே கும்பேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாஇலை தர்ப்பை உறி வில்வம் தேங்காய் பூணூல் முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக் கோயில்களாக விளங்குகின்றன. மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.
இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய கோயில் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் தஞ்சாவூர் நாயக்கர்களின் விஜயநகர ஆட்சியாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட பதினாறு தூண்கள் கொண்ட மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்தக் கோயில் பற்றிய புராண கதைச் செய்திகளை காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். இந்திரன் அஷ்டதிக்கு பாலகர்கள் காமதேனு கார்த்தவீரியன் சுவர்ணரோமன் காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்று பாடுகிறார். ஏழாம் நூற்றண்டில் வாழ்ந்த நாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. புரந்தர தாசர் தனது சந்திரசூடா சிவசங்கர பார்வதி ரமணா பாடலில் கும்பேஸ்வரரைப் போற்றி ஒரு பாடலை இயற்றினார். அப்பாடலில் கும்பபுர வசனு நீனே என்று குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.
சக்தி பீடத்தில் 11 ஆவது கோயில் மகாகாளி உஜ்ஜையினி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ருத்ராணி சக்தி பீடமாகும். தேவியின் உதடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சிவபெருமான் திரிபுரங்களை எரித்து அசுரர்களை வெற்றி கொண்ட இடம் என்பதால் உஜ்ஜையினி (வெற்றித்தலம் என்று பொருள்) என்று பெயர் பெற்றது. மேலும் சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் இந்த நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக் கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான் எனவும் வரலாறு உள்ளது. புராண பெயர்கள் அவந்திகா அவந்தி அவந்திபூர் அவந்திபுரம் என பல கால கட்டத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகாகாளி மங்கள சண்டி என்ற பெயரில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். சுடரும் ஜ்வாலையை மகுடமாய் தாங்கி பூத வேதாள கனங்களின் அதிகாரியாக உடுக்கை நாகம் கபாலம் வீரவாள் சூலம் ஏந்தி வீராசனமாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்வாள். தலமரம் ஆலமரம். இதற்கு சித்திவடம் என்று பெயர். இம்மரம் பல நூறு வருடங்களாகச் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. தீர்த்தம் சிப்ராநதித் தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம். இந்த சிப்ரா நதிக்கரையில் பார்வதி தேவியால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆலமரத்தின் கீழ்தான் குழந்தையாக இருந்த முருகப் பெருமான் வளர்ந்தார். இந்த நதிக்கரையின் அருகில்தான் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது இந்த தீர்த்தம் என்று அக்கினி புராணம் குறிக்கிறது.
கருட புராணத்தில் முக்தி தலங்களாக போற்றப்படுபவை ஏழு. அவை துவாரகா அயோத்யா வாரணாசி ஹரித்துவார் மதுரா காஞ்சி மற்றும் அத்தலமான உஜ்ஜையினி கோயிலும் ஒன்றாகும். 12 ஜோதிர் லிங்கத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவ வைணவ புத்த மற்றும் சமண மதத்தினருக்கு மிக முக்கியமான யாத்திரை தலம். இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். அனைத்து கோயில்களிலும் ஒரு தடவை பூஜித்த பொருள்களை மீண்டும் பயன்படுத்தி பூஜிப்பதில்லை. ஆனால் இந்த கோயிலில் பூஜித்த பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் மீண்டும் உபயோகிப்பது வழக்கமாக இருக்கிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அமிர்தம் சிந்திய இடங்களுள் இத்தலமும் ஒன்று. துவாபர யுகத்தில் சாந்தீப முனிவரிடம் பகவான் கிருஷ்ணர் பலராமர் சுதாமர் குசேலன் ஆகியோர் இத்தலம் இருந்த இடத்தில்தான் கல்வி பயின்றார்கள். மகாபாரத காலத்தில் இந்நாட்டை ஆண்ட இளவரசர்கள் கௌரவர்கள் பக்கம் நின்று மகாபாரதப் போரில் யுத்தம் புரிந்தனர். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியுள்ளார். அந்த இடத்தில் இப்போது ராமர் காட் என்னும் குளியல் கட்டம் உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர்.
காளி கோயில்களில் ஆத்யகாளி மகாகாளி மகாகாளி தசமுகி பத்ரகாளி மங்கலகாளி உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பல பெயர்களில் காளிதேவி அழைக்கப்படுகிறாள். காளிகளில் மிகவும் புராதனமாக விளங்குபவள் உஜ்ஜைனி நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி ஆவாள். ருத்ரம் என்றால் ஆவேசம் என்று பொருள். உக்கிர சக்தியைக் கொண்டு ஆவேசமாக இருப்பாள் இந்த அம்பிகை. அம்பிகையின் ஆவேசத்தை மாற்றி அம்பிகையின் அருகில் ஆதிசங்கரர் யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்த சொரூபியாக மாற்றினார். அன்னை அசுரர்களை அழிக்கும் ஹரசித்தி தேவியாகவும் மகாகாளியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அசுர குணங்களை அழித்து மங்களம் அருளும் மங்கள சண்டியாகவும் பத்ர என்றாலே சாந்தம் அமைதி சாந்தத்தையும் அமைதியையும் கொடுக்கும் பத்ர காளியாகவும் விளங்குகிறாள். மகாகாளியின் அருளைப் பெற்றவர்களை எவராலும் வெல்ல முடியாது. கவிஞர்கள் புலவர்கள் உபாசகர்கள் சக்கரவர்த்திகள் மந்திரவாதிகள் போன்றவர்கள் விரும்பி வழிபட்ட தெய்வம் மகாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம் புலமை ஏகச்சக்ராதிபத்தியம் மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள்.
கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும் இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர். மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது. மூலவர் சிவபெருமான் மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. ஒரு காலத்தில் நள்ளிரவு இரண்டு மணியளவில் சுடுகாட்டு சாம்பலை கொண்டு வந்து மகாகாளேஷ்வரருக்கு பஸ்மார்த்தி என்று சொல்லப்படும் சாம்பல் அபிஷேகம் செய்து வந்தார்கள். இப்பொழுது அந்த அளவிற்கு இல்லாமல் சம்பிரதாயத்திற்கு சிறிதளவு சாம்பலால் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்தத் தலத்தில் உள்ள காளிதேவி புராணப் பெருமையும் புகழும் பெற்றவள். காளிதாசனுக்கு அன்னை அருள்புரிந்த வரலாறு ஒரு சான்று. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூடன் ஒருவன் அமைச்சனின் சூழ்ச்சியால் மன்னன் மகளை திருமணம் முடிக்க நேர்கிறது. தன் கணவன் சகல கலைகளிலும் வல்லமை பெற்றவனாக இருப்பான் என்று எண்ணி அகம் மகிழ்ந்தாள் அரச குமாரி. ஆனால் சில நாட்களில் அவனுடைய உண்மையான ரூபம் வெளிப்பட்டு தனக்கு கணவனாக வந்தவன் மூடன் என்று அரச குமாரிக்குத் தெரிகிறது. தன் கணவன் படிப்பறிவு இல்லாதவன் என்பதை உணர்ந்த ராஜகுமாரி பெரும் துயரில் ஆழ்ந்தாள். நாட்டை ஆளும் தனக்கு நாயகனாக வந்தவன் எழுத்தறிவில்லாதவனாக இருந்தால் எல்லோரும் ஏளனம் செய்வார்களே என்று வேதனை அடைந்தாள். இதற்கு ஒரு வழி தேடினாள்.
மகாகாளி அன்னை தனக்கு விருப்ப தெய்வம் என்றும் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் ஊர் எல்லையில் இருக்கிறாள் அவளிடம் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாருங்கள் எனக் கூறி அனுப்பினாள். அரசியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகாகாளி அன்னையை நோக்கி கடும் தவத்தை மேற்கொண்டான் அவன். களங்கமில்லாத அவனுடைய வேண்டுதலைக் ஏற்ற காளி அவன் முன்னே தோன்றி அவன் நாவில் தன் சூலத்தினால் எழுதி ஈடு இணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அவன் கேட்டதற்கிணங்க தன் வாய் தாம்புலத்தை வாயில் உமிழ்ந்து அவனை உலக மகாகவியாக்கினாள். சரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அவனுக்கு அளப்பரிய ஞானத்தை வழங்கினாள். மாகாளி அவனுக்கு சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அருள்புரிந்தாள். காளிதாசன் எழுதிய வடமொழி நூலான சியாமளா தண்டகத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மாகாளியின் தலைமுதல் பாதம் வரையிலான கேசாதி பாத வர்ணனை இடம் பெற்றுள்ளது. மாகாளியின் அருளால் மூடனாக இருந்தவன் பின்னாளில் கவிச் சக்கரவர்த்தியாக மாறி காளிதாசன் என்கிற அழியாப் புகழினைப் பெற்றான்.
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் விலிமை இழந்து நின்றார்கள். தேவர்கள் ஏராளமானோர் இறந்த போது கவலை கொண்ட இந்திரன் விஷ்ணுவை அணுகி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்கு விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் இழந்த வலிமை அனைத்தையும் பெறலாம். ஆனால் அந்த பாற்கடலை கடையக்கூட தற்போது தேவர்களுக்கு வலிமை இல்லை. ஆகவே அசுரர்களோடு சேர்ந்து பாற்கடலை கடையுங்கள் என்று அறிவுறுத்தினார். இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். அசுரர்கள் ஒப்புக் கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள். அப்போது கடலிலிருந்து பல வகையான பொருட்கள் வெளிவந்தன. காமதேனு வச்சிராயுதம் கற்பக விருட்சம் என்று பல பொருட்கள் கிடைத்தது. அப்போது ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே விஷத்தைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள். அது நிலத்தில் விழக்கூடாது என்று தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் கையிலே எடுத்து வாயிலே போட்டு விழுங்கி விட்டார். அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தாள். சிவன் பார்வதியின் செய்கையைப் பொருட்படுத்தவில்லை. பார்வதியோ கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள். உடனே சிவன் தலையிலிருந்து மாகாளி பிறந்தாள்.
