தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 229 திருப்பாதிரிபுலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 229 வது தேவாரத்தலம் திருப்பாதிரிபுலியூர். புராணபெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம். மூலவர் பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான, பாடலேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி. தலமரம் பாதிரிமரம். தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரைதீர்த்தம் படித்துறைகளுடன் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தியை தரிசிக்கலாம். உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தியும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் திருநாவுக்கரசர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கன்னி விநாயகர் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்) இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமாக பார்த்து அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருக்கின்றது. மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மீது மேலே ஏறுவதற்கு வசதியாக இருக்க தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட சித்தராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரை நீர் மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன் மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு பிரம்பு ஒன்றை ஏவி அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் வந்த ஈசன் கை வைத்ததால் சிவகரை தீர்த்தம் உருவானது. சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் பாதுகைகளாக ஆகமங்களும் இருந்தன. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்து விட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி பாதங்கள் நிலத்தில் பதியாமல் அரூபமாக (உருவமில்லாமல்) தவமிருந்து இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது. இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். மங்கண முனிவர் பூசித்து தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர் என்று திருஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதும் சமமானது என்றும் திருவண்ணாமலையில் 8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்றும் தல வரலாறு கூறிப்பிடுகின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை அம்பாளின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். இங்கு இறைவனின் சன்னதியில் பள்ளியறை உள்ளது. திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர். சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம் வேறு இரு கல்வெட்டுக்களும் உள்ளது. இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் திருநாவுக்கரசரின் கருத்துக்கள் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.