ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடத்தில் உள்ள ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். அவர் ராமனுடைய வரலாற்றை முழுவதுமாக படித்து ராம நாமத்திலேயே இருப்பார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப்பட்ட போது மக்களிடம் வரியாக வசூலித்த பொற்காசுகள் இருந்தது. அந்தப் பொற்காசுகளை அப்படியே கோவில் கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா என்னிடம் அனுமதி வாங்காமல் வரிப்பணத்தை எடுத்து நீ எப்படி கோவில் கட்டலாம் என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்தான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமர் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பொற்காசுகளை கொடுத்தது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது கோபண்ணாவுக்கு தெரிந்தது. ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். இன்றும் ஆந்திராவில் உள்ள ஒரு மியூசியத்தில் ராமர் நவாப்பிடம் கொடுத்த அந்த பொற்காசுகள் நவாப்பின் பொற்காசுகள் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.