யோகினி கோயில்

யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஓரிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும். இக்கோயிலில் காளி பிரதான தெய்வமாக இருக்கிறாள். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள் 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால் இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவில் கிபி 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில் வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி பார்வதி பிள்ளையார் ரதி சாமுண்டி பைரவர் கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. இக்கோவிலில் சாக்த சமய தாந்திரீகர்கள் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து பராமரிக்கிறது.

செண்பகாதேவி அம்மன் கோவில்

செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் போர்மன்ன லிங்கேஸ்வரர். இங்கு மூலவரே உற்சவராகவும் கருவறையில் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று இறைவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். போர் மன்னலிங்கேஸ்வரர் போத்துராஜா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். போர்மன்னலிங்கேஸ்வரர் ஊரின் பெயரைப் போலவே மங்கலத்துடனும் பெயரைப் போலவே போர் உக்கிரத்துடனும் காட்சி தருகிறார். ஊர் போத்துராஜ மங்கலம். போர்மன்னலிங்கேஸ்வரர் ஆண்டு முழுவதும் கருவரையில் தேரில் அமர்ந்திருக்கிறார்.

துவாபரயுகத்தில் பரமேஸ்வரனும் பார்வதியும் பூலோகத்தை சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பார்வதி தேவியார் மணலால் கோட்டையையும் கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார். அதன் அழகில் ரசித்த ஈஸ்வரன் அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். பார்வதி தேவியார் உருவாக்கிய மணல் கோட்டையை பாதுகாக்க யாக குண்டத்தில் இருந்து ஈஸ்வரனால் உருவானவர் ஸ்ரீபோர்மன்னன். வீரசாட்டை மல்லரி கொந்தம்  கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் காவல் பணிபுரிகிறவராக நாட்டை காக்க இறைப் பணியாற்றினார் போர்மன்னன்.

மகாபாரத யுத்தத்தின் சமயம் பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவைப்பட்டது. போர்மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருந்தது. இந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளவும் பார்வையாலேயே எதிரிகளை வீழ்த்தும் வல்லமை படைத்த போர்மன்னனை போரில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணர் முடிவு செய்தார். எனவே போர்மன்னனை சந்திக்க கிருஷ்ணன் அர்ஜூனன் பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வந்தனர். போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது. அதிலும் பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்ப்பதில்லை.

கிருஷ்ண லீலை தொடங்கியது. கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும் அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும் பீமன் விறகு வெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை மதில் சுவற்றில் வைக்க அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைச் சந்திக்க காவலாளியிடம் அனுமதி கேட்டனர் கிருஷ்ணனும் அர்ஜூனனும். மன்னரின் அனுமதி கிடைக்கவே அரசவைக்குள் அழைத்து வரப்பட்டனர். அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு சிலிர்ப்பு. முதல் முறையாக பெண்ணை பார்ப்பதாலா இல்லை அர்ஜூனனின் வேஷத்தினாலா ஒன்றும் புரியவில்லை. ஆனால் மன்னர் அர்ஜூனனிடம் மயங்கி விட்டார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு நீங்கள் யார்? உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேட்டார். மன்னா நாங்கள் ஊருக்கு புதிதாய் வந்திருக்கிறோம். எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். என் மகனைத்தான்  காவலாளிகள் சிறையில் அடைத்துள்ளனர். அவன் மிகவும் அப்பாவி தெரியாமல் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து விடுவியுங்கள் என்றாள் தாதிக்கிழவி வேடத்தில் இருந்த கிருஷ்ணன். சரி அவனை விடுவிக்கிறேன். அதற்கு பலனாக உன் மகளை எனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று கேட்டான் அரசன். அதற்கு தாதிக்கிழவி எனக்கு தங்களிடம் ஒரு உதவியாக உங்களிடமுள்ள ஆயுதங்கள் வேண்டும் அதனை தர தாங்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றாள். அர்ஜூனன் மீதுள்ள மோகத்தால் யோசிக்காமல் ஒப்புக் கொண்டு ஆயுதங்களை அளித்தான் அரசன்.

திருமண ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன் நாங்கள் வெளியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்து அங்கிருந்து கிளம்பினார்கள். விஷயம் மன்னருக்கு தெரிந்து கடும் கோபம் கொண்டார். அவர்களைப் பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். மன்னரின் கோபத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணன் உண்மையை விளக்கி பாரதப் போரிலும் அவரை பங்கேற்க வைத்தான் கிருஷ்ணன். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்துலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கிமீயில் உள்ள பசு மலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபாஞ்சாலி மகாமித்யம் என்ற நுாலில் இந்த வரலாறு உள்ளது.