சிவனின் உச்சியில் இருந்து பிறந்ததால் இவளை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளுக்கு வாந்திபேதி பெரியம்மை சின்னம்மை வலிப்பு ஆகிய வியாதிகளை போக்கும் சக்தியைக் கொடுத்தாள். அவளுக்கு நிறைய வரமும் கொடுத்தாள். உன்னை வணங்குபவர்களுக்கு வெப்பத்தினால் வரும் வெப்ப நோய்கள் வராது. உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரம் கொடுத்தாள். உச்சினிக்குத் துணையாக பச்சைவேதாளம் கறுப்பன் மோகினி ஆகியோரையும் படைத்தாள். உச்சினிமாகாளி பார்வதியிடம் வேறு சில வரங்களும் வாங்கினாள். பின் கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்தாள். அங்குள்ள ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள்.
இங்கு சிவபெருமான் மகாகாளிக்கு 32 வேதாந்த ரகசியங்களை கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை அர்ச்சகர் ஒருவர் மறைவாக இருந்து அதனை கேட்டார். அதனால் அவருக்கு சிவபெருமான் அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படி சாபம் கொடுத்தார். பின் சாப விமோசனமாக விக்கிரமாதித்தன் என்ற மன்னன் இங்கு வருவான். அவனால் சாபம் நீங்கும் எனவும் கூறி அருளினார்.
விக்ரமாதித்யன் ஆண்ட இந்த உஜ்ஜயினி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த போபால் இந்தோர் அருகில் உள்ள அழகான சிறிய ஊர். உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் தனது நண்பனும் மந்திரியுமான பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடினர். விக்கிரமாதித்தன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பட்டியிடம் தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான். பட்டி காட்டுக்குள் சென்றான் பல இடங்களில் அலைந்தான். கடைசியில் ஒரு சுனையைக் கண்டான். பட்டி சுனையில் தண்ணீர் எடுத்த போது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான். ஆனால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுனையிலிருந்து எடுத்து வந்த தண்ணீரைக் விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான். அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தன் உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது. அப்போது உலகத்தையே மறந்து தூங்கினான். தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்.
உச்சினிமாகாளி கனவில் வந்தாள். அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதாகவும் தனக்கு இங்கு ஒரு கோவில் கட்டு என்றும் அருளினாள். விக்ரமாதித்ய மன்னன் விழித்தான். தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். பட்டி அரசே அந்தச் சுனையில்தான் தெய்வீக மணம் கமழுகிறது. அங்கேயே கோவில் கட்டுவோம் என்றான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டி உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான் பட்டி. கோவிலுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்தான் விக்ரமாதித்யன். தங்கக் கட்டிகளையும் ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன. தனது விருப்ப தெய்வமாக உஜ்ஜயினி மகாகாளியை வழிபட்டு வந்தான். அவனுக்கு போரில் வெற்றி பெற தேவையான அனைத்தையும் உஜ்ஜயினி மகாகாளி அவனுக்கு அருள் புரிந்தாள்.
விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் காளி. காளிதேவியின் அருளை தனது குருவின் மூலம் கேட்டு அறிந்த விக்கிரமாதித்தன் சர்வ வல்லமையும் பெற நினைத்து தன்னையே பலி கொடுக்க தீர்மானித்தான். அவன் தலை ஈட்டி முனையில் படும்போது மாகாளி தோன்றினாள். விக்கிரமாதித்தனிடம் இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லி கேள்வி கேட்கும். அந்த கேள்விக்கு பதில் சொல்லி அதை வென்று அடிமைப்படுத்தினால் உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும் எனக் கூறி அருளினாள். அதன்படி விக்கிரமாதித்தனும் காட்டில் வாழ்ந்த ஆறு மாத காலத்தை சரியாக பயன்படுத்தி அந்த வேதாளத்தின் கதைகளை கேட்டு பதிலை சொல்லி அதனை வென்று பல உதவிகளைப் பெற்று நாட்டை வளப்படுத்தினான். இவ்வாறே வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்ன வரலாறு நடந்தது. சிவனருளால் காளியின் வழி காட்டலில் அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.
ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். மகாகாளியின் அருளால் சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடு முப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வரம் தந்து அனுப்பி வைக்கிறான். பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி நீ 1000 ஆண்டுகள் அரசனாக வாழ வரம் வாங்கிவிட்டாய். விக்கிரமாதித்தனுடன் 1000 ஆண்டுகள் வழவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டி மாகாகாளியை சரணடைந்து தனது பக்தியினால் 2000 ஆண்டுகள் வாழும் வரம் வாங்கினான். இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்தது. இதனால் இருவரும் கவலை அடைந்தார்கள். இருவரும் தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஒரு யோசனை கூறினார். ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி ஆறு மாதம் காட்டிற்குள் சென்று வாழ்வது என்ற யோசனை சொன்னான். இதனால் வரத்தின்படி 1000 வருடங்கள் அரசனாக வாழ்வான். 1000 வருடங்கள் காட்டில் வாழ்வான். ஆக மொத்தம் இரண்டாயிரம் வருடங்கள் விக்கிரமாதித்தனும் வாழ்வான்.
விக்கிரமாதித்தன் இந்த யோசனையின் படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற முறைப்படி வாழ்ந்து வந்தான். அப்போது காட்டிற்கு செல்லும் போதெல்லலாம் மாகாகாளியும் அவனுடன் செல்வாள். விக்கிரமாதித்தன் வாழ்ந்து வந்த இடம் மற்றும் அவன் தங்கிய இடத்திலெல்லாம் மாகாளியும் தங்கியபடியால் அங்கெல்லாம் மகாகாளியின் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இப்படித்தான் இந்தியா இலங்கையில் மகாகாளிக்கு பல கோயில்கள் வந்தது. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
விக்கிரமாதித்தன் தனது இறுதிக் காலம் முடிந்த பிறகு உஜ்ஜயினி மகாகாளி அவளுக்கு பிடித்த இடத்தில் சென்று இருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே முறையாக பிரசன்னம் பார்த்தான். அதன் வழிகாட்டுதலின்படி வேதவிற்பனர்கள் பூஜகர்கள் பூஜைகள் செய்து மூலப்பொருட்கள் வைத்து பச்சை கலசத்தை உருவாக்கி அம்மனை ஆவாகனம் செய்து அருகில் இருந்த கடலில் விட்டனர்.
சமுத்திரத்தில் விடப்பட்ட கலசமானது பல இடங்களை சுற்றி இறுதியாக ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் ராமேஸ்வரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆற்றாங்கரை என்னும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தனர். இதை அறிந்த சேதுபதி சமஸ்தான சிப்பாய்கள் சமஸ்தானத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற சேதுபதி மன்னர் அந்த கலசத்தை மீட்டு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வைக்குமாறு ஆணையிட்டார். ராமநாதசுவாமி திருக்கோவில் வைத்த பிறகு கோவிலுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது. மேளதாளங்கள் ஓசை கேட்பது சலங்கை கட்டி ஆடுவது போல் ஓசைகளும் கேட்பது போன்று தொடர்ந்து நடைபெற தொடங்கியது. கோவிலில் பணிபுரிந்தவர்கள் மன்னரிடம் நடப்பதைப் பற்றி கூறி கலசம் வந்ததில் இருந்து இப்படி நடைபெறுவதாக தெரிவித்தனர். உடனடியாக மன்னர் கோவில் வேதவிற்பனர்கள் ராஜகுருமார்களை வைத்து பூஜை செய்து அந்த கலசத்தை பற்றிய பிரசனம் பார்த்தான். பெரும் தேசத்தினை ஆண்ட விக்ரமாதித்தன் மன்னன் வழிபட்ட தெய்வமான உஜ்ஜயினி மகாகாளி என்று தெரிய வந்தது.
இந்த உக்கிரமான மகாகாளியை சாந்தப்படுத்தி அமைதி வாய்ந்த அம்மனாக இருக்க என்ன செய்யலாம் என ராஜகுருமார்களிடம் கேட்டார்கள். அதற்கு ராஜகுருமார்கள் ராமநாதர் சன்னதிக்கு எதிரே ஆலயத்தினனை உருவாக்கி அங்கே மகாகாளியை பிரதிஷ்டை செய்தால் சாந்தமாக இருப்பாள் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமிக்கு எதிரே அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு பின் இருந்த பிள்ளையார் கோவில் அருகில் மகாகாளிக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். இங்கு இருந்து ஒரே நேரத்தில் உஜ்ஜயினி மாகாகளியையும் ராமநாத சுவாமியையும் வழிபட முடியும். ராமநாதசுவாமி மற்றும் உச்சயினி மகாகாளி கருவறையும் பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் சரிசமமாக அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலையானது சற்று கழுத்து பகுதி மட்டும் வலதுபக்கமாக வளைந்து காணப்படும் அது ஏனென்றால் உச்சியினை காளியம்மன் ராமநாதசுவாமியை பார்க்கும் படியும் இருந்தால் சாந்தமாக இருக்கும் என்பதால் அவ்வாறு இருக்கும். மேலும் நான்கு திசைகளிலும் ராமநாதசுவாமி கோவிலை காக்கும் தெய்வங்கலாக கிழக்கு பகுதியில் உஜ்ஜயினி மாகாளி அம்மனும் தெற்குப் பகுதியில் நம்பு நாயகி அம்மனும் மேற்கில் துர்க்கை அம்மனும் வடக்கு பத்திரகாளி அம்மனும் உள்ளனர்.
