சக்தி பீடத்தில் 23 ஆவது கோயில் ஸ்தாணுபிரியை கோயிலாகும். இக்கோயில் ஹரியானாவில் அமைந்துள்ளது. மகாபாரத யுத்தம் நடைபெற்ற குருசேத்திர இடத்தில் இக்கோயில் இருப்பதாக கருதப்படுகிறது. இக்கோயில் உபதேச சக்தி பீடமாகும். பகவான் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனுக்கு பகவத் கீதையை வெளிப்படுத்தியதால் இது உபதேசபீடம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ தேவி மகா பாகவதம் இத்தலத்தை முக்கியமான புனித தேவி தலமாக குறிப்பிடுகிறது. இக்கோயிலில் பார்வதி ஸ்தாணுப்பிரியா என்ற பெயரிலும் சிவன் அஸ்வநாத் என்ற பெயரிலும் உள்ளார்கள். சிவனுக்கு சானு சம்வர்தன் என்ற பெயரும் உள்ளது. தேவியின் வலது கணுக்கால் விழுந்த இடமாக கருதப்படுகிறது. இதற்கு சான்றாக இப்போதும் கோயிலில் அம்பாளின் கணுக்காலுடன் கூடிய பாதம் தனியாக வைத்து வழிபடப்படுகிறது. இப்பாதம் வெள்ளை நிற கற்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. தேவியின் வலது கை இங்கு விழுந்ததாக மற்றொரு புராண நூல் கூறுகிறது. அம்பாள் இக்கோயிலில் உக்ர சொரூபமாக இருக்கிறாள். தீர்த்தம் பிரப்ப சரோவர் தீர்த்தம். மேலும் பல தீர்த்தங்கள் உள்ளது. சூரிய கிரகணத்தன்று இந்த தீர்த்தத்தில் குளித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கோயில் புராணம் சொல்கிறது.
மகாபாரதப் போருக்குப் புறப்படுவதற்கு முன் பாண்டவர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து தங்கள் வெற்றிக்காக வேண்டி இக்கோயிலில் வழிபாடு செய்து தங்களுடைய தேர்களின் குதிரைகளை நன்கொடையாக அளித்தனர். இது ஒரு பழங்கால பாரம்பரியமாக வெள்ளி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை வழங்கினார்கள். குந்தி (பாண்டவரின் தாய்) தேவி ஸ்தாணுப்ரியா மற்றும் அஸ்வநாதரின் பக்தையாக இருந்துள்ளாள். பீஷ்மா மரணப் படுக்கையில் இருந்த போது அவரது தாகத்தை தீர்க்க அர்ஜுனன் தரையில் அம்பு எய்து ஒரு நீரூற்றை உருவாக்கினான். அந்த நாள் வசந்த காலம் மற்றும் பானா கங்கா சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் ஒரு திருவிழாவாக இங்கு நடத்தப் படுகிறது.