தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 256 திருவேற்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 256 வது தேவாரத்தலம் திருவேற்காடு. மூலவர் வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளார் அம்பாள் பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை. தலவிருட்சம் வெள்வேலமரம். தீர்த்தம் வேததீர்த்தம், பாலிநதி, வேலாயுத தீர்த்தம். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது. கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. அவர் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது.

பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின் சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப்படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். முருகர் வழிபட்ட அந்த ஸ்கந்த லிங்கம் முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் இப்போதும் அந்த சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியிருக்கிறார். அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு விடந்தீண்டாப்பதி என்ற பெயரும் உண்டு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. பிருகு முனிவரின் சாபத்தால் திருமால் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என தல புராணம் கூறுகிறது. சிவன் ஒரு முறை பார்வதியிடம் இத்தலத்தை மனதால் நினைத்தாலும் ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும் இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார் எனவும் தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி ஆகிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 255 திருமுல்லைவாயில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 255 வது தேவாரத்தலம் திருமுல்லைவாயில். புராணபெயர் திருவடமுல்லைவாயல். மூலவர் மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் கொடியிடை நாயகி, லதாமத்யாம்பாள். அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால் கொடியிடைநாயகி எனப்படுகிறாள். தலவிருட்சம் முல்லை. கொன்றை. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம். இத்தலத்தில் உள்ள உயரமான சுயம்புலிங்கம் சதுரபீட ஆவுடையார் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும். இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள். ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. மூலவரின் விமானம் யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது.

இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும் துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும் கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி உள்ளார். அவருக்குப் பின்னால் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் மன்னருக்கு துணையாகச் சென்றதால் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆன ரசலிங்கம் உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர் ராமரின் பிள்ளைகள் லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர் உள்ளனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன் ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன் யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய் கீழே இறங்கி பார்த்தபோது மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில் உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மன்னனுக்கு காட்சி தந்தார் வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும் வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம் என்றும் கூறி அருள் செய்து நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன் அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து மாசிலாமணீஸ்வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம். மேலூரில் வீற்றிருக்கும் திருவுடையம்மன், திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மன், இத்தலத்து கொடியிடையம்மன் மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்கிறது தலவரலாறு. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 254 பாடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 254 வது தேவாரத்தலம் பாடி. புராணபெயர் திருவலிதாயம். மூலவர் திருவல்லீஸ்வரர், வலிதாயநாதர், திருவலிதமுடையநாயனார். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்குப் நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் ஜகதாம்பாள், தாயம்மை. தலவிருட்சம் பாதிரி, கொன்றை. தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம். இறைவன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னப்பட புதிய திருவுருவம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து பின்னமான திருவுருவத்தை இறைவன் கருவறைக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோவில் 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம் நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.

வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தில் சூரியன், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம் நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருக்கின்றது. வியாழன் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். வியாழபகவானின் மகனான பரத்வாஜர் சாபம் காரணமாக கரிக்குருவியின் பிள்ளையாக வலியன் என்னும் கருங்குருவியாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான் இத்தலம் திருவலிதாயம் என்றும் சிவன் வலியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், கருங்குருவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 253 திருவொற்றியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 253 வது தேவாரத்தலம் திருவொற்றியூர். மூலவர் ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், தியாகராஜர், ஒற்றீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைஅம்மன், வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம், திரிபுரசுந்தரி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி சேவையில் காட்சி தருகிறார். தலவிருட்சம் மகிழம், அத்தி. தீர்த்தம் பிரம்மதீர்த்தம், நந்தி தீர்த்தம். திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானமாக இருக்கின்றார்கள். வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன் என இரண்டு அம்பாள்கள், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள். காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் பெற்றது. மற்றொரு காரணமாக இங்குள்ள இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் ஒற்றிக் கொண்டதால் அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும் வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வாசுகி என்னும் நாகம் உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர் படம்பக்கநாதர் என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால் அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை. இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிக்கின்றனர்.

ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. கோவிலின் பின்பக்கம் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. ஒரு சிவலிங்கம் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். இவருக்கு ஆவுடையார் கிடையாது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும் அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன் தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன் அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள் வட்டப்பாறையம்மன் என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில் தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் திருப்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர் ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தான். வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவார். கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு இரவில் எழுதினார். அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நல்லிரவில் பிந்தாமல் பந்தம் பிடி என பாடல் பாட அவ்வாறே காளியன்னையும் அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்திருக்கின்றாள். கௌலீஸ்வரர் என்ற பெயரில் ஓர் சிவன் இக்கோயிலில் தனிச்சன்னதியில் இருக்கிறார். ரூபத்துடன் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் இடது மேல் கையில் ஓடு வைத்து கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். கலிய நாயனாரின் அவதாரத் தலம் ஆகும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. இங்குள்ள அருள்ஜோதி முருகன் அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். நந்திதேவருக்காக சிவன் இத்தலத்தில் பத்ம தாண்டவம் ஆடிக்காட்டியிருக்கிறார். 27 நட்சத்திரங்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்றது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர் பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும். இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். மூன்று அம்பிகையர்களும் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர் இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம் அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்க தியாகர் என்றும் அழைக்கப்படுகிறார். கலியனார் என்னும் சிவபக்தர் இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன் வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது.

சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார் என்னும் பெண்மணி சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர் இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம் சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம் சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால் இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம் சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர் தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும் அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொண்டார். இன்றும் மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழா மகிழடி சேர்வை ஆகும். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர்.

இங்குள்ள மகிழ மரத்தடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். வள்ளலார் வடிவுடையம்மன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன் இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன் இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு திருவொற்றியூர் என பெயர் உண்டானதாக ஓர் வரலாறு உள்ளது. வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் ஞான தீபமாக இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். தேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது இத்தலம். இத்தலத்திற்கு திருநாவுக்கரசரின் பதிகங்கள் 5, ஞானசம்பந்தர் பநிகம் 1, சுந்தரர் பதிகங்கள் 2 என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. இக்கோயிலில் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், இராஷ்டிர கூடர்கள், விஜய நகர மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலில் 200 மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பல தமிழ் வரிவடிவத்தில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி.1215 ம் ஆண்டு 56 நாட்கள் கோவில் திருநாட்களை நடத்த உத்தரவிட்டுள்ளதை கல்வெட்டின் மூலம் அறியலாம். ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள், வள்ளலார் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், வள்ளலார் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 252 காளஹஸ்தி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 252 வது தேவாரத்தலம் காளஹஸ்தி. புராணபெயர் சீகாளத்தி, திருக்காளத்தி. மூலவர் காளத்தீசுவரர், காளத்தியப்பர், காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அம்பாள் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை. அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். அம்பாளின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு. தலமரம் மகிழம்.

இக்கோவில் வாயு (காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும் நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும் மேற்புறத்தின் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். மூலவர் தீண்டாத் சிவலிங்கத் திருமேனி ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது உள்ள தங்கக் கவசம் பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது சார்த்தும் போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியை இங்கு உள்ள குருக்கள் தீண்டுவது இல்லை. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு கங்கைநீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகிறது.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளையில் நந்தியுமாக இரு நந்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும் 60 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் ஆகியோர் பிரதிஷ்டை செய்த பல சிவலிங்கங்களும் ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சக்தி வாய்ந்த எந்திரம் இருக்கிறது. பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள்.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்கு பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளியுள்ளார். சைவ மதத்தின் திருக்கடவுளான சிவபெருமான் மீது பெரும்பிரியம் கொண்டிருந்த வேடனான கண்ணப்பன் என்பவர் தினமும் தான் வேட்டையாடிய விலங்குகளையே இங்கே காளஹச்தீஸ்வரருக்கு படைத்து வழிபட்டு வந்திருக்கிறார். எம்பெருமானுக்கு புலால் படைக்கப்படுவது கண்டு கோபம் கொண்ட காளஹச்தீஸ்வரருக்கு பூசை செய்து வழிபடும் சிவ கோசரியார் என்ற அந்தணர் சிவபெருமானிடம் வேண்டி முறையிடுகிறார். சிவ கோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான் கண்ணப்பன் என்மீது கொண்ட அதீத பக்தியின் வெளிப்பாடாகவே தனக்குத் தெரிந்த வகையில் எனக்கு சேவை செய்கிறான். என் மீது கொண்ட அவனது பக்தியை உமக்கு உணர்த்துகிறேன் என்று சொல்லி மறைகிறார். அடுத்த நாள் கண்ணப்பன் சிவனுக்கு பூசை செய்வதை சிவ கோசரியார் மறைந்திருந்து காண்கிறார். அப்போது லிங்கத்தின் கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறது சற்றும் யோசிக்காத கண்ணப்பன் அம்பு கொண்டு தன்னுடைய ஒரு கண்ணை தோண்டியெடுத்து லிங்கத்தின் கண் மேல் வைக்கிறார். ஒரு கண்ணில் ரத்தம் நின்று கொஞ்ச நேரத்தில் லிங்கத்தின் மறு கண்ணிலும் ரத்தம் வரவே சற்றும் யோசிக்காத கண்ணப்பன் ரத்தம் வரும் இடத்தை அடையாளம் காண தன் ஒரு காலை லிங்கத்தில் ரத்தம் வரும் இடத்தில் வைத்தபடியே அம்பினால் தன்னுடைய மற்றொரு கண்ணையும் எடுக்க எத்தனித்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி நில் கண்ணப்பா என்று கூறி தடுத்தி நிறுத்தி அவருக்கு முக்தி வழங்கினார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் இப்போதிருக்கும் காளஹச்தி கோயில்.

