பட்டினத்தார் வரலாற்றை பார்ப்பதற்கு முன்னர் இவரது முற்பிறப்பை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராவணனின் தம்பி முறை கொண்டவன் குபேரன். ராவணன் தன் தம்பிகளோடு சிவனை நோக்கி தவம்புரிய சிவபெருமானும் ராவணனின் கடும் தவத்தை மெச்சி வேண்டும் வரம் தருவதாக கூறினார். அதன்படி சிவனின் பக்தனான ராவணன் ஈஸ்வரர் பட்டம் பெற்று ராவணேஸ்வரன் என அழைக்கப்பட்டதோடு எப்படிபட்டவரையும் கொல்லும் இரண்டு நாகாஸ்திரத்தையும் சிவதனுசு என்ற வில்லையும் பெற்றான். கும்பகர்ணன் பிரம்மதேவன் சூழ்ச்சியால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வரம் பெற்றான். விபூஷ்ணனும் வரம் பெற்றான். கடைசியாக குபேரனுக்கு என்ன வரம் வேண்டுமென சிவன் கேட்டார். அதற்கு சிவனோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும் என குபேரன் கூறினான். சிவனும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உன்னிடத்தில் என் சிவலோகத்தில் உள்ள அனைத்து செல்வத்தையும் காக்கும் பொருப்பில் அமர்த்துகிறேன் என கூறி செல்வத்திற்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.
குபேரன் ஒரு முறை பூமியை காண வலம் வந்தான். காவிரி வளம் கொழிக்கும் ஊரினை கண்டதும் குபேரனுக்கு நம் தேவலோகத்தில் இதுபோன்ற எழிலை காண முடியவில்லையே. குயில்களின் இசையும் மயில்களின் நடனமும் நதியின் இசையும் அழகிய மலர்களின் நறுமணமும் அழகிய வயலும் பொய்கையும் வாழை மா பலா என பழுத்த முக்கனிகள் அன்பான மக்கள் சிவனின் ஆலயம் இத்தனையும் அனுபவிக்க அப்பப்பா ஒரு பிறவி போதாதே என ஒருகணம் நினைத்தான் குபேரன். இதனை கண்ட சிவன் குபேரா நினைத்தது போலவே ஒரு பிறவி இப்பூமியில் பிறந்து உனது ஆசையை தீர்த்துகொண்டு வா என கூறிவிட்டார் சிவன். குபேரனும் பட்டினத்தாராக இப்பூமியில் அவதரித்தார். இதுவே பட்டினத்தாரின் முற்பிறப்பு வரலாறு.
காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். பிறந்த குழந்தைக்கு திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிட்டார்கள். பெரும் செல்வந்தர்களான வணிகக் குடும்பம் என்பதால் கடல் கடந்து வியாபாரம் செய்து பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க செல்வந்தராக இருந்தார் சுவேதாரண்யன். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் பட்டினத்தார் என்று அழைத்தார்கள். பட்டினத்தார் தனது 16 வது வயதில் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார் பட்டினத்தார். அந்த ஊரில் இருந்த சிவசருமர் என்பவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன் குளக்கரையில் கண்டெடுத்த குழந்தை என்று கூறி பட்டினத்தாருக்கு குழந்தையை தத்து கொடுக்கும்படி கூறி மறைந்தார். சிவன் கூறியபடியே சிவசருமர் திருவெண்காடரிடம் குழந்தையை கொடுத்து விட்டார். மகிழ்ந்த பட்டினத்தார் இறைவன் அளித்த குழந்தையாக எண்ணி குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பட்டினத்தார் கடல் கடந்து நவரத்தினங்களை வாணிபம் செய்து வந்தார். மருதவாணருக்கு வாலிப வயது வந்ததும் தானும் வாணிபம் செய்ய கடல் கடந்து செல்கிறேன் என்று தந்தையிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்ய சென்றார்.