விக்ரமாதித்யன் காலத்திற்கு பிறகு பூஜைகள் சரியாக இல்லாமல் உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை. அப்போது ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து நம்பியான் என்ற பிராமணன் வந்தார். அவர் அயோத்திக் கோவிலில் பூசை செய்து வந்தவர். அயோத்தியில் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து குடிபெயர விரும்பினார். அப்போது அவர் கனவில் உச்சினிமாகாளி வந்தாள். என் கோவிலுக்கு வா என அழைத்தாள். அதனால் அவரும் இங்கு வந்தார். உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் அயோத்தி பிராமணனை அக்கோவிலின் பூசாரியாக நியமித்தனர். கோவிலையும் சரி செய்தார்கள். அவரும் மூன்று வேளைப் பூஜையைப் பக்தியோடு செய்து வந்தார்.
நம்பியானுக்கு ஏழு பெண் மக்கள் இருந்தனர். ஏழு பேருமே திருமணத்திற்குரிய வயதை எட்டியிருந்தனர். அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க நம்பியானுக்கு வசதியில்லை. அவருடைய ஏழ்மை அவரை வதைத்தது. அவர் தினமும் பூஜையின் போது உச்சினி தேவியிடம் அம்மா என் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டினார். ஒருநாள் காளி அவர் கனவில் தோன்றி கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது எடுத்துக்கொள். உன் புதல்விகளுக்குத் திருமணம் செய்து வை என்றாள். நம்பியான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்றார். அந்த இடத்தில் மண்ணைத் தோண்டினார். தங்கக் கட்டி கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்றார். தங்கத்தை விற்று பணத்தை வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும். பின் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்பது நம்பியானின் ஆசை. ஆனால் அவருக்கு அவ்வளவு பொன்னை எங்கு எப்படி விற்பதென்று தெரியவில்லை. ஆகவே அவர் அந்த நகரத்து வீதியில் தங்கக் கட்டியை விற்பதற்கு அலைந்தார். அவ்வளவு பெரிய கட்டியை விலை கொடுத்து வாங்க அங்கே யாருமில்லை. அப்போது அந்த வீதி வழியாக அதிகாரி ஒருவன் குதிரையில் வந்தான். அவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என்று நம்பியானைச் சோதனை செய்தான். பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான். அவன் திருடனோ என்ற ஐயம் அதிகாரிக்கு ஏற்பட்டது. அதிகாரி பிராமணனைத் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் அவனுக்கு வந்த வரலாற்றைக் கேட்டான். நம்பியான் நடந்ததை அப்படியே கூறினார்.
நம்பியான் கூறியதை சோதனை செய்ய அவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது. அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக் கொள்ள அதிகாரி ஆசைப்பட்டான். தன் கீழே உள்ள வீரர்களைக் கோவிலை இடித்துத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான். வீரர்கள் கோவிலை இடிக்க சுற்றி வளைத்தனர். அப்போது காளியின் படைகள் பயங்கரத் தோற்றத்துடன் கூச்சலிட்டபடி அதிகாரியின் வீரர்களை வளைத்து அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. அதிகாரியும் அவரது படைகளும் பயந்து அலறி கோவிலை விட்டு ஓடினார்கள். நம்பியான் காளியை வணங்கினான். அவன் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது. கோவிலை புதுப்பித்து பூஜை செய்தார்கள்.
ஒரு நாள் சிவபெருமான் காளிதேவியும் அமர்ந்திருந்த போது சண்டன் பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கே வந்து நந்தியைத் தாக்க முற்பட்டனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் காளிதேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை காளிதேவிக்கே உள்ளது என்றும் அவ்விரு அசுரர்களையும் அழித்து விடக் கட்டளையிட்டார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றாள் காளி. மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் மகாகாளி கோயில் தற்போது இடத்தில் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின்தொடர்ந்து வந்து போரிட்டார். அரக்கர்கள் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் ஏறி வந்து அவ்வரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். சிப்ரா நதிக்கரையில் அரசித்திதேவிக்கு தனியாக கோயில் இன்றும் உள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடக் கோயில்களில் 5 ஆவதாகவும் உள்ளது.
அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். குடிகள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருளத் தொடங்கினார்.
மகாபாரதத்தில் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண் குழந்தையை வசுதேவர் தூக்கி வந்தார். மாகாகாளியே அந்தப் பெண் குழந்தையாக பிறந்திருந்தார். அந்தப் பெண் குழந்தையைைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான். ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு மாகாளியாக மாறி உன்னை அழிக்க வந்த குழந்தை வேறு இடத்தில் பிறந்து விட்டது என்று சொல்லி மறைந்தாள்.
அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய தகவல்கள் இருக்கிறது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்பதில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி ஆகும்.
சக்தி பீடத்தில் 10 ஆவது கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் ஆகும். தந்திர சூடாமணி கூறும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் முதுகுப்பகுதி விழுந்த இடமாகும். குமரி சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் தென்முனையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அம்பாள் பகவதியம்மன் வேறுபெயர் துர்காதேவி மற்றும் தேவிகன்னியாகுமரி ஆகும். உற்சவ மூர்த்தி தியாகசெளந்தரி பாலசௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். தனது ஆயுதமாக ஜபமாலையை வைத்திருக்கிறாள். இக்கோவிலின் வழிபாடுகளையும் சடங்குகளையும் சங்கராச்சாரியார் அவர்கள் சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோயில் 2000 ஆண்டு பழமையானதாகும். பகவதியம்மன் கன்னியாகவும் இளமையுடன் குமரியாக உள்ளதால் இந்த ஊர் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றது.
மகாபாரதம் சங்க நூலான மணிமேகலை புறநானூறு நாராயண உபநிடதம் கிருஷ்ண யஜூர் வேதம் சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. 1892ல் இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். சுவாமி பிரமானந்தா (1863-1922) நிர்மலானந்தா (1963-1938) இக்காலகட்டங்களில் பகவதியம்மனுக்கு பணிவிடை செய்துள்ளனர். 1935 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து பகவதியம்மனுக்கு பூசை செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள். இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு மூலம் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவில் பாலக்காடு ஒட்டப்பாளையம் என்ற இடங்களிலும் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் வலுவான கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் ஐயப்பன் பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலின் பிரதான நுழைவு வடக்கு வாசல் வழியாகும். கோயிலின் கிழக்கு வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்.
புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள் மற்றும் வைகாசி விசாகம் 10 நாளும் திருவிழா நடைபெறும். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும். எழுத்தாளர் பெரிபிளசு 1060 – 1080 பகவதியம்மன் பற்றியும் பிரம்மச்சர்யம் பற்றியும் அன்னையின் வழிபாடு பற்றியும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிக்க மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஆறாவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார். அந்த பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். மீண்டும் மனைவி கருவுற்றிருந்தார். அவரது மனம் இப்போது அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக தன் மகள் வந்து என்னிடம் சொன்னால் மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.
தொழிலாளியின் மனைவிக்கு மீண்டும் பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. வாழ்க்கை வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால் இறந்து போய்விடலாம் என்பது அவரது எண்ணம். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளியின் கையில் ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார். சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு மாணிக்கக் கல் ஒன்று வந்தது. அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார் அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன் அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி.
அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண் இன்று காலை பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா? என்று கேட்டாள். காலையில் எழுந்ததும் நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். பிரசன்னம் பார்த்ததில் கனவில் தோன்றிய சிறுமி கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது. மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான் இன்றளவும் பகவதியம்மன் அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால் அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.
கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் கடுமையாக கொடுமைப் படுத்தினான். தேவர்களும் முனிவர்களும் தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ பாணாசுரன் கன்னிப் பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த சிவனின் அருகில் அமர்ந்துள்ள பார்வதியால்தான் உதவ முடியும் என்று வழி கூறினார். இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக் கூத்தாடினர் தேவர்களும் ரிஷி முனிவர்களும். அவர்களைப் பார்த்து அன்பர்களே தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் காலம் வந்து விட்டது. எனது தேவியானவள் பரத கண்டத்தின் தென்கோடியில் குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள் என்று ஆசி கூறினார் சிவபெருமான்.
அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். தேவி கடுந்தவமிருக்கும் போது ஒரு நாள் பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால் தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்று அழித்தாள். தேவர்கள் அனைவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். நாரதரும் பரசுராமரும் தேவியை கலியுகத்தின் இறுதி வரை பூமியில் இருக்குமாறு வேண்டினார்கள். இவர்களின் பிரார்த்தனையை தேவி ஏற்றுக் கொண்டாள். பரசுராமர் சமுத்திரத்தில் இந்தக் கோயிலைக் கட்டி தேவியின் சிலையை நிறுவினார். அன்று முதல் கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக பகவதி அம்மன் மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள்.
