துளசி தாசர் இயற்றிய நூல் இராம சரித மானஸம் ஆகும். இராமசரிதமானசா என்பதற்கு இராமர் வாழ்க்கையின் குளம் என்று பொருள்படும். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நூலில் துளசிதாசர் இராமரைப் பற்றிய சில கூடுதல் கதைகளையும் சேர்த்துள்ளார். துளசிதாசர் 1511-1623 காலத்தில் வாழ்ந்த ஒரு துறவியும் கவிஞரும் ஆவார். இவர் இராம பக்தியில் சிறந்து விளங்கினார். இந்நூலை அவாதி மொழியில் துளசிதாசர் எழுதினார். அவாதி மொழியைத் தவிர போஜ்புரி மற்றும் பிராஜ்பாஷா மொழிகளிலும் எழுதினார். வால்மீகி இராமாயணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் பலருக்கும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. துளசிதாசர் எழுதிய இராம சரித மானசா மூலம் பலரால் இராமாயணத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடிந்தது. துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை தரிசித்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.
மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணத்தில் சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுவது போல் ஒரு காட்சி உள்ளது. அதில் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார். நாபதாசர் என்ற சான்றோர் ஒருவர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும் துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதியிருக்கிறார். இதனை சான்றாக வைத்து வட இந்தியாவில் பலர் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று நம்புகிறார்கள். துளசிதாசரின் இராம சரித மானஸம் என்ற இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் செல்ல சரஸ்வதிதேவி காரணம் என்று எழுதியிருக்கிறார். அந்நூலில் உள்ளபடி
ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் இந்திரன் அந்த அவைக்குள் பிரவேசித்தான். தேவர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் என்னவாயிற்று? என்று இந்திரன் விசாரித்தான். அதற்கு தேவர்கள் அயோத்தி நகரம் முழுவதும் விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அயோத்தி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். தசரதன் மகன் இராமனுக்கு பட்டாபிஷேத்துக்கான நாள் குறித்து விட்டார்கள். இராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியின் மன்னனாகி விட்டால் அரக்கன் இராவணனையும் மற்ற அரக்கர்களையும் வதைப்பது எப்படி? இராமரின் அவதார நோக்கம்தான் என்னாவது? என்று வருத்தத்துடன் கேட்டனர் தேவர்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம்? என்று அதிர்ச்சியோடு கேட்டான் இந்திரன். நெடுநேரம் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்ம தேவரை சந்தித்து தங்கள் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி அவரின் உதவியைக் கோரினர். பிரம்ம தேவர் அவர்கள் அனைவரையும் சரஸ்வதி தேவியை சந்தித்து வேண்டும்படியும் சரஸ்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியைச் சந்தித்து நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி வேண்டி நின்றனர். அதைக் கேட்ட சரஸ்வதி தேவி மிகவும் வருத்தத்துடன் நீங்கள் சொல்லும்படி நான் நடந்தால் உலகமே என்னை தூற்றுமே இதை என்னால் செய்ய முடியாது என்று மறுத்துக் கூறினாள். ஆனாலும் உலக நலனுக்காக இதை அவசியம் நீங்கள் செய்யத்தான் வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்காக இதை வேறு யாரும் செய்ய முடியாது என தேவர்கள் சரஸ்வதி தேவியிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர். இராமன் வனவாசம் செல்வதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சரஸ்வதி தேவி மீண்டும் மறுத்துக் கூற தேவர்களோடு பிரம்மாவும் சேர்ந்து சரஸ்வதி தேவியிடம் வற்புறுத்தி வேண்டினர்.
இராமர் வனவாசம் சென்றால் அரக்கன் இராவணன் மற்றும் பல அரக்கர்கள் இராட்சஸர்கள் அழிவார்கள். இராமரின் பராக்கிரமம் இந்த உலகத்திற்கு தெரியவரும். இராமாயணம் எனும் புனிதக் காவியம் இப்பூமிக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் உன்னுடைய ஒரு செயலில் இருக்கிறது என்று சரஸ்வதி தேவியிடம் பிரம்மா எடுத்துச் சொல்லி சரஸ்வதி தேவியை சம்மதிக்க வைத்தார். பிரம்மாவின் ஆலோசனையின்படி கலைமகள் சரஸ்வதி தேவி மந்தரையின் ரூபத்தில் கைகேயின் மனதில் பரதன் நாடாள வேண்டும். இராமன் வனவாசம் செல்ல வேண்டும் எனும் நச்சு ஆலோசனை ஊட்டினாள். துளசி தாசர் இயற்றி இராம சரித மானஸம் என்னும் இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் சென்றதற்கு இப்படி ஒரு புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறது.