பட்டிணத்தார் குபேரன் அவதாரம் என்பதால் அவர் பிறக்கும் போதே மிகுந்த செல்வந்தர். அவரது வீட்டின் கதவும் வாயிற்காலும் வெள்ளியில் செய்யப்பட்டு இருக்கும். வாசலில் முத்துக்களால் ஆன பந்தல் அமைத்திருப்பார். அந்நாட்டு அரசர் நகர்வலம் வந்தபோது இதனை கண்டு திகைத்துபோய் பட்டினத்தாரை அழைத்து நாளை முதல் நீங்கள் வெள்ளிகதவை உபயோகிக்ககூடாது கழற்றிவிடவும் என கூறினார். மறுநாள் பட்டினத்தார் வெள்ளிகதவை கழற்றி தங்கத்தால் ஆன கதவை பொருத்தினார். மன்னர் நகர்வலம் வந்தபோது தங்ககதவை பார்த்து மேலும் அதிர்ந்துபோய் பட்டினத்தாரிடம் உங்களை வெள்ளிகதவை கழற்ற சொன்னேனே என கேட்டார். பட்டினத்தாரும் ஆம் மன்னா தங்கள் உத்தரவுப்படி வெள்ளி கதவை கழற்றி தங்ககதவை மாட்டியுள்ளேன் என கூறினார். இதனைக்கேட்ட மன்னர் பொறாமையால் முத்துப்பந்தலை எரிக்க காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் முத்துப்பந்தலை எரித்துவிட்டனர். இதனைக்கண்ட பட்டினத்தார் அடுத்தநாள் வைரங்களால் ஆன பந்தலை போட்டுவைத்தார். இதனைக்கண்ட மன்னர் அதற்கு மேலும் பேச வழியின்றி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவ்வளவு பெரிய செல்வந்தராக வாழ்ந்திருந்தார் பட்டினத்தார்.
சில நாட்கள் கழித்து திரும்பிய மருதவாணர் வியாபாரம் செய்யும் இடத்தில் தந்தையிடம் பெட்டி பெட்டியாக கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார். மகன் சம்பாதித்து கொண்டு வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் தவிடு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எருவரட்டி இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்பினால் தவிட்டு எருவைக்கொண்டு வந்திருக்கின்றானே என்று கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில் வைரங்களும் வைடூரியங்களும் இருப்பதை பார்த்து அதிர்ந்த பட்டினத்தார் மகனைக்காண வீட்டிற்கு வந்தார். மருதவாணர் தனது தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து தந்தை வருவார் அவரிடம் இதனைக் கொடுத்துவிடுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். மருதவாணரை தேடி வீட்டுக்கு வந்த பட்டினத்தார் நடந்தவைகள் அனைத்தையும் கேள்விப்பட்டு மருதவாணர் கொடுத்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ஒர் ஓலைசுவடி இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்ததும் பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது. மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மையை உணர்ந்தார்.
பட்டினத்தார் இல்லற வாழ்க்கையை துறந்து இடுப்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு ஆண்டி கோலம் பூண்டார். இதனைகண்ட அவரது தாய் எனக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது அக்கடமையை செய்யாமல் நீ செல்லவேண்டாம் என்று தடுத்தார். தாயாரிடம் தங்களுக்கான கடமை வரும் நேரம் நானே உங்களிடம் வந்து என் கடமையை செய்வேன் என்று உறுதியளித்துவிட்டு வீட்டைவிட்டு கிளம்பினார். பட்டினத்தாரின் செல்வத்தை காக்கும் பொருப்பில் இருந்தவர் சேந்தனார் என்பவர் பட்டினத்தாரிடம் வந்து உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் யாரிடம் எப்படி கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டு செல்லுங்கள் என்றார். இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிவிட்டேன். எனக்கு சொந்தம் இல்லாத சொத்தை நான் எப்படி என்ன செய்யவேண்டும் என்று கூறமுடியும் என்று சொல்லி விட்டு ஊருக்கு வெளியே ஒரு கோவிலில் அமர்ந்துவிட்டார்.
அந்நாட்டின் மன்னர் பட்டினத்தாரின் செய்கையை கேள்விப்பட்டு அவரை தேடி சென்றார். மரத்தடியில் அமர்ந்தருந்த பட்டினத்தாரிடம் இந்நாட்டின் அரசன் நான் என்னுடைய சொத்துக்களால் வைத்து என்னால் கூட தங்களுடன் போட்டி போட முடியவில்லை. இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் சிறிய இடுப்பு வேட்டியுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் தங்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட்டது. தாங்கள் மீண்டும் பழையபடி வீட்டுற்கு செல்லுங்கள் என்று சொன்னார். இதனைகேட்ட பட்டினத்தார் அன்று என்னுடைய வீட்டிற்கு தாங்கள் வந்தபோது நான் எழுந்துவந்து உங்கள் முன் நின்றுகொண்டு பேசினேன். நீங்கள் பல்லாக்கில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இன்று நான் அமர்ந்துகொண்டு இருக்கிறேன். மன்னராகிய தாங்கள் என்முன் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் இதுவே நான் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி என்றார். இதனை கேட்ட மன்னன் தலைகுனிந்து அங்கிருந்து சென்றுவிட்டர்.