சக்தி பீடத்தில் 9 ஆவது கோயில் திருவாரூர் கமலாம்பாள் கோயில் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும். அம்பாள் கமலாம்பிகை. வேறு பெயர்கள் அல்லியங்கோதை நீலோத்பலாம்பாள். உற்சவர் அம்பாள் அல்லியங்கோதை. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே திருவாரூருக்கு ஸ்ரீபுரம் கமலாபுரி கமலா நகரம் கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தனிக்கோயில் கொண்டு கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து தலங்களுள் இளம் பெண் பருவத்தினை இத்தலம் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை ஆத்ம தத்துவம் வித்யா தத்துவம் சிவ தத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி இடது கரத்தை இடையில் வைத்தும் நீலோத்பல மலரை வலக்கரத்தில் வைத்தும் வளர்பிறை சந்திரனை நெற்றியில் சூடியும் கங்கையையும் தலையில் தரித்து தவ யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறாள். க-கலைமகள் ம-மலைமகள் ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.
இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும் பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன. லலிதா ஸஹஸ்ரநாமம் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. லலிதா சஹஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக கமலாம்பிகை விளங்குகிறார். ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். வார்த்தைகளுக்குள் சிக்காத வடிவழகி அம்பிகை. இங்கு அவள் இருவகை உருவங்களுடன் காட்சி அளிக்கிறாள். ஒன்று கமலாம்பிகை. மற்றொருவர் நீலோத்பலாம்பிகை. கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அம்பிகையின் அருகில் தோழி ஒருத்தி தனது தோளில் பாலமுருகனைச் சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலைத் தந்து இடது கரத்தில் பற்றியபடி நிற்கிறாள் அம்பிகை. அம்பாள் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில் ஐயப்பனும் அருள்பாலிக்கிறார். இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும் கமலாம்பாளையும் துதித்து முத்துசுவாமி தீட்சிதர் நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பாள் அம்பாளுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. கோயில் உருவங்கள் மற்றும் கட்டுமானம் அனைத்தும் ஸ்ரீவித்யா கருத்தின்படி கட்டப்பட்டுள்ளன. தலவிருட்சம் பாதிரிமரம். தீர்த்தம் கமலாலயம் சங்கு கயா வாணி தீர்த்தம்.
அம்மாள் இத்தலத்தில் இருவகை வடிவம் தாங்கி உலகத்து உயிர்களுக்கு அருள்பாலிக்கிறார். பராசக்தி மகாத்மியம் எனும் நூல் கமலாம்பிகையின் தவத்திற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. தர்மம் தழைத்தோங்கவும் சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவும் வீடு பேறு பெறவும் கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள். இக்கோயிலின் 2 ஆவது பிரகாரத்தில் வீற்றிருக்கும் நீலோத்பலாம்பாள் அறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளும் அன்னையாகத் திகழ்கிறார். இளைய மைந்தன் வேலவனின் கைபிடித்தபடி அருள்பாலிக்கிறாள். வறுமை நீக்கி பிணிகளைக் களைந்து மக்கட் செல்வம் அருளும் அன்னையாக விளங்கும் நீலோத்பலாம்பாள் இல்லற பகைமையைத் தீர்ப்பவராகவும் உள்ளார்.
திருவாரூர் கமலாம்பாள் கோயில் 9 ராஜ கோபுரங்கள் 80 விமானங்கள் 12 பெரிய மதில்கள் 13 மிகப்பெரிய மண்டபங்கள் 15 தீர்த்தக் கிணறுகள் 3 நந்தவனங்கள் 3 பெரிய பிரகாரங்கள் உள்ளது. 365 லிங்கங்கள் இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிக்கிறது. 100க்கும் மேற்பட்ட சன்னதிகள் 86 விநாயகர் சிலைகள் 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக இக்கோயில் உள்ளது. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள் முன்காலத்தில் திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கோயில்களின் சுற்றுப் பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால் திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள் அனைத்தும் பெரிய சன்னதிகள் அளவில் இருக்கிறது.
சதயகுப்தன் என்ற அசுரன் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இதனால் இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான். பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர். சிவன் என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து நவக் கிரகங்களை காப்பாற்றினார். எனவே நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன. நவகிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கிறதா என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. தியாகராஜர் கோயிலில் 86 விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. 1. நடுக்கம் தீர்த்த வினாயகர் 2. மேற்கு கோபுரத்தின் அருகில் சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன் நிஜத்தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த மாற்றுரைத்த விநாயகர். 3. சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். 4. சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்று தான் திருவாரூர் முத்துசுவாமி தீட்சிதர் வாதாபி கணபதிம் எனத் தொடங்கும் பாடலை பாடினார்.
திருமால் மகாலட்சுமியுடன் பிள்ளைப் பேறு வேண்டி சிவபெருமானை பூஜித்தார். சிவபெருமான் அவருக்கு சிறிய மரகத லிங்கத்தை அளித்தார். திருமால் அந்த லிங்கத்தை தன் நெஞ்சில் வைத்து தினம் பூஜித்து வந்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார். அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் ஆரம்பித்தது. இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியுடன் இந்திரன் அதில் இருந்து தப்பினார். மன்னருக்கு ஏதேனும் கைமாறு செய்ய நினைத்த இந்திரன் அவருக்கு வரம் அளிப்பதாகக் கூறினார். இந்த வரத்தின் படி இந்திரனிடம் திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த மரகத லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். தேவர்கள் மட்டுமே வணங்கக் கூடிய விடங்க லிங்கத்தை ஒரு மானிடருக்கு அளிக்க விரும்பாத இந்திரன் தேவசிற்பி மயனை வரவழைத்து அதே போன்று 6 லிங்கங்களை செய்து அதனை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். முசுகுந்த சக்ரவர்த்தி அவை அனைத்தும் போலி என்பதை உணர்ந்து தனக்கு நிஜ லிங்கமே வேண்டும் என்று கேட்டார். வேறு வழியில்லாமல் நிஜ லிங்கத்தை மன்னரிடம் அளித்தார் இந்திரன். முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டார். தற்போது திருவாரூரில் திருமால் நெஞ்சில் வைத்து பூஜித்த வீதி விடங்க லிங்கமே உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தியாக உற்சவ மூர்த்தியாக, தியாகராஜப் பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இந்திரன் கொடுத்த மற்ற லிங்கங்கள் நாகப்பட்டினம் (சுந்தர விடங்கர்) திருக்குவளை (அவனி விடங்கர்) திருவாய்மூர் (நீல விடங்கர்) வேதாரண்யம் (புவனி விடங்கர்) திருக்காரவாசல் (ஆதி விடங்கர்) திருநள்ளாறு (நகர விடங்கர்) ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன.
சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்றிருக்கிறார். சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின் திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்றார். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த தலம் (கமலாபுரம்). கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர் முத்துசாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். நமிநந்திஅடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். விறன்மிண்ட நாயனார் நமிநந்திஅடிகள் நாயனார் செருத்துணை நாயனார் தண்டியடிகள் நாயனார் சுழற்சிங்க நாயனார் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 150 வது தேவாரத்தலம் இத்தலம் ஆகும். பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாகும். சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. காண முக்தி சிதம்பரம். இறக்க முக்தி காசி நினைக்க முக்தி அண்ணாமலை. கேட்க முக்தி அவிநாசி. பிறக்க முக்தி திருவாரூர் ஆகும். இவ்வூரின் புராண பெயர்கள் க்ஷேத்ரவரபுரம் ஆடகேசுரபுரம் தேவயாகபுரம் முசுகுந்தபுரம் கலிசெலா நகரம் அந்தரகேசுபுரம் வன்மீகநாதபுரம் தேவாசிரியபுரம் சமற்காரபுரம் மூலாதாரபுரம் கமலாலயபுரம்.
மூலவர் தியாகராஜர் வன்மீகநாதர் புற்றிடங்கொண்டார் புற்றிடங்கொண்ட நாதர் மூலட்டானமுடையார், பூங்கோவில் புண்ணியனார். சிவன் சுயம்புலிங்கமாக பாம்புப் புற்றில் தானே விரும்பி எழுந்தருளி குடிகொண்டிருக்கும் தலம். இவர் தலையில் பிறைச் சந்திரனை சூடியுள்ளார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள் 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பார்கள். தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும் பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது. தியாகராஜருக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) காலை 8.30 11மணி இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப் பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில் பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். தியாகேசப் பெருமான் ராஜாதி ராஜர் ஆகையால் அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை அவருடன் 1. அருளிப்பாடியார் 2. உரிமையில் தொழுவார் 3. உருத்திரப் பல்கணத்தார் 4. விரிசடை மாவிரதிகள் 5. அந்தணர்கள் 6. சைவர்கள் 7. பாசுபதர்கள் 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார். உற்சவர் தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி.
சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும் திருச்சிற்றம்பலம் எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை திருச்சிற்றம்பலம் என்று சொல்வதுண்டு. ஆனால் சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால் இந்தக் கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால் எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமன் சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார்.
திருவாரூர்த் தேரழகை ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன் மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த் திருவிழா நடந்து வருவதை அறியலாம். தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. ஆழி என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால் மகனையே தன் தேர்க் காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1748 இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள் சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.
இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப் பைகளும் 50 டன் எடையுள்ள மூங்கில்களும் சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை. 1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் 2 நாட்கள் எரிந்தது. பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்று விட்டது. 1970 ஆம் ஆண்டு வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.
திருவாரூர்க் கோயிலுக்குள் சென்று விட்டால் குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும். இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப் பட்டதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும் பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. சோழர்கள் மட்டுமல்லாமல் பல்லவர்கள் பாண்டியர்கள் விஜயநகர் தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. இரண்டாம் ராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும் வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும் திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.
பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன் புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர் பழையாறை தஞ்சாவூர் கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல் தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல் தேர் அமைந்துள்ளது. கல் தேரை இன்றும் காணலாம். திருவாரூர் கோவில் அளவும் தெப்பக்குளமும் ஒரே அளவு கொண்டதாகும்.
இக்கோவிலைப் பற்றி 330 தேவாரப் பாடல்களும் திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் ஆகியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன. கோவில் குளம் வீதி தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தனித்தனியாக தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் கல்தூண்களால் ஆனது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் தனது பாடல்களில் பாடியுள்ளார். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின் போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.
சக்தி பீடத்தில் 8 ஆவது கோயில் திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் கோயில் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். அம்பாள் அபித குஜாம்பாள் வேறு பெயர் உண்ணாமுலையாள். தலமரம் மகிழமரம். தீர்த்தம் பிரம்மதீர்த்தம் சிவகங்கை. காசியில் இறக்க முக்தி திருவாரூரில் பிறக்க முக்தி சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம். அபீதகுஜாம்பாள் இத்தலத்தில் மலையை கிரிவலம் வந்து தவம் செய்தார். தவத்தின் பலனாக சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் இத்தலத்தில் காட்சி கொடுத்தார். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார்.
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
சர்வ சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவருக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் விவாதம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஜோதி ரூபமாக அங்கு தோன்றினார். அந்த ஜோதியை யார் என்று இருவரும் ஆராய திருமால் அடியையும் பிரம்மா முடியையும் காண சென்றார்கள். இருவராலும் அடி முடியை காண முடியவில்லை.ஔ அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியில் உள்ள திருவண்ணாமலையாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 233 வது தேவாரத்தலம் திருவண்ணாமலை ஆகும். மூலவர் அருணாசலேஸ்வரர் அண்ணாமலையார். லிங்கமே மலையாக அமைந்த மலை பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. கோயில்களில் சுவாமியை அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வார்கள் இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளார். இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
கோவிலின் திசைக்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளது. 5 ஆம் பிரகாரத்தில் இருந்து 4 ஆம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள் உள்ளது. 4 ஆம் பிரகாரத்தில் இருந்து 3 ஆம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2 ஆவது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்று வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை.
கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அடி முடி காணாத பரம் பொருள் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாதத்தை சுற்றியுள்ள துண்களில் விநாயகர் முருகர் கோதண்டராமர் சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. மலையின் உயரம் 2688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 360 தீர்த்தங்களும் பல சந்நிதிகளும் அஷ்ட லிங்கங்களும் உள்ளன. திருவண்ணாமலையில் அடிக்கு 1008 லிங்கம் அமைந்துள்ளது. மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் உள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் அதிகம் உள்ள கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள் 22 பிள்ளையார்கள் 306 மண்டபங்கள் 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்) 43 செப்புச் சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் என பல சிறப்புகள் அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம். எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். சேஷாத்திரி சுவாமிகள் ரமண மகரிஷி விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் ஆகும். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சி தருவார். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர் முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக் கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். அவன் வழிபட்டுவந்த காளிதேவி தான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர் அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்மறந்திருக்கையில் மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலில் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்) சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி) பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணலாம். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால் சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா. தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு. நெய் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
கார்த்திகை பௌர்ணமி தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து வந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து இரண்டு நிமிட தரிசன காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலை மீது இருப்பவர்கள் உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய் 1000 மீட்டர் காடாதுணி திரி 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். இவர்கள் ஏற்றிய இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால் பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுகின்ர். நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்த போது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்க பலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்ற கருத்து உள்ளது. அதாவது இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை) புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. ஒன்று இப்போது உள்ள சாலை வழி 2 வது மலையை ஒட்டிச் செல்லும் பாறைகள் முட்கள் மிகுந்த கடினமான பாதை.
அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள் அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்தார்.
மன்னர்கள் பலர் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் வல்லாள மகாராஜாவின் பக்தி காரணமாக பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கிபி 1291 இல் தொடங்கி கிபி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை கோவில் புராணமான கிபி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம் ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை வன்னி குலத்தினில் வரு மன்னா என்று குறிப்பிடுகிறது. வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான் வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால் ஊரில் தேவதாசிகள் யாரும் இல்லாததால் வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் இன்றும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.
மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதற்கான குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கிபி 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கிபி 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை கலை மற்றும் தமிழ் சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ஆம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ஆம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. 6 7 8 ஆம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ஆம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ஆம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11 ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.
முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ஆம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது. 12 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13 ஆம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கினார்கள். 14 ஆம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு தெற்கு மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ஆம் ஆண்டு முதல் 1374 ஆம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.
15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான். 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றினார். அவர் மற்ற மன்னர்கள் போல ஒன்றிரண்டு திருப்பணிகள் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம் ஆயிரம் கால் மண்டபம் இந்திர விமானம் விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை ஏழாம் திருநாள் மண்டபம் சன்னதியில் உள்ள 2 கதவுகள் வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது. உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் மற்றும் கதவுக்கு தங்க முலாம் பூசியது. உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது. அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது. நாகாபரணம் பொற்சிலை வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில. 1529 இல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590 இல் கட்டி முடித்தார்.
குறுநில மன்னர்கள் பலரும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பேய் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் திருமஞ்சன கோபுரம் வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 இல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள் இளவரசர்கள் இளவரசிகள் சிற்றரசர்கள் ஜமீன்தார்கள் பிரபுக்கள் அரசு பிரதிநிதிகள் சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ பாண்டிய பல்லவ ஹொய்சாள சம்புவராய விஜயநகர தஞ்சை மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.
கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ஆம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06.1903 மற்றும் 4.6.1944 மற்றும் 4.4.1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்திருக்கின்றனர். மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை பார்க்கிறோம் என்றால் அதற்கு பல மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. அருகிலேயே அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை கல்வெட்டில் உள்ளது.
அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதியில் திருஞானசம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல் இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு காலையில் எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது. இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இக்கோவில் தலபுராணம் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அண்ணாமலை வெண்பா குருநமசிவாயர் பாடியது.
திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தம் அகத்தியர் தீர்த்தம். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு சார்த்திய வேல் இன்றும் உள்ளது. விசுவாமித்திரர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகத்தியர் சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள் மகான்கள் அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர் அருணகிரிநாதர் ஈசான்ய ஞானதேசிகர் குரு நமச்சிவாயர் குகை நமச்சிவாயர் ரமணமகரிஷி தெய்வசிகாமணிதேசிகர் விருப்பாட்சி முனிவர் சேஷாத்ரி சுவாமிகள் இசக்கிசாமியார் விசிறி சாமியார் அம்மணியம்மன் கணபதி சாஸ்திரி சடைசாமிகள் தண்டபாணி சுவாமி கண்ணாடி சாமியார் சடைச்சி அம்மாள் பத்ராசல சுவாமி சைவ எல்லப்பநாவலர் பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவரும். விசுவாமித்திரர் பதஞ்சலி வியாக்ரபாதர் அகத்தியர் சனந்தனர் மேலும் பல சித்தர்கள் முனிவர்கள் வழிபட்டுள்ளனர். சுந்தரர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.
சக்தி பீடத்தில் 7 ஆவது கோயில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலாகும். ஊர் திருவானைக்கா. புராணபெயர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி அகிலாண்டநாயகி. அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிக்கிறார். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். அம்பாள் காலையில் லட்சுமியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன் அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். தலமரம் வெண்நாவல். தீர்த்தம் நவதீர்த்தங்கள் காவிரி இந்திரதீர்த்தம் சந்திரதீர்த்தம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலம் ஆகும். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வந்தாள். நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தனியாக தியானம் செய்ய முடியும்? என்று கேட்டாள். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஆம் தேவி நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக வருவான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன் என்றார். சிவன் கட்டளைக்காக அம்பிகை பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நதியில் நீர் எடுத்து மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ஜம்பு என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 60 வது தேவாரத்தலம் ஆகும்.
இக்கோயிலில் ஆரம்பத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்கரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி அந்த சக்கரத்தை பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். பிள்ளைகளான விநாயகர் முருகன் இருவரும் தனது தாயை சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். அகிலாண்டேஸ்வரியை நன்கு மலர்ந்த செண்பகப்பூ போல் வாசம் வீசுபவள். அவளின் மாணிக்கம் வைர மூக்குத்தி ஒளியில் இந்த உலகமே ஒளி பொருந்தி இருக்கிறது என்று சஹஸ்ரநாமம் பாடலில் வருகிறது. ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில் முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று பாடுகிறார்.
இக்கோயிலுக்கு வந்த வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள்வதற்கு அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.
சிவமும் சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் ஒரு திருவிளையாடலை இறைவன் நிகழ்த்தினார். பிரம்மாவிற்கு ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு ஸ்திரீ தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் என் வேடத்தில் வாருங்கள் என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன் அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.
கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன் மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில் மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில் மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக யானையும் சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.
திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரை மட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். முற்றிய கோடை காலத்திலும் காவிரி வறண்டிருக்கும் காலத்திலும் இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலம் ஆளும் நாயகியாக காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும் பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார். பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளது. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் உள்ளது. ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் உள்ளது. ஏகநாதர் என்பவர் மும்மூர்த்திகளும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறது.
மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. கோயில் பிரகாரத்தை கட்டி முடிக்க அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச் சித்தராக வந்து இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுத்தார். பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியது. இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது. இந்த வரலாறு கோயில் தல புராணத்தில் உள்ளது.
