சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 218 வது தேவாரத்தலம் திருவதிகை. புராணபெயர் தியாகவல்லி. மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர். இங்கு இறைவன் 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கமாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, திரிபுர சுந்தரி. தலமரம் சரங்கொன்றை. தீர்த்தம் சூலத்தீர்த்தம், கெடிலநதி. இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். இக்கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் கரண நடன சிற்பங்கள் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 நிலைகளையுடைய இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. ஒருபுறம் முருகப் பெருமானும் மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. 3வது சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறைச் சுவற்றில் சிவன் பார்வதி கல்யாணத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லை. மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளது. எனவே பஞ்சமுகலிங்கம் என்று பெயர் பெற்றது.
நடராச சபை உள்ளது. திருவதிகை ஊரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று திலகவதியார் தன் தம்பியாகிய திருநாவுக்கரசரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட இறைவன் சூலை தந்து ஆட்கொள்வோம் என்று பதிலுறைத்தார். திலகவதியார் ஐந்தெழுத்தை ஓதி இறைவனது திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்ந்த கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார். உழவாரம் முதன் முதலில் திருநாவுக்கரசரால் இங்கு தான் செய்யப்பெற்றது.
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். பின்பு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும் சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை குதிரைகளாகவும் பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது.
பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவு தான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். இந்த புராண வரலாறு திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார். இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தினால் தான். சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தாரின் அவதாரத் தலம்.
கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரானின் அமர்ந்த நிலை சிற்பமும் இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரானின் நின்று கைகூப்பிய நிலை சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர். இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் திருநாவுக்கரசருக்கு பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார். இன்றும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருநாவுக்கரசருக்கு விழா நடக்கின்றது. இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது. இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தருக்கு இங்கு இறைவன் திருநடன தரிசனம் காட்டியிருக்கிறார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.