பெரும் செல்வந்தராய் இருந்த பட்டினத்தார் மாளிகையை இழந்து ஆடை அணிகலன் இழந்து ஒருவேலை உணவிற்கு அடுத்தவரிடம் யாசகம் பெற்று பரதேசி போன்று இருப்பதை கண்ட பட்டினத்தாரின் சகோதரி தனக்கு அவமானமாக இருப்பதால் அப்பம் செய்து அதில் கொடிய விஷத்தை கலந்து பட்டினத்தார் உண்பதற்காக கொடுத்தார். தன் ஞானத்தால் நஞ்சு கலந்திருப்பதை அறிந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை தன் சகோதரி வீட்டின் கூறைமீது வீசி எறிந்து தன் அப்பன் தன்னை சுட்டால் வீட்டப்பன் ஓட்டை சுடும் என கூறினார். சகோதரியின் வீட்டின் கூறையில் தீ பிடித்து மளமளவென எரியத்துவங்கியது. பட்டினத்தாரின் ஞானத்தை உணர்ந்த சகோதரி இவரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் அறிந்து திருந்தினால் நெருப்பு அணையும் என்று பட்டினத்தார் சொல்ல நெருப்பு உடனே அணைந்துவிட்டது. ஊரில் இருக்கும் அனைவரும் பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்து கொண்டார்கள். பட்டினத்தார் தான் வாழ்ந்த ஊரில் இருந்து கிளம்பி பல சிவ தலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது திருவெண்காடு என்னும் ஊரில் இருக்கும் திருவெண்காடரை தரிசித்து பாடல்கள் பாடினார். இத்தலத்தில் பட்டினத்தாருக்கு திருவெண்காட்டு நாதரே குருநாதராக வந்து சிவதீட்சை கொடுத்தார். இத்திருவிழா இகோவிலில் இப்போதும் நடைபெறுகிறது. திருவெண்காடர் என்ற பெயரை இக்கோவிலில் பட்டினத்தார் பெற்றார்.
மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊரில் வலம்புரநாதர் இறைவனை தரிசிக்க பட்டினத்தார் வந்திருந்தார். அவ்வூரில் இருந்த மன்னன் தனது தோசம் நிவர்த்திக்காக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அன்னதானம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இங்கு வந்த பட்டினத்தார் தனக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அன்னதானம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருக்கிறது காத்திருங்கள் என்று அவர்கள் உணவு தர மறுத்தனர். உடனே பட்டினத்தார் மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்தார். கோவிலில் பல நாட்கள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்தது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பட்டினத்தார் அக்கோவிலில் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரை வணங்கி ஆசிபெற்றனர். மன்னனின் தோசமும் விலகியது.
உஜ்ஜனியின் மாகாளம் என்ற இடத்திற்கு வந்த பட்டினத்தார் அங்கு இருக்கும் ஒரு கோவிலில் அமர்ந்து தியானத் செய்து கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசனாக இருந்தவர் பத்ருஹரி சிவபக்தியில் சிறந்தவராக இருந்தார். அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். தங்கள் இருப்பிடம் செல்லும் வழியில் இருந்த கோயிலில் தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை இறைவனுக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த மாணிக்கமாலை இறைவன் கழுத்தில் விழுவதற்கு பதிலாக அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி அரசன் வீரர்களை நாலாபுறமும் அனுப்பி கொள்ளையர்களைத் தேடச் சொன்னார். அனைத்து இடங்களிலும் வீரர்கள் திருடர்களை தேடிச்சென்றனர்.