திருமஞ்சனக் கோபுரம் எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியே தான் திண்ணனார் என்ற கண்ணப்பர் நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். கண்ணப்பரின் பக்தியை ஆதிசங்கரர் தனது சிவானந்தலஹரியில் பாடியுள்ளார். கண்ணப்பர் தனது வாயில் நீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு விபூதி வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார். இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார். இன்றும் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பாதாள விநாயகர் சந்நிதி விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம் பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது. நாள்தோறும் நான்கு கால பூஜைகளே நடக்கின்றன. அர்த்தசாமப் பூஜை இல்லை ஆகையால் சாயரட்சை பூஜையுடன் முடித்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதேபோன்று சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம் பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது. ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான் அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன். புராண பெயரான சீகாளத்தில் என்ற சொல்லில் சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம் அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும் அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப்பெயர் பெற்றது.

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான் வாயுதேவனே நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன். போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும் அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சண்டேசுவரர் சந்நிதியில் மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் ஓரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி உடைத்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டது. அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே ஆகும். நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி என்ற பாடல் பாடியுள்ளார்.

அருச்சுணன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டு பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றிருக்கிறார். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் பிரவேசித்தால் முக்தி என தலபுராணம் கூறுகிறது. வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உள்ளது. வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் காளிகோபுரம், நூற்றுக்கால் மண்டபம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. கோயிலின் பிரதான வாயிலில் உள்ள பிக்ஷசாலா கோபுரமும் ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும். பிரதான தக்ஷிண கோபுரம் 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டது. கண்ணப்பர் கோயிலும் கோவிலைச் சுற்றியுள்ள மண்டபமும், தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் புத்தங்கையாரால் கட்டப்பட்டது. உட்பிரகாரம் 5ஆம் நூற்றாண்டிலும் வெளிப்பிரகாரம் 12ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது. பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். சோழ விஜயநகர காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் தென்கயிலாயமுடையார் என்றும் திருக்காளத்தி உடைய நாயனார் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் காளத்தி உடையான் மரக்கால் என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது. காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னரான இராஜராஜ சோழனின் மகன் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் வழிபட்டுள்ளனர். இங்கு வந்து பாடிய திருஞானசம்பந்தர் இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர் ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிட்டு பாடுகிறார். திருநாவுக்கரசர் காளத்தி வந்து வழிபட்டபோது வடகயிலை நினைவு வர கயிலைக் கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். சுந்தரர் இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் தலங்களைப் பாடி வழிபட்டார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 251 திருக்கண்டலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 251 வது தேவாரத்தலம் திருக்கண்டலம். புராணபெயர் திருக்கள்ளில். மூலவர் சிவானந்தேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் ஆனந்தவல்லி. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் நந்தி தீர்த்தம். இக்கோயிலில் சிவன் சக்தி தட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும் ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும் அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கின்றது. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும் காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.

பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன் பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. பின்னர் பிருகு பூலோகத்தில் சிவதல யாத்திரை வந்தபோது கள்ளில் என்ற ஒரு வகையான மரம் வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன் அவர் முன்பு தோன்றி சிவமும் சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும் சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது என்று உபதேசம் செய்து அம்பாளை தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர் அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு தன்னையும் சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருளினாள். எனவே அம்பாள் ஆனந்தவல்லி என்ற பெயர் பெற்றாள்.

இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமி அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு திருக்கள்ளீஸ்வரர் என்ற பெயரும் தலத்திற்கு திருக்கள்ளில் என்ற பெயரும் இருக்கிறது. அகத்தியருக்கு காட்சி தந்தது போலவே சிவன் அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இக்கோயில் இருக்கிறது. திருவெண்பாக்கம் தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி விட்டு தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குசஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள் விபூதி பிரசாதம் ஆகியவற்றை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். குளித்து விட்டு திரும்பி வந்தபோது அப்பொருட்களைக் காணவில்லை. அதனைத் தேடிய திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜைப்பொருட்களை மறையச்செய்து அருள் செய்ததாக அசரீரியாக ஒலித்தார் சிவன். திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம் பாடினார்.

இங்குள்ள நந்தி பகவானுக்கு இறைவன் பெயரிலேயே சிவா நந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காண வேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம் தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர் திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி இத்தலத்தையும் தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன் அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார் சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி சிவாநந்தீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். திருஞானஞம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 250 திருவெண்பாக்கம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 250 வது தேவாரத்தலம் திருவெண்பாக்கம். மூலவர் ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தடிகௌரி அம்பாள், மின்னொளியம்மை. தலவிருட்சம் இலந்தை. தீர்த்தம் குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை உள்ளது. தேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. இந்த இடம் இலந்தை மரக்காட்டுப் பகுதியாக இருந்தது. சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான்.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களுடன் இருந்தது. சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த ஊண்றீஸ்வரர் ஆலயம் இருந்தது. எனவே திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு தற்போதுள்ள இடத்தில் பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லில் பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன. சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறிய போது அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன் தடுத்து விட்டார். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம் தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பது ஒரு ஊழ்வினைப்பயனே கலங்காது செல்லுங்கள் என்றார். தகுந்த காலத்தில் இறைவன் அருளால் பார்வை கிடைக்கும் என்று சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாள். இதனால் அம்பாள் மின்னொளி அம்பாள் என்றும் கனிவாய்மொழிநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர் திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவன் அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்றார். தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர் சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 249 திருப்பாசூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 249 வது தேவாரத்தலம் திருப்பாசூர். மூலவர் வாசீஸ்வரர், பாசூர்நாதர், பசுபதீஸ்வரர்.. இறைவன் இத்தலத்தில் சதுரவடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் பசுபதிநாயகி, மோகனாம்பாள், தங்காதளி அம்பாள். தலவிருட்சம் மூங்கில். தீர்த்தம் சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருக்கிறார். காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

சிவன் இங்கு லிங்க வடிவிலும் பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும் கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் உள்ளது. வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்பாள் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் உள்ளது. முன்புறம் மூன்று பின்புறம் மூன்று என ஆறு விநாயகர்களும் இவர்களுக்கு இடப்புறம் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்காக பொய் சொன்னதால் தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள் சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இங்கிய சிவன் அம்பாளை தன் காதலியே என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினார். இதனால் இங்குள்ள அம்பாளை தங்காதலி அம்பாள் என பெயர் பெற்றாள். அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு தங்காதலிபுரம் என்ற பெயரும் உண்டு.

பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை கரிகாலசோழ மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன் சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். சிவலிங்கத்தின் மீது இன்றும் வெட்டிய தழும்புகள் அடையாளமாகத் திகழ்கின்றன. மறுநாள் மன்னனின் சமண எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும் மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர் வாசீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அரசர் மீது எதிரிகள் ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தாட்டினார் .இதை திருநாவுக்கரசர் இத்தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மது கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலை செய்யமுடியவில்லை. எனவே மகாவிஷ்ணு மீன் அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தார். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு வெற்றி பெற்றார். மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான். சோழர் காலக் கல்வெட்டுகளும், மற்றய காலத்தவைகளும் ஆக 16 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் இக்கோயிலுக்குச் செய்தற்க்கான தருமங்கள் தெரியவருகின்றன. ராஜராஜன் பூஜைக்காக 47 பொன்காசுகள் விளக்கிற்காக 32 பசுவும் முரசுவாத்தியத்திற்காக 1 எருதும் அளித்தான் என்றும் குலோத்துங்கன் காலத்தில் திருஆபரணத்திற்காக ஒருபெண் 30 பொன்காசும் நாள்ஒன்றுக்கு 2 படி அரிசியும் கொடுத்ததாகத் தெரியவருகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 248 திருவாலங்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 248 வது தேவாரத்தலம் திருவாலங்காடு. மூலவர் வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர், ஊர்த்துவ தாண்டவர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி. தலவிருட்சம் பலா, ஆலமரம். தீர்த்தம் முக்தி தீர்த்தம், சென்றாடு தீர்த்தம். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை. இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார் இக்கோவிலில் தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் காலடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இக்கோவில் காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம். முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

