தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 257 திருமயிலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 257 வது தேவாரத்தலம் திருமயிலை (சென்னை). புராணபெயர் கபாலீச்சரம், திருமயிலாப்பூர். மூலவர் கபாலீஸ்வரர். இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தேவலோகத்து கற்பக மரம் கேட்டதை கொடுப்பதைப்போல இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் கற்பகாம்பிகை எனப்பட்டாள். தலவிருட்சம் புன்னை மரம். தீர்த்தம் கபாலீ தீர்த்தம். சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். அவரின் ஆணவத்தை அளிக்க நினைத்த சிவபெருமான் அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர் கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார். மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது.

கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோர் உள்ளனர். மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது.

உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும் திருநீற்றின் மகிமைகளையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க சிவபெருமான் அவ்விளக்கம் அளித்தார் அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய் என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய் எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி மயிலை என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில் வெள்ளி வாகனத்தில் சிவனார், அம்பாள், சண்டிகேஸ்வரர், முருகர் திருவீதியுலா வர அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வருவார்கள். சிவ பார்வதி தரிசனம் ஒருபக்கம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும். மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்கிறது புராணங்கள் அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது வரலாற்றின் படி எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. சூரனை வதம் செய்யும் முன்பு முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும் அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன் சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன் ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம் தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும் தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இங்கு இருக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். இவருக்கும் தனிசன்னதி இருக்கிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் தோன்றிய தலம். திருவள்ளுவர் தோன்றிய வாழ்ந்த தலம். உமையம்மையார் மயில் உருவம் கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். இராமபிரான் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். சிவபெருமான் உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும். இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால் பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம். இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன் சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் எனத் தொடங்கும் பதிகமாகும். இந்த பாடலில் வரலாற்று பதிவுகள் பல உள்ளன. திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர் அவள் திருஞானசம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்ததை அறிந்து சிவனேசன் அங்கு சென்று நடந்ததை கூறினார். நடந்ததை அறிந்து சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். அப்போது திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம் என்ற பொருளில் பாடல் பாடினார். அவர் பாடியதும் பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் திருஞானசம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால் அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி திருஞானசம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார். இத்தலத்தின் புராணம் குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் 1894 ல் வெளிடப்பட்டது. வடமொழியில் சைவ மகாபுராணத்து கோடி ருத்ர ஸம்ஹிதையில் உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் 1922 ம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. திருமயிலைத் தலபுராணம் எனும் நூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றினார். இந்த நூல் இரண்டாம் பதிப்பாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது. சமீப காலத்தில் திருமயிலைத் தலபுராணம் என்ற பெயரால் மயிலை நாதமுனி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இக்கோவில் முதன் முதலில் சாந்தோம் சர்ச் இருக்கும் பகுதியில் 6ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும் பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்துள்ளது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய இடமும் கடற்கரை சாந்தோமிலிருந்த கோயில் என்பது அவர் அங்கம் பூம்பாவைப் பாடலிருந்து தெரிகிறது. பழைய கோயில் இப்போது உள்ள சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் இருந்தது. இதனை அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் மூலமாக அறியலாம். கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் அவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக் கோட்டையும் தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558 ல் சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையிட்டு இருப்பது கல்வெட்டின் மூலம் அறியலாம்.

சாந்தோம் சர்ச்சில் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம். 1923 ல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் சர்ச்சில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும் தூண்களும் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கல் தூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921 ல் திரு ஹோஸ்டன் என்பவரல் சாந்தோம் சர்ச்சில் கண்டெடுக்கப்பட்ட வடமொழிக் கல்வெட்டுக்களில் கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும் என்று குறிப்பிடுகிறது. மேலும் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப்பட்டதையும் கூறுகிறது. கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் கி.பி.1672-க்கு இடைப்பட்ட காலத்தில் மைலாப்பூரில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில் மற்றும் குளம் மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது. இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன.

புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலீச்சரம், கபாலி மாநகர் போன்ற வேறு பெயர்களால் இக்கோவில் பாடப்பட்டுள்ளது. பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. மூவேந்தர்கள் காலத்தில் புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்ததாக விளங்கிய மயிலை வடமொழியில் கேகயபுரி எனப்பட்டது. மயிலாப்பி என்றும் இந்தத் தலம் அழைக்கப்பட்டதை திருநாவுக்கரசரின் பாடல்களிலிருந்து அறியலாம். கி.பி.9-ஆம் நூற்றாண்டில் மயிலாபுரி என்று வழங்கப்பட்டதை நந்திக் கலம்பகம் என்னும் நூல் தெரிவிக்கிறது. சமணர்கள் இந்தத் தலத்தை பத்மநாதபுரம் வாமநாதபுரம் எனும் பெயர்களால் அழைத்தனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஜயங் கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப்பரணி பண்டை மயிலை என்று குறிப்பிடுகிறது. 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயட்ட்கள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளார். மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால் இத்தலம் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடியுள்ளார்.

சிவபெருமானைப் போற்றி திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி, ஆகியன கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள். அம்பாளைப் போற்றி கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகியன ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள். முருகரைப் போற்றி திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம் ஆகியன மயிலை சிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்டவை. இது தவிர திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள் ஆகியனவும் மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் ஆகும். இராமபிரான் இறைவனை வழிபட்டு ஐப்பசி ஓணநாளில் பிரமோற்சவம் திருவிழாவை நடத்துவித்தார். அம்பாள், பிரம்மன், முருகர், இராமர் இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

One thought on “தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 257 திருமயிலை

  1. வெங்கட் Reply

    மிக மிக அருமையான‌‌ தொகுப்பு. வாழ்க வளமுடன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.