கோயிலில் தியானத்தில் இருந்த பட்டினத்தாரையும் அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து அவர்தான் திருடன் என்று நினைத்து கைது செய்த வீரர்கள் அவரை அழைத்துச் சென்று அரசனின் முன்னிலையில் நிறுத்தினார்கள். மாணிக்கமாலை அவரின் கழுத்தில் இருந்ததை பார்த்த பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார். வீரர்கள் பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார் என் செயலாவது ஒன்றுமில்லை என்று தொடங்கும் பாடலைப் பாடியதும் கழுமரம் தானாக தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து தன்னை மன்னித்து தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார் அவருக்கு தீட்சை வழங்கினார். பத்ருஹரி அரசன் பட்டினத்தாரின் சீடராகி பத்திரகிரியார் என பெயர் பெற்றார்.
பட்டினத்தார் பத்ரகிரியாரிடம் திருவிடைமருதூர் கோவில் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் காலம் வரும் போது அங்கு வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பத்ரகிரியார் குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்து தினமும் பிச்சை ஏற்று மானசீகமாக குருவுக்கு சமர்ப்பித்த பிறகே தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு உணவை உண்ணும் வேளையில் பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார் அதற்கு சிறிது உணவு கொடுத்தார். அன்று முதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது. சில வருடங்கள் கழித்து பட்டினத்தார் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்தார். பட்டினத்தார் வருவதை பார்த்த பத்ரகிரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். குரு தனக்கு இறைவனை அடையும் வழியை காண்பிக்க போகிறார். இறைவனிடம் செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சியில் பட்டினத்தாரை வணங்கி நின்றார்.
பத்ரகிரியாருக்கு ஆசி வழங்கிய பட்டினத்தார் மேற்கு வாசலில் அமர்ந்திருக்குமாறும் தான் கிழக்கு வாசலில் அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு கிழக்கு வாசலில் அமர்ந்துவிட்டார். சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பட்டினத்தாரிடம் இறைவன் ஓர் ஏழை வடிவத்தில் வந்து பட்டினத்தாரிடம் பசிக்கிறது உணவு இருந்தால் கொடுங்கள் கேட்டார். அதற்கு பட்டினத்தார் மேற்கு கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே சென்று அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். இறைவனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் ஐயா எனக்குப் பசியாக இருக்கிறது கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு உணவு கேட்டபோது அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை தங்களிடம் அனுப்பினார் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என்று கூறினார். பதறிப்போன பத்திரகிரியார் நாடு அரசபதவி சொத்துக்கள் என அனைத்தையும் துறந்த எனக்கு இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும் நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே என்று வருந்தி பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது. பிச்சை ஓடும் உடைந்து போனது. பத்ரகிரியாருக்கு இருந்த சிறிய பற்றும் போனது. மேலும் சில வருடங்கள் பட்டினத்தாரும் பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோவிலிலேயே ஆளுக்கொரு வாசலில் அமர்ந்திருந்தார்கள்.
ஞானியாகிய பத்திரகிரியாரிடம் உணவு சாப்பிட்டதன் விளைவாக இறந்த நாய் தனது அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும் அரசன் வரன் தேட முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தது. தனது தந்தையிடம் அப்பா நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவமுனிவருக்கே உரியவள் என்று கூறினாள். அரசரும் பெண்ணை விசாரிக்க பெண் தான் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினாள். மேலும் பெண் பிறப்பதற்கு முன் தன் நாட்டில் நடந்த சம்பவங்களை சில கூறினாள். ஆச்சரியமடைந்த அரசரும் பெண் கூறுவதில் உண்மை இருப்பதாக நம்பினார். தவமுனிவரையே திருமணம் செய்து கொள்வேன் என்ற பெண்ணின் மன உறுதியைக் கண்டு திருவிடைமருதூருக்கு அரசர் தனது பெண்ணை அழைத்துச் சென்றார்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் மேற்கு வாசலுக்கு வந்த இளவரசி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கினாள். தாங்கள் உணவு கொடுத்து பசி தீர்ந்த தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள். நான் முதுமையில் இருக்கின்றேன். தங்களோ சிறு பிள்ளை. இறைவனை தேடி நாடு செல்வம் அரச சுகங்கள் அனைத்தையும் துறந்து சன்யாசியாகி இங்கு அமர்ந்திருக்கின்றேன். மீண்டும் உலக பந்த பாசத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை ஆகவே சென்றுவிடுங்கள் என்று கூறினார். இளவரசி பிடிவாதமாக இருந்தாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுர வாசலில் இருக்கும் தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம் வந்தார். குருவே எனக்கு என்ன சோதனை இது. எனக்கு முக்திநிலை கிடையாதா என்று கேட்டார்.