கிழக்கில் 5 நிலை இராஜகோபுரத்துடன் நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். நுழைவு வாயிலைக் கடந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம் உள்ளது. கோபுரத்தில் சிவபெருமானின் ஐந்து சபைகளும் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு, மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர், சஹஸ்ரலிங்கம், சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார். இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும் சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம் என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும் என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

புனிதவதி என்ற அம்மையார் காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள். நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும் புனிதவதிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடுந்ததும் புதுமணத் தம்பதியினறை தனதத்தனார் தனிக்குடித்தனம் அமர்த்தினார். பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் ஒருவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். அக்கனிகளை அவர் புனிதவதியிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார். அவ்வேளையில் அமுது ஆகாததால் மாங்கனிகளுள் ஒன்றை கொடுத்து அனுப்பி வைத்தார் அவ்வம்மையார். பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் படைத்தார். கனி சுவை மிகுந்து காணப்பட்டதால் மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் கேட்டார். செய்வதறியாது திகைத்த அம்மையார் சிவனை வேண்டினார். இறைவனருளால் இன்னொரு கனியையும் பெற்றாள். கணவன் இக்கனி எப்படி வந்ததென வினவினான். சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார். அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன் அப்படியென்றால் சிவனிடம் வேண்டி இன்னொரு கனி பெற்றித் தருமாறு கேட்க சிவனருளால் மீண்டும் ஒரு கனி தோன்றி மறைந்தது.

அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து அவரிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தார். அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான். இதனிடையே வணிக நிமித்தம் வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்தான். மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். இதனிடையே புனிதவதியாரின் பெற்றோர்கள் தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் மருமகனின் இருப்பிடம் சென்றடைந்தனர். பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து வணங்கினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார் தன் உடலை வருத்தி பேய் உருக்கொண்டு அம்மையார் கயிலாயம் வரை சென்று திருக்கயிலாயத்தை மிதிக்க கூடாது என்று தனது தலையால் நடந்து சென்றடைந்தார். தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை அம்மையே என்றழைக்க அம்மையார் சிவபெருமானை அப்பா என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ அம்மையார் பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும் ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார். அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க என்று இறைவன் அருளினார். அம்மையாரும் திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடும் பாடல்கள் பாடி இறைவனின் காலடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு முத்தபதிகம் 22 ம் திருவிரட்டை மணிமாலையென 20 ம் அற்புத திருவந்தாதி 101 பாடல்களுமென 143 பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும் வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. கார்க்கோடகன், சுநந்த முனிவர் வழிபட்டுள்ளனர். காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் தங்கினார் அன்று இரவு துயிலும்போது அவர் கனவில் வந்த இறைவன் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 247 கூவம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 247 வது தேவாரத்தலம் கூவம். புராணபெயர் கூவரம், திருவிற்கோலம். மூலவர் திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர், தீண்டாத் திருமேனி நாதர். இறைவனின் லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி. அம்பாளின் கருவறை விமானம் கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அக்னி தீர்த்தம். இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால் லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி பாலபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறார். ஆகையால் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் தவளைகள் வாழ்வதில்லை. வெளியில் இருந்து பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடும். தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை.

திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி திரிபுராந்தகர் என்றும் அம்பாளை திரிபுராந்தகி என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன் தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே இங்குள்ள சிவனுக்கு திருவிற்கோலநாதர் என்றும் தலத்திற்கு திருவிற்கோலம் என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சிணாமூர்த்தி உள்ளனர். மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.

சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர். திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன் திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவளிடம் சிவன் தான் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடப்போவதாகவும் அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள். இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் தர்க்க மாதா என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன் தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள் அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர் அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல் தான் என உணர்ந்த சிவன் அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின் விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். திரிபுராதிகள் மூவருள் இருவர் வாயிலில் துவாரபாலகர்களாக இருக்கின்றார்கள். கோயிலுக்கு வெளியே திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட உடனே விடையாக இருந்து தாங்கிய கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது. கூரம் பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் கூரம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் கூவம் என்று மருவியது.

இந்த கோவிலிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்கின்றார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை. மேலும் 4 கி.மி தொலைவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து தீர்த்தம் கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் தவறான வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படருகின்றது. மூலவர் தீண்டாத் திருமேனி சுயம்பு மூர்த்திக்கு அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர். அதிக மழை வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும் போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்ற குறிப்புடன் திருஞானசம்பந்தர் தம் பாடலில் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.