திருஆனைக்கா கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர் மீனாட்சியே செல்கின்றனர். சிவன் அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஜம்புகேசுவரருக்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்வது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் லிங்கத்திற்கு விபூதி காப்பிடப்படுகிறது.
முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக் கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகனும் காமத்தை அசுரத் தன்மைக்கு ஒப்பிடும் வகையில் காமத்தை ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனி பகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர். ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில் நான்காவது திருச்சுற்றில் உற்சவமும் தேரோட்டமும் நடைபெறும். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் உள்ளார்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம் ஜம்பு தீர்த்தக் கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.
தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள் விஜயநகர அரசர்கள் மதுரை நாயக்கர்கள் போன்றோரும் திருப்பணிகளை செய்திருக்கிறார்கள். சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்பிகை சிலந்தி யானை ஜம்பு முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.
சக்தி பீடத்தில் 6 ஆவது கோயில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி கோயிலாகும். ஊர் ராமேஸ்வரம். புராணபெயர் கந்தமாதனபர்வதம் திருவிராமேச்சுரம். அம்பாளின் பெயர் பர்வதவர்த்தினி. மலைவளர்காதலி என்ற பெயரும் உள்ளது. மலைவளர் காதலி என்று திருஞானசம்பந்தர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். சக்தி பீடங்களில் இத்தலம் சேதுசக்திபீடம் ஆகும். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளது. இந்த தீர்த்தங்கள் தேவிபட்டினம் திருப்புல்லாணி பாம்பன் தங்கச்சிமடம் மண்டபம் ஆகிய இடங்களில் உள்ளன.
அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி உள்ளனர். சந்தான விநாயகரும் சௌபாக்கிய விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமபிரானுக்கு கடலில் சேது பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன் நீலன் கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும் பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.
ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். அம்பாள் பக்தரான ராயர் செய்த இந்த உப்பு லிங்கம் பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டது. அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்தது.
பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர் சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதாலும் இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும் இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களைக் கொண்ட இம்மூன்றாம் பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும் வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. 22 தீர்த்தங்கள்
பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தலங்களில் இத்தலமும் ஒன்று. விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
ராம அவதார காலத்தின் தொன்மை மிக்கது ராமேஸ்வரம். ராவணனை அழித்துவிட்டு சீதையையும் மீட்டுத் திரும்ப அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ராமர். ராமரின் வன வாசத்திற்கான பதினான்கு ஆண்டுகளின் நிறைவும் நெருங்கியிருந்தது. அயோத்தி திரும்ப எண்ணிய போது பிரம்மாவின் பேரனும் பேரரசனுமான ராவணனைக் கொன்றது பாவம் என்று அந்த பாவத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக சிவபூஜை செய்ய நினைத்தார் ராமர். இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடலைத் தாண்டி ராமேஸ்வரம் நிலத்தைத் தொட்டதும் உடனடியாகச் சென்று இமயமலையிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரும்படி அனுமனுக்கு ஆணையிட்டார். வேகமாக அனுமன் பறந்தார். அனுமன் திரும்புவதற்கு தாமதமானது. பூஜை வேளை நெருங்கிக் கொண்டிருக்க அனுமன் இன்னமும் வராத நிலையில் ராமர் அனுமனுக்காக காத்திருக்க கடற்கரை மணலிலேயே சீதாதேவி சிவலிங்கம் பிடித்தாள். அந்தச் சிவலிங்கத்திற்கு ராமர் பூஜையை நிறைவேற்றும் வேளையில் இன்னொரு சிவலிங்கத்தோடு அனுமனும் வந்தார். இப்போதும் ஆஞ்சநேயர் கொணர்ந்த சிவலிங்கத்திற்குப் பூஜைகள் நடந்த பின்னரே மூலவருக்குப் பூஜைகள் நடக்கின்றன. ராமேஸ்வரம் மிகவும் தொன்மையான தலம். ராமர் இங்கு சிவபூஜை செய்வதற்கு முன்னரே சிவசாந்நித்யம் பெற்ற தலம் இது. காரணம் இங்கு அம்பிகையின் அருள்வாசம் வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. உருவமும் வடிவமும் கடந்த நிலையில் சிவனும் சக்தியும் இங்கு சஞ்சரித்திருந்தார்கள். எனவேதான், சிவபூஜைக்கு ஏற்ற இடம் என்று இதனை ராமர் தேர்ந்தெடுத்தார்.
சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாச்சல கவிராயர் எழுதிய சேது பர்வதவர்த்தினியை பிள்ளைத் தமிழில் அம்பாள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்று பத்து வித பருவங்களில் வர்ணித்துப் போற்றப்படுகிறார். பலபட்டடை சொக்கநாத கவிராயர் இத்தலத்தின் மேல் தேவ உலா பாடியுள்ளார். நிரம்பவழகிய தேசிகர் இத்தலத்தின் வரலாறை சேது புராணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தின் மீது தேவாரப் பாடல்கள் புனைந்து சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
சக்தி பீடத்தில் 5 ஆவது கோயில் மகாகாளம் சங்கரி கோயிலாகும். அம்பாளின் பெயர் சங்கரி. ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உள்ளது. இக்கோயில் இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராண பெயர் அவந்திகா அவந்திபுரம் அவந்திபூர் அவந்தி ஆகும். இக்கோயில் மகோத்பலா சக்தி பீடமாகும். தேவியின் முழங்கை விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை கடைந்த பொழுது அசுரர்களுக்கு பங்கு தராமல் தேவகுரு அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் இதுவும் ஒரு புனித தலமாகும். தலமரம் ஆலமரம். இந்த மரத்தின் விதை பார்வதி தேவியால் போடப்பட்டது. பல நூறு வருடங்களாக இந்த மரம் சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. இந்த மரத்திற்கு சித்திவடம் என்று பெயர். தீர்த்தம் சிப்ராநதி தீர்த்தம் சூரிய குண்டம் நித்திய புஷ்கரணி கோடிதீர்த்தம்.
இக்கோயில் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இந்த ஆலயம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. அதில் ஒரு தளம் பூமி மட்டத்துக்குக் கீழே இருக்கிறது. இத்தலத்தில் விநாயகர் ஓங்காரேசுவரர் தாரகேசுவரர் பார்வதி தேவி சுப்ரமணியர் நந்தி ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கருட புராணத்தில் சொல்லப்பட்டபடி ஏழு மோட்ச நகரங்களில் உஜ்ஜைனியும் ஒன்று. அயோத்தி மதுரா ஹரித்துவார் காசி காஞ்சி அவந்திகை (உஜ்ஜைனி) துவாரகை ஆகும். ஒரு தடவை பூஜித்த பொருள்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். ஒரு முறை பூஜை செய்த பொருட்களை வைத்து இன்னொரு முறை பூஜை செய்வதில்லை. இக்கோயிலில் இந்த வழக்கத்தை பின்பற்றுவதில்லை. பிரசாதத்தையும் வில்வம் போன்ற தளிர்களையும் இறைவனுக்கு மீண்டும் பூஜை செய்யப் படுகிறது.
ஹரசித்திதேவி என்ற இப்பெயருக்கு ஒரு புராணக் கதை உள்ளது. ஒரு சமயம் கயிலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது சண்டன் பிரசண்டன் என்ற இரண்டு அசுரர்கள் அங்கே வந்தனர். அவர்களிருவரும் தவமிருந்து மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரம் பெற்றிருந்தனர். வரத்தின் பலத்தினால் ஆணவம் கொண்ட அவ்விரு அரக்கர்களும் தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களை அடிமை ஆக்கினர். தேவர் முனிவர் மக்கள் யாவரையும் துன்பப்படுத்தினர். கயிலாயம் வந்து அங்கும் அமைதியைக் குலைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல் புரிந்து வந்த நந்தி தேவரை அடித்து இம்சை செய்தனர். சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்திற்கு இடையூறு செய்தனர். சிவபெருமானைப் போருக்கும் அழைத்தனர். சிவபெருமான் பார்வதி தேவியிடம் சண்டன் பிரசண்டன் பெற்ற வரம் பற்றிக் கூறினார். அவர்களை அழைக்கும் வல்லமை பார்வதி தேவிக்கே உள்ளது என்றும் கூறினார். எனவே அசுரர்கள் இருவரையும் அழித்து விடக் கூறினார். பார்வதி தேவி அசுரர்கள் அழிக்க மகாகாளியாக மாறினார். நவசக்தி தேவிமார்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அசுரர்களுடன் போருக்குச் சென்றார். மகாகாளியின் உருவத்தைக் கண்ட அசுரர்கள் இருவரும் பயந்து போய் உஜ்ஜயினி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகாகாளி அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து போரிட்டாள். அரக்கர் இருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்க வாகனம் எடுத்து அரக்கர்களை வதம் செய்தார். அரன் என்னும் சிவபெருமான் கட்டளையை பூர்த்தி செய்தமையால் அரசித்தி தேவி எனப்பெயர் பெற்றாள். அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மகாகாளர் என்ற ஜோதிர்லிங்கத்தைப் பற்றிச் சிவபுராணத்தில் கதை ஒன்று உள்ளது. அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணன் இருந்தான். சிறந்த சிவபக்தன். அவனுக்கு நான்கு பிள்ளைகள். இரத்தின மாலை என்ற மலையில் வாழ்ந்த தூஷணன் என்ற அரக்கன் இந்த நகரைச் சூறையாடி மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் விலாசனை அணுகி தங்களைக் காக்கும்படி வேண்டினர். சிவலிங்கம் பிடித்து வைத்து அன்றாடம் பூசை செய்வது அந்தணர் வழக்கம். ஒரு நாள் அவர் அப்படிச் செய்யத் தொடங்கிய போது அந்த அரக்கன் வந்து பூஜைப் பொருள்களைத் தூக்கி எறிந்து சிவலிங்கத்தையும் அழித்தான். அந்தக் கணத்தில் பெருத்த சப்தம் எழுந்தது. எல்லாரும் திடுக்கிட்டனர். அந்த லிங்கத்திலிருந்து வெடித்துப் பிளந்து கொண்டு மகாகாளர் தோன்றி தூஷணை அழித்தார். அரக்கன் அழிந்த மகிழ்ச்சியில் மக்கள் மகாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்கும்படி வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாகாளர் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார்.