பட்டினத்தார் எல்லாம் மகாலிங்கன் செயல் அவரை தரிசியுங்கள் என்று கூறினார். பத்திரகிரியாரும் மகாலிங்கேச என்று கோவிலின் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவனை நோக்கி செல்ல அவர் பின்னே இளவரசியும் சென்றாள் அப்போது லிங்கத்தில் தோன்றிய பேரொளி பத்திரகிரியாரையும் இளவரசியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மறைந்தது. பட்டினத்தார் எமக்கு முக்தி அளிக்காமல் தன்னுடைய சிஷ்யருக்கு முக்தி கொடுத்துவிட்டாய். தனக்கு எப்போது என்று முக்தி கிடைக்கும் என்று இறைவனை வேண்டினார். அப்போது அசிரிரியாய் இறைவன் குரல் கேட்டது. இறைவனை நம்புகிறவனை விட குருவை நம்பும் சீடன் மிகச்சிறந்தவர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே அவருக்கு முக்தி அளித்தோம் உமக்கு நுனிக்கரும்பு என்று இனிக்கிறதோ அன்று முக்தி கிடைக்கும் என்று இறைவன் கூறினார். மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருந்து கிளம்பினார். பத்திரகிரியார் பாடிய பாடல்கள் மெய்ஞானப் புலம்பல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
பட்டினத்தார் தனது தாயாரின் இறுதி காலம் வந்துவிட்டதை அறிந்து தாயார் இருக்கும் ஊருக்கு வந்தார். தாயின் இறுதி சடங்கின்போது மரத்திலான விறகில் தனது தாயார் உடலை வைக்க வேண்டாம் வாழை மர மட்டையில் வையுங்கள் என்றார். அவர் கூறியபடியே உறவினர்கள் பச்சை வாழை மட்டையில் வைத்து சிதை அடுக்கினார்கள். அப்போது அவர் தாயை எண்ணி பாடல்கள் பாடினார். உடனே பச்சை வாழை மட்டை எரியத்தொடங்கியது. தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது கடமையை நிறைவேற்றினார் பட்டினத்தார்.
சேந்தனார் என்பவர் பட்டினத்தார் செல்வந்தராக இருக்கும் போது அவருக்கு கணக்கு பிள்ளையாக இருந்தவர். ஊருக்குள் பட்டினத்தார் வந்திருக்கும் தகவல் அறிந்த சேந்தனாரின் மனைவியும் மகனும் பட்டினத்தாரிடம் வந்து அழுது தொழுது முறையிட்டனர். ஜயா தங்களிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த சேந்தனாரின் மனைவி நான். இவன் எங்கள் பிள்ளை. தங்களின் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்த தங்களின் கணக்குபிள்ளை சேந்தனாரை மன்னர் சிறையில் அடைத்து விட்டார். தாங்கள்தான் சிறையில் இருந்து அவரை விடுவித்து அருள வேண்டும் என வேண்டினார்கள். அனைத்தையும் கேட்ட பட்டினத்தார் திருவெண்காடு சுவாமி சந்நிதிக்கு அனைவரையும் அழைத்துச் சென்று இறைவனை துதித்து பாடினார்.
பட்டினத்தாரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் வினாயகரை அழைத்து அரசனின் சிறையில் இருந்து சேந்தனாரை விடுதலை செய் என்றார். வினாயகர் துதிக்கையை நீட்டி சிறைச்சாலையில் இருந்த சேந்தனாரை விடுதலை செய்து பட்டினத்தார் முன் விட்டார். நடந்தது எதையுமே அறியாமல் தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல எழுந்த சேந்தனார் தன் எதிரில் பட்டினத்தார் இருப்பதைக் கண்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார். குருநாதா அரசர் வைத்த சிறையில் இருந்து விடுதலை அளித்ததைப் போல பிறவிப் பெருங்கடலில் இருந்தும் அடியேனை விடுவிக்க வேண்டும் என வேண்டினார். சேந்தனாரின் பக்குவ நிலையை அறிந்த பட்டினத்தார் சேந்தா குடும்பத்தோடு நீ தில்லைக்குப் போய் காட்டில் விறகு சேகரித்து வாழ்க்கை நடத்து. தினந்தோறும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்து வா நீ நினைத்தது நடக்கும் என்று சொல்லி வழிகாட்டினார். குருநாதரையும் திருவெண்காட்டு ஈசனையும் வணங்கிய சேந்தனார் பட்டினத்தார் சொற்படி தில்லையை அடைந்து அதன்படியே வாழ்க்கை நடத்தி இறைவனடி சேர்ந்தார்.