சுந்தர மகாலட்சுமி

அரசர் கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தர மகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது தனி அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. கோயில் முகப்பை தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம். அடுத்து கருடாழ்வார் மண்டபம். அதற்கு நேரே பெருமாள். வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டருள்கிறாள். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறாள் லட்சுமி. மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க கீழிரு கரங்கள் அபய வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறாள். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் விசேஷ திருமஞ்சனம் மகாலட்சுமிக்கு செய்யப்படுகிறது. வரலட்சுமி விரதத்தன்றும் அட்சய திருதியையன்றும் இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. மண்டபத்தின் முன் ஒரு இசை மண்டபம் உள்ளது. ஒவ்வொரு தூணும் விரலால் சுண்ட ஒவ்வொரு ஸ்வரத்தை எழுப்புகிறது. நான்கு வேதங்களைக் குறிக்கும் விதமாக இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால் அது மறு பக்கம் வெளி வரும் போது நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது.

இந்த மண்டபத்திற்கு வெளியே வலதுபுறம் அட்சய கணபதி வைணவ தும்பிக்கை ஆழ்வாராக அருட்கோலம் காட்டுகிறார். அனுமன் ஒரு முறை விநாயகரிடம் இந்த அரசர்கோயில் நிவேதனங்களை தானே செய்ய அட்சய பாத்திரம் கேட்டார். அனுமனின் விருப்பத்தை மகாலட்சுமி அறிந்து விநாயகர் மூலம் அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இந்த விநாயகர் அட்சய கணபதி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலய பிரசாதங்கள் அனுமனின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுவதாக ஐதீகம். சுந்தரமகாலட்சுமியின் சன்னிதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த சுந்தரமகாலட்சுமி தேவிக்கு அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்குப் படைப்பார். இன்றும் அபிஷேக சமயங்களில் அன்னையைப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி குபேரன் காளிங்கநர்த்தன கண்ணன் பரமபதநாதர் திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக அருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள் திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை.

பெருமாள் சன்னிதியில் ஸ்ரீதேவி பூதேவியோடு கமல வரதராஜராக நின்ற திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். மூலவர் சாளக்ராமத்தால் ஆனவர். விஷ்வக்சேனர் மணவாள மாமுனிகள் தேசிகர் ஆகியோரும் உள்ளார்கள். ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் ஒன்றாக இருந்தபடியால் இத்தலம் அரசர்கோயில் என்று பெயர் ஏற்பட்டது.

நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே பூலோகத்திற்குச் செல்லுங்கள் என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் வந்தார் நான்முகன். நான்முகனுக்கு சாப விமோசனம் அருள வேண்டும் என்று விஷ்ணு ஏற்கெனவே  தீர்மானித்து இந்த அரசர் கோயில் இருக்கும் இடத்தில் எழுந்தருளினார். அதேசமயம் புனித யாத்திரையாக பூவுலகம் முழுவதும் சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜாவும் இத்தலத்தின் வழியாக வந்து கொண்டிருந்தார். விஷ்ணு எழுந்தருளிய தகவலைக் கேள்விப்பட்டு அவர் பெருமாளை தரிசிக்க சென்றார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட நான்முகன் இப்பகுதிக்கு வந்து தன் தவத்தைத் தொடங்கி விஷ்ணுவின் ஆசியைப் பெற்றார். ஜனக மன்னனையும் பெருமாளையும் ஒன்றாக தரிசித்து சாப விமோசனம் பெற்றார். அந்த மகிழ்ச்சியில் அங்கேயே சிறிது காலம் தங்கி பெருமாளை ஆராதித்தார். தினமும் வந்து பெருமாளை தரிசித்து பூஜிப்பதை ஜனக மகாராஜாவும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஜனகர் வராததால் பெருமாள் ஜனகர் தங்கியிருந்த இடத்திற்கே புறப்பட்டு வந்தார். அந்த வேளையில் ஜனகர் அங்கு இல்லை. தானே ஜனகர் அமரும்  சிம்மாசனத்தில் அமர்ந்து ஜனகர் தனக்குச் செய்வது போன்றே பூஜைகளை தாமே செய்து கொண்டார். பிறகு ஜனகர் செய்ய வேண்டிய பூஜைகள் இன்று நடந்து விட்டன என காவலாளிகளிடம் சொல்லிவிட்டு பெருமாள் புறப்பட்டார்.

அரசு பணியாக வெளியே சென்றிருந்த ஜனகர் திரும்பி வந்து தன் சிம்மாசனத்திற்கு அருகே பெருமாளுக்கு தான் செய்தது போன்றே பூஜைகள் நடைபெற்றிருந்ததைப் பார்த்து காவலாளிகளிடம் கேட்டார். நடந்ததை அறிந்து சிலிர்த்தார். தன் நித்ய கர்மாவிலிருந்து தான் தவறி விட்டதற்குப் பிராயச்சித்தமாக பெருமாளுக்கு ஆலயம் எழுப்ப விண்ணப்பித்தார். பெருமாளோ தேவலோக விஸ்வகர்மாவினால் மட்டுமே இங்கு ஆலயம் எழுப்ப முடியும் என்று கூறி தேவலோக விஸ்வகர்மாவை வரவழைத்தார். ஆலயம் எழுப்ப தேவலோக விஸ்மகர்மாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எழுப்பப்பட்ட ஆலயம்தான் இந்த அரசர்கோயில்.