உஜ்ஜயினி காலம் காலமாகப் பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரம். சமண மதத்தை சார்ந்த சுதன்வா என்ற மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஜைன மதம் அவ்வூரில் எங்கும் வியாபித்திருப்பதைக்கண்டு உஜ்+ஜைன் – உச்சத்தில் இருக்கும் ஜைனம் என்று பொருள் பட உஜ்ஜைய்ன் என்று பெயர் சூட்டினான். ஜைன சமயத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்த நகரம் என்பது பொருள். பல மன்னர்கள் இந்த நகரை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலம். முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும் விக்கிர மாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் விளங்கியது. விக்கிரமாதித்திய மன்னனும் பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான் பல வருடங்கள் ஆட்சி புரிந்து பலசாகசங்கள் செய்தார்கள். விக்ரமாதித்தியன் குலதெய்வம் இந்தத் தேவியே ஆகும். விக்கிரமாதித்த ராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.
அசோகச் சக்ரவர்த்தி உஜ்ஜயினி வர்த்தகர் மகளையே மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். மவுரியப் பேரரசின் கிளைத் தலைமைப் பீடம் இங்கே இருந்திருக்கிறது. அசோகருடைய கல்வெட்டுகளில் உஜ்ஜயினி பற்றிய செய்திகள் உள்ளது. பாணினி பெரிபுளூசு ஹியான்சான் போன்ற வெளிநாட்டுத் தூதர்கள் உஜ்ஜயினி வந்து இத்தலத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். பதஞ்சலி காளிதாசன் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தமது இலக்கியப் படைப்பில் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல் பெருங்கதை என்ற நூலில் வரும் உதயணன் கதை நிகழ்ச்சிகள் நடந்த தலம் உஜ்ஜயினி என்ற கருத்து உள்ளது. சாலி வாகன சகாப்தம் என்ற ஒரு சகாப்தத்தையே உண்டாக்கிய திறமைமிக்க அரசர் இங்கு ஆட்சி செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த பட்டினத்து அடிகளார் துறவு பூண்டு வடதிசைக்கு சென்ற பொழுது சில காலம் இந்த ஊரில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள வினாயகர் ஆலயத்தில் தங்கியிருந்தார். அப்போது உஜ்ஜையினியை அரசாண்டு வந்த பத்ரகிரி மகாராஜா துறவறம் பூண்டு பட்டினத்தாரை குருவாக ஏற்றுக் கொண்டு திருவிடை மருதூரில் வந்து ஞானம் பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.
இப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் அசுரர்களும் வேதாளங்களும் நிறைந்திருந்தமையால் பக்தர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் கயிலையை விட்டு இங்கே எழுந்தருளினார். திரிபுர அசுரர்களைச் சிவபெருமான் வெற்றி கொண்ட புனிதத் தலமாகும்.
இராமாயணம் மகாபாரதம் நடைபெற்ற கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். இராமாயண காலத்தில் இராமர் வந்து நீராடியதால் ராமர் காட் என்னும் குளியல் கட்டம் ஏற்பட்டு உள்ளது. இங்கே மீன்களை கடவுளாக வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பலராமர் சுதாமர் ஆகியோர் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதையின் வீட்டில் விட்டு அங்கே பிறந்திருந்த பெண்ணை வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண்ணைக் கம்சன் விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டப் போனான் .ஆனால் அந்தக் குழந்தை காளி உருக்கொண்டு இங்கே தங்கி அருள் பாலித்தாள். காளிதாசருக்கு அருள் புரிந்த காளி மாதா இவள்தான்.
கார்த்திகை மாதப் பவுர்ணமி இங்கே சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் கவி காளிதாசரின் நினைவு விழாவும் நடக்கிறது. இங்கு வான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இது1693ல் நிறுவப்பட்டது. இதற்கு நட்சத்திர மண்டபம் என்று பெயர். இங்கு உள்ள கட்டிடங்களின் நிழலைக் கொண்டு மணி நிமிடம் திதி நட்சத்திரம் இவற்றை அறிய முடியும்.
முகலாயரின் படையெடுப்பின் போது அல்டுமிஷ் என்பவன் இக்கோயிலை இடித்து விட்டு அங்கிருந்த சிவலிங்கத்தைஎடுத்து சென்று விட்டான். அதன் பிறகு ராமச்சந்திரன் என்பவர் புதிய லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து புதிய கோவிலை உருவாக்கினார். பின்னர் பல மன்னர்களின் கைங்கரியத்தினாலும் பொது மக்களின் திருப்பணிகளாலும் இன்று இத்திருக்கோயில் ஐந்து அடுக்குடன் மிகச்சிறப்புடன் விளங்குகிறது. இந்தத் தலத்தைப் பற்றி கந்த புராணம் மகாகாளவனம் என்று கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமானது என்று அக்கினி புராணம் குறிக்கிறது. இந்த நதியில் மூழ்கி மகாகாளரை வணங்கி காளி தரிசனம் செய்தால் கல்வியும் அறிவும் பெருகும். அசுர குணம் மறையும். இந்துக்கள் பௌத்தர்கள் ஜைனர்கள் ஆகிய மதத்தினரின் முக்கிய யாத்திரை தலமாகும்.
சக்தி பீடத்தில் 4 ஆவது கோயில் காசி விசாலாட்சி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் கங்கைக் கரையில் உள்ள மீர்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் மணிகர்ணீகா சக்தி பீடமாகும். தேவியின் காதணி விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சதி தேவியின் காதணி முத்து (மணி) போல இருந்ததால் மணிகர்ணீகா என்று பெயர் ஏற்பட்டது. மற்றோரு நூல் விசாலாட்சியின் மூன்று கண்களில் ஒன்று இங்கு விழுந்ததால் இது சக்தி பீடம் என்று கூறுகிறது. கோயிலில் உள்ள அம்பாளின் பெயர் விசாலாட்சி ஆகும். விசாலாட்சி என்றால் ஆகன்ற பெரிய கண்களைக் கொண்டவள் என்று பொருள். இந்தக் கண்ணால் பிரபஞ்சம் முழுவதையும் உணர முடியும் என்பதால் விசாலாட்சி என்று அழைக்கப்படுகிறாள். தற்போது உள்ள விசாலாட்சியின் கருஞ்சிலை 1970ஆம் ஆண்டு கோயிலை புணரமைக்கும் போது நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு வலது பக்கத்தில் தேவியின் உண்மையான சித்திரம் இடம் பெற்றுள்ளது. தேவியின் பிரதான கல் சிலைக்கு பின்னால் மற்றொரு சிலை உள்ளது. பண்டைய காலத்தில் இருந்து வழிபடப்பட்ட சிலை இதுவாகும். இச்சிலை வெள்ளியால் செய்யப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலுக்குச் சென்ற போது பல படையெடுப்புகளின் சுமைகளைத் தாங்கிய கோயிலில் சக்திகளை நிரப்ப பிரார்த்தனை செய்து ஒரு ஸ்ரீ யந்திரத்தை நிறுவினார்.
கோயிலில் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள் அன்னை விசாலாட்சி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில் அன்னை விசாலாட்சி மணி கர்ணிகா பீடத்தில் அழகுற அருள் பாலிக்கிறாள். நவராத்திரியின் போது 9 நாட்களும் நவ துர்க்கா வடிவில் தோன்றி அருள்பாலிக்கிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து இயற்கையாக உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாட்சி தன் மடி மீது கிடத்திக் கொள்கிறார். அப்போது விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிக்கிறார். ஆகவே அந்த ஆன்மாவானது பிறவியில்லாத நிலையை பெறுகிறது. கங்கை கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை தீர்த்தக் குளம், ஞான வாவி சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். கங்கையில் நீராடினால் தேகமும் விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன.
புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி புராதனமான நகரான இது. முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. புராண பெயர் பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் ஆகும். வட இந்தியாவில் அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும். 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான். கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும் திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும் துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் புராண நூல் கூறுகிறது. மகான்களான ஆதிசங்கரர் இராமனுஜர் குமரகுருபரர் முனிவர்கள் ஞானிகள் ரிஷிகள் தடம் பதித்த புனித பூமி. காசி என்றால் ஒளிநகரம் மற்றும் ஒளி மங்காத ஞானம் என்று பொருள். பிரளய காலத்தில் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கிய பிறகும் இந்த நகரம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சிவனை அழைக்காமல் தட்சன் யாகம் செய்த போது தாட்சாயிணி சிவனின் பேச்சை மீறி தந்தையை எதிர்த்தாள். அப்போது யாகத்தை நிறுத்த தீயில் மாய்ந்த தாட்சாயிணியைக் கண்டு சிவன் ஊழித்தாண்டம் ஆட திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை துண்டித்தார். அதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் சிதறி விழுந்தன. ஆவேசமடைந்த சிவன் பார்வதியின் உடல் பாகங்களைக் காசிக்கு கொண்டு வந்தார். அப்போது சிவன் பார்வதியின் காதில் தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதில் இருந்த காதணிகளைக் காணாத சிவபெருமானின் கண்களில் திருமால் தென்பட்டார். தமது சக்கரத்தால் கிணறு தோண்டி அருகே அமர்ந்து சிவனை நோக்கி தரிசனம் செய்தார். அவரிடம் சென்று அம்பிகையின் காதணியைக் கேட்க அவர் அருகில் இருந்த கிணற்றைக் கை காண்பித்தார். சிவன் கிணறை எட்டிப்பார்க்க அச்சமயம் சிவனின் காதுகளில் இருந்த குண்டலமும் விழுந்தது. அப்போது கிணற்றில் பிரகாசமான பேரொளியுடன் வெளிப்பட்ட சிவலிங்கத்தில் சக்தி சிவன் இருவரது சக்தியும் ஐக்கியமாக இருந்தது. அந்த ஜோதிர் லிங்கத்தை எடுத்து திருமால் வழிபட்டதோடு தொடர்ந்து சிவனை நோக்கி தவமிருந்து இந்த ஜோதிர் லிங்கத்தை மக்கள் வழிபட வேண்டும் என்றும் சிவனது பிறையில் குடிகொண்டிருக்கும் கங்கை இந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து இங்கு நீராடும் மக்களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்றும் வேண்டினார். சிவபெருமானும் திருமாலின் விருப்பத்துக்கு இணங்க அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.
காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை. பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. மேலும் பூக்கள் மணப்பதில்லை. எரிக்கப்படும் பிணங்களின் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் நின்றார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அதைக் கண்டதும் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.
காசி நகரம் வேதகாலம் புராண காலத்துக்கு முந்தையது. சூரியனின் புதல்வரான சனிபகவான் சிவனை நினைத்து தவம் செய்து நவக்கிரகங்களில் ஒரு வராகவும் மற்றொரு புதல்வர் எமதர்மர் எம்பெருமானை நோக்கி தவம் செய்து எமலோகத்துக்கு அதிபதியாகவும் ஆயினர். பிரம்மதேவன் இத்தலத்தில் யாகம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமாக கூறப்படுகிறது. பல ஞானிகளும் யோகிகளும் சப்த ரிஷிகளும் இங்கு தவம் புரிந்து பல பேறுகளை அடைந்திருப்பதால் சொல்லில் அடங்கா சிறப்புகளைப் பெற்றது. காசி சேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில் லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கழிக்க நகருக்கு வெளியே செல்வார். காஞ்சி மகாபெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணிய மாட்டார்.
சக்தி பீடமாக திகழும் அன்னை விசாலாட்சி கோயில் தென்னிந்திய பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கிபி 1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் கிபி1908இல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியின் போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள சுவர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றாள்.
சக்தி பீடத்தில் 3 ஆவது கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும். அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு இடப்பக்கத்தில் சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார். போகத்தையும் முக்தியையும் வேண்டுபவர்களுக்கு சித்திதரும் தலம் என்று இத்திருத்தலத்தை திருவிளையாடல் புராணம் போற்றியிருக்கிறது. வேறு நூலின் குறிப்புப்படி சக்தி பீடத்தில் இவை மந்த்ரிணீ பீடம் ஆகும். 18 சித்தர்களின் பீடத்தில் இதுவும் ஒன்று. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 191 ஆவது தலம் ஆகும். புராணபெயர் திருஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம். தலவிருட்சம் கடம்பமரம். இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும் தலத்தின் பெயரை படித்தாலோ கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.
பாண்டிய நாட்டை மலயத்துவசன் அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான். ஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் இப்பாண்டியன் நூறு யாகங்களை முடித்தால் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும் என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப் பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திர பேற்றினை வழங்கக் கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.
பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடது புறத்தில் கொண்டையுடன் கையில் கிளி வைத்துக் கொண்டு காலில் சதைங்கை அணிந்து முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார். அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ் சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.
குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக் குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.
மீனாட்சி அம்மையின் திருவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாக பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அகத்தியர் கந்தர்வ லோகத்தில் வசித்த விச்சுவாவசு என்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து பல விரத முறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள். விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும். என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாறள். அதனை கேட்ட அங்கையற்கண்ணி பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.
இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான். மலயத்துவசனுக்கு பின் தடாகை ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார்.
மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய என்று பொருள். கயல் என்றால் மீன் கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன் போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது. நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். தடாதகை மணப் பருவத்தை அடைந்தாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் திருமங்கல நாணை பிராட்டியாருக்குச் சூட்டினார். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.
அம்பாள் மீனாட்சி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார். அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன. மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது.
மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள் பாலிக்கிறாள். திருவனந்தல் விளாபூஜை காலசந்தி திரிகாலசந்தி உச்சிக்காலம் சாயரட்சை அர்த்தஜாமம் பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹாஷோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா சியாமளா சோடஷி ஆகிய திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறாள். இப்பூஜைகள் திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து தேனாகிய மதுரம் இத்தலத்தில் வழிந்திட மதுராபுரி என அழைக்கப்பட்டு அது மருவி மதுரை ஆயிற்று. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை.
மீனாட்சி அம்மன் கோயில் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக்குளம் ஆகும். இந்தக் குளம் கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர் உள்ளது. நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக் குளம். கோயிலுக்குரிய தீர்த்தங்களில் இது முதன்மையானது. இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம். தேவேந்திரன் தனது சிவபூஜைக்காக பொன் தாமரையைப் பெற்றதும் நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். 165அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான். பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம். இக்குளத்தில் சங்கப்பலகை இருந்ததாகவும் புலவர்கள் இயற்றும் நூல்களை அதன் மேல் வைப்பார்கள் அப்பலகை ஏற்றுக் கொண்ட பின்னரே சங்கப்புலவர்கள் அந்நூல்களை ஏற்றுக் கொண்டதாகவும் திருக்குறளும் அவ்வாறே இக்குளக்கரையில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் குளத்தில் அமாவாசை மாதப் பிறப்பு கிரகணகாலம் வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப் பெறலாம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்த்தத்தில் பல வருடங்களுக்கு முன்பாக தோன்றிய ஸ்படிக லிங்கம் இப்போதும் உள்ளது.
தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் முக்குறுணி விநாயகர் சந்நிதி உள்ளது. கி.பி. 1623 முதல்1659 வரை மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்து இங்கே கிபி 1645 இல் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லினால் ஆன இவ்விநாயகரின் உயரம் 7 அடி. ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
விருத்த்ராசுரன் விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பூசித்தவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும் விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள் இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. ஆலயம் கட்டிய இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று இறைவன் கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது அஷ்ட சக்தி மண்டபம். 18 அடி அகலமும் 25 அடி உயரமும் 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத் தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன் மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும் அரசிகளான ருத்திரபதியம்மையும் தோளியம்மையும் ஆவர்கள். பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும் முடிசூட்டிக் கொள்வதும் ஆட்சி நடத்துவதும் வீர உலா செல்வதும் இறைவனை காண்பதும் சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும் இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணமும் உள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்த போது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன் சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியது. அது போல் இப்போதும் இறைவனை அடையத் தகுதி உடையவர்களுக்கு கிளி வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது. உலகத்திலேயே சிலைகளும் சிற்பங்களும் மூன்று கோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். அன்னை மீனாட்சிக்கு 1981ல் தங்கத்தால் தேர் செய்யப்பட்டது. இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும் 87.667 கிலோ வெள்ளியும் 222.440 கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் என்பவரின் கனவில் மீனாக்ஷி அம்மன் தோன்றி தூங்கி கொண்டிருந்த அவரை கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல சொல்லியிருக்கிறார். அவர் வெளியே சென்ற சிறிது நேரத்திலயே அந்த கட்டிடம் இடிஞ்சு விழுந்து விட்டது. அதனால் அவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயிலும் பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின் கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு.
1168 – சுவாமி கோபுரம் 1216 – கிழக்கு ராஜ கோபுரம் 1627 – அம்மன் சந்நிதி கோபுரம் 1315 – மேற்கு ராஐ கோபுரம் 1372 – சுவாமி சந்நிதி கோபுரம் 1374 – சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 – ஆறு கால் மண்டபம் 1526 – 100 கால் மண்டபம் 1559 – தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம் 1560 – சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் 1562 – தேரடி மண்டபம் 1563 – பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம் 1564 – வடக்கு ராஜா கோபுரம், வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம் 1569 – சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் 1570 – அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கி குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றினார். திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். திருஞானசம்பந்தர் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக் கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். ராமர் லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் ஒரு நாரைக்கு முக்தியளித்த சம்பவம் கூறப்பட்டுள்ளது. அதனை மெய்பிக்கும் விதமாக 2016 மார்ச் மாதத்தில் ஒரு நாரை இக்கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளத்தில் 4 நாட்களாகத் தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்ததது. உணவு எதுவும் உட்கொள்ளாமல் குளத்திற்குள் செல்வதும் கரைக்கு வந்து நிற்பதுமாக 4 நாட்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தது. 17-3-2016 அன்று அங்கேயே முக்தி அடைந்ததது. அதனை கோவிலுக்குள் உள்ள கோசாலையில் அடக்கம் செய்தனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் குமரகுருபரர் பாடல்கள் பாடியுள்ளனர்.