சீடர் பத்திரகிரியார் முக்தி அடைந்த பிறகு பட்டினத்தார் சிதம்பரம் கனகசபையையில் நடராஜப் பெருமானின் நடனத்தை தரிசித்தார். அங்கிருந்து வெளிவந்ததும் பசி உண்டாயிற்று. பட்டினத்தாரின் பசியைப் போக்க அன்னை சிவகாமசுந்தரி பெண் வடிவில் வந்து உச்சிக்காலப் பிரசாதத்தை அவரிடம் தந்தாள். பட்டினத்தார் உண்டு பசியாறினார். பட்டினத்தார் பசியாறியதும் அம்பிகை அங்கிருந்து மறைந்தாள். அதன் பின்னரே அவருக்கு உண்மை தெரியவர உலகாளும் அன்னையே எதிரில் வந்து உணவு தந்தும் உணராமல் ஏமாந்து போனேனே என புலம்பி பாடல்கள் பாடினார்.
பட்டினத்தார் காஞ்சியை அடைந்து சுவாமி தரிசனம் செய்து கச்சித் திருவந்தாதி, திருவேகம்பமாலை, கச்சித் திருவகவல் முதலிய பாடல்களைப் பாடி சில நாட்கள் தங்கினார். ஒரு நாள் பசி தாங்காமல் இறைவனை நினைத்து பாடல்கள் பாட அம்பிகை காமாட்சி சுமங்கலி வடிவத்தில் வந்து அவருக்கு உணவளித்தாள்.
காளத்தி நாதனை தரிசிக்க காளாத்தி நோக்கி நடந்தார். இறைவனை தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் பகல் இரவு பாராமல் எப்போது உன்னைக் காணவல்லேன் காளத்தி ஈஸ்சுரனே என்றபடி காட்டிற்குள் நடந்து கொண்டிருந்த பட்டினத்தாருக்கு காட்டில் இருந்த கொடூரமான ஜீவன்கள் கூட உதவி செய்தன. காட்டு யானைகள் முன்னால் நடந்து போய் முள் சிறுகட்டைகள் முதலியவற்றை நீக்கி வழியை உண்டாக்கின. புலிகள் தங்கள் வால்களால் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தன. வாயில் புல் கொண்ட மான்கள் அணிவகுத்து நின்று வழி காட்டின. மயில்கள் தோகைகளாலும் பறவைகள் சிறகுகளாலும் விசிறியும் நிழல் தந்தும் உதவின. குரங்கு முதலான விலங்கினங்கள் உணவுக்கு காய் கனி கிழங்குகளைக் கொண்டு வந்து தந்தன. பட்டினத்தாரின் உள்ளம் நெகிழ்ந்தது. என்ன செயல் என்ன செயல் அனைத்து பெருமையும் காளத்தி ஈசனுக்கே உரியது என்று பாடல்கள் பாடி காளாத்திஸ்வரரை தரிசித்தார்.
கரும்பை காணும் போதேல்லாம் நுனிக்கரும்பு இனிக்கிறதா என்று சாப்பிட்டு பார்த்து ஊர் ஊராக சிவனை தரிசித்துக்கொண்டு வந்தார். சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் வந்த பொழுது அவருக்கு நுனிக்கரும்பு இனித்தது. முக்தி அடைய நேரம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்த பட்டினத்தார் அங்கிருக்கும் கடற்கரைக்கு சென்றார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு தனது சித்துக்கள் மூலம் இனிப்புகள் கொடுத்து மகிழ்வித்தார்.
தன் அமர்ந்து கொள்கிறேன் என்னை ஒரு கூடை கொண்டு முடிவிடுங்கள் நான் வேறு இடத்தில் இருந்து வருகிறேன் இப்படியாக நாம் விளையாடலாம் என்றார். மகிழ்ந்த சிறுவர்கள் பட்டினத்தாரை ஒரு கூடையை வைத்து மூடிவிட்டு கூடையை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பட்டினத்தார் வேறு இடத்தில் இருந்து வந்தார். குழந்தைகள் வியப்போடு ஓடி வந்தார்கள். மறுபடியும் தன்னை மூடிவிட சொன்னார். வேறு இடத்தில் இருந்து வந்தார். பல தடவைகள் இவ்வாறு நடந்தது. சிறுவர்களுக்கு உற்சாகம் உண்டானது. ஒரு முறை மூடிய பொழுது வெளியில் எங்கும் இருந்து பட்டினத்தார் வராததால் கூடையை திறந்து பார்த்தார்கள் சிறுவர்கள். அதனுள் பட்டினத்தார் இல்லை. சிவலிங்கமாக காட்சியளித்தார்.