நித்யகர்மா செய்ய ஜனகர் வராததால் பெருமாளே அவர் இருப்பிடம் நோக்கிச் சென்ற விவகாரத்தில் மகாலட்சுமி மனம் வருந்தினாள். பரந்தாமனை நோக்கி பக்தன் வரலாம். பக்தனை நோக்கி பரந்தாமன் செல்லலாமா? அவன் அவ்வளவு பெரிய பக்தனா? கோபம் கொண்டாள் லட்சுமி. இதனைக் கண்ட விஷ்ணு இங்கு எழும் ஆலயத்தில் உனக்கே முதல் மரியாதை கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் மகத்தான சக்தியையும் உனக்கு அருள்கிறேன். இத்தலத்தில் உன்னை தரிசித்து உன் அருள் பெற்றவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள்’ என்று சொல்லி மகாலட்சுமியின் கோபம் தீர்த்து அவளை மகிழ்வித்தார். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி தாமரையில் வசிக்கும் தன் சார்பாக எப்போதும் பெருமாள் தம்முடைய கரத்தில் ஒரு தாமரை மொக்கை வைத்துக் கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே பெருமாளும் தன் கரத்தில் தாமரை மொக்கை ஏந்தி கமலவரதராஜப் பெருமானாக கோயில் கொண்டார்.

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார். தீர்த்தம் குசலவ தீர்த்தம். தல விருட்சம் பலா. இடம் சென்னை அருகில் உள்ள கோயம்பேடு. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. லவ குசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் கோயம் பேடு என பெயர் பெற்றது. பேடு என்றால் வேலி எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது கோசைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் சுமார் 25200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடைக்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பெரிய குளம் உள்ளது. இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. கோவிலுக்கு அருகில் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

ஒரு காலத்தில் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மணலால் மூடிவிட்டது. சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே தேரில் சென்ற போது சக்கரம் லிங்கம் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை அவரது சாரதியான அருணன் ஓட்ட மனைவியருடன் சூரியபகவான் அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள் கீழ்பீடம் வெள்ளை தாமரை பீடம் சிவப்பு ரதம் கருப்பு தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா லட்சுமி ஞானசரஸ்வதி நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர் வீரபத்திரர் இருக்கின்றனர். அதிகார நந்தி காலபைரவர் வீரபத்திரர் விநாயகர் பிரம்மன் சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது.

அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள் லவன் குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே லவ குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் லவ குசர் இருவரும் சென்றார்கள். மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும் சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமர் மீது கோபமடைந்த லவ குசர் இருவரும் தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது அஸ்வமேத யாகக் குதிரை லவ குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப் போட்டனர். அங்கு வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ குசர்களிடம் ராமர் அவர்களது தந்தை என்பதையும் அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமர் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். இருப்பினும் தந்தையை எதிர்த்ததால் லவ குசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றனர். இதனால் சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.

கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.

இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.

இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழமண்டலம் மற்றும் மாங்காடு இப்பகுதியில் இடம் பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. வால்மீகி முனிவர் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அருணகிரிநாதர் இக்கோவில் முருகரை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

குறுங்காலீஸ்வரர்
தர்மசம்வர்த்தினி
நடராஜர்
பைரவர்
காபால பைரவர்
முருகர்
நவகிரகம்
தட்சணாமூர்த்தி

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.

வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.

சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில்

திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

திருலோக்கி

குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம். அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம் மான் ஏந்தியும் முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும் இடது கரத்தில் மலர் ஏந்தியும் உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் பார்யா சௌக்யப்ரதாயினி என்பதாகும்.

அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள் நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை.

தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதியானது. சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் வணங்கும் கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானது. குரு பூஜித்து பேறு பெற்ற ஒப்பற்ற தலம் திருலோக்கி.

இடம் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம் அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி கோவில் அமைந்துள்ளது.

நவ பிருந்தாவனம்

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனேகுந்தி பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின் படகு பயணம். துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும் தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவபிருந்தாவனம் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. ஆஞ்சநேயர் சிறுவயதில் இந்த மலையை தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மாலை தாவி விளையாடிய இடம் ஆகையால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்ல முடியும். துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது. அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். துங்கபத்திராவின் நடுவே பள்ளிகொண்ட அரங்கநாதர் கோவில் அனுமன் கோவில் மற்றும் ஒன்பது மகான்கள் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜெய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 6. ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராம தீர்த்தர் 8. ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது இந்தக் குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

அவதாரத்ரய ஹனுமான்

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனத்திற்கு யாரும் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.