பட்டினத்தார் பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை
- கோயில் நான்மணிமாலை
- திருக்கழுமல மும்மணிக்கோவை
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
- திருஏகம்பமுடையார் திருவந்தாதி
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது
ஐயா,
வணக்கம்!
எனக்கு தயை கூர்ந்து மூலவர் படம் உட்பட 4 படங்களையும் என்னுடைய இமெயிலுக்கு அனுப்புமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
🙏 ஓம் நமசிவாய 🙏
அனுப்பி விட்டோம்
vanakkam
naanum en kudubathaarum kovilukku vanthoam angu en magan irai paatha adikalai kandathaaga koorinan
om namachivaya
நண்பர் சரவணன் அவர்களுக்கு வணக்கம். பட்டினத்தார் குறித்த வாழ்க்கை வரலாறு கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. கட்டுரையை வாசித்த பிறகு பட்டினத்தார் படத்தை காண புரியாத விசயங்கள் அனைத்தும் புரிந்தது.
இந்த வலைப்பூவில் பதிவு செய்த புகைப்படங்களை எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய!
நன்று அனுப்பி வைக்கிறோம்
ஐயா…. வணக்கம்🙏🙏 பல சித்தர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படித்து பயன்படுத்தி வருகிறேன் தாங்கள் தாங்கள் தலத்தில் அனைத்து பதிவுகளும் அற்புதம் எனக்கு பட்டினத்தார் வரலாற்றை தற்போது அனுப்பி வைக்க தாழ்மையுடன் , இதோ போன்று வாலை பொன்தேவி சித்தர்கள் வழிபடும் தெய்வத்தை பற்றி அனுப்பி தரவல்லது ஐயா…
நன்று அனுப்பி வைக்கிறோம்
ஐயா எனக்கு மூலவர் படம் உட்பட அணைத்து படங்களையும் அனுபவும் [email protected] அல்லது 8610307060 WhatsApp
வலைதளத்தில் இருக்கிறது அனைத்து படங்களும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். இயலவில்லை என்றால் சொலுல்ங்கள் அனுப்பி வைக்கிறோம். நன்றி
அருமையான தொகுப்பு. மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. படிக்கும் போது இடையில் நிறுத்தவே மனம் வரவில்லை. தொடர்ந்து படிக்கவே ஊக்கப்படுத்துகிறது. பட்டினத்தார் கையில் கரும்பு ஏன் உள்ளது என்று இன்று நான் தெரிந்து கொண்டேன்.
வணக்கம் ஐயா.. இன்று அவ்வழி சென்ற போது பட்டினத்தார் கோயில் வழிபாடு செய்தோம்.. பிறகு தான் வரலாறு தங்கள் பதிவில் படித்தேன்.. அருமை ஐயா
எல்லாம் அவன் செயல். அவன்னன்றி ஓர் அணுவும் அசயா. பெருஞ்செல்வன் பட்டினத்தாரின் வரலாற்று பதிவு மிக அருமை. முதன்முறையாக பட்டினத்தாரின் அவதார பெருமையை உணர செய்தீர்கள். மிக்க நன்றி.
முத்தி அடைந்த தலம் எங்கே உள்ளது
சென்னை திருவொற்றியூர்
பட்டினத்தார் விபரக்குறிப்பு அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று நிறைவேறியது. நன்றி
arumai ayya
. பட்டினத்தாரின் வரலாறு படித்தேன் மனதிற்கு ஒரு தெளிவு பிறந்தது. அவர் பாடியபகை கடிதல் தினமும் படிக்கிறேன் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது
சிவாயநம சிவ கருணையால் திரு பட்டினத்தார் வரலாறு மிகவும் சிறப்பு அவர்கள் வாழ்ந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டது மிக்க மகிழ்ச்சி சிவாயநம 🙏