தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 246 எலுமியன்கோட்டூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 246 வது தேவாரத்தலம் எலுமியன்கோட்டூர். புராணபெயர் இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர். மூலவர் தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தெய்வநாயகேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய செம்மண் நிறத்தில் தீண்டா திருமேனியாக உள்ளார். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன. இறைவன் லிங்கத்தில் பெரிய ஆவுடையாராக அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். இத்தலத்தில் சிவனை வருடத்தில் ஏப்ரல் 2 முதல் 7 ம்தேதி வரையும், செப்டம்பர் 5 முதல் 11ம் தேதி வரையும் சூரிய ஒளி படுகிறது. அம்பாள் கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை. இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள். தலமரம் மரமல்லிகை. தீர்த்தம் மல்லிகா புஷ்கரிணி.

ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும் அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு இருக்கின்றார். இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.

தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான். தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன் தெய்வநாயகேஸ்வரர் என்றும் அரம்பையர்களுக்கு அருளியதால் அரம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இதனால் அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தேவகன்னியர் தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவகுரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர் அம்மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார். அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள் தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.

தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால் அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன் அவரிடம் இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடுமாறும் கூறினார். அதன்படி இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன் தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின் திருஞானசம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார். 1983-ஆம் ஆண்டு இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 245 தக்கோலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 245 வது தேவாரத்தலம் தக்கோலம். புராணபெயர் திருவூறல். மூலவர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மணலால் ஆனாவர் தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாள் கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இங்கு அம்பாளுக்கு தான் முதல் பூஜை. தலமரம் தக்கோலம். தீர்த்தம் நந்தி தீர்த்தம், கல்லாறு. குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளனர். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது.

அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலைக் குத்துக்காலிட்டு காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபயமாகக் கொண்டு இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலையில் இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில் உள்ளார்.

தேவகுருவான பிரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவனை வழிபட்டார். அப்போது நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வரவழைத்தர். அது இங்குள்ள சிவலிங்கத்தைச் சுற்றி வந்து மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது. அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்கப்பெற்றார். ஜலம் (தீர்த்தம்) சூழ்ந்து சென்றதால் சிவன் ஜலநாதீஸ்வரர் என பெயர் பெற்றார். சிறிமு நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் வந்தது. தற்போது இதுபோல் தண்ணீர் வரவில்லை. தட்சன் நடத்திய யாகத்திற்கு அவனது மகள் தாட்சாயணி சென்ற போது அவளை அவன் அவமானப்படுத்தினான். சிவன் தட்சனின் தலையை அறுத்தார். அவனும் தன் சொல் மீறி சென்ற பார்வதியும் பூலோகத்திலுள்ள க்ஷீர நதிக்கரையில் தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி தட்சன் சிவனை வழிபட்டு ஆட்டுத்தலை பொருத்தப் பெற்றான். தட்சன் தனக்கு தலை வேண்டி ஓலமிட்டு வழிபட்டதாலும் தலையிழந்த அவனுக்கு ஆட்டுத்தலை கொடுத்து தக்க கோலத்தை கொடுத்ததாலும் இவ்வூர் தக்கோலம் என்று பெயர் ஏற்பட்டது. தாட்சாயணி இங்கு வந்த போது பாலாற்றில் பெருவெள்ளம் சென்றது. அவள் நதிக்கரையில் உள்ள மணலை அள்ளி லிங்க வடிவமாக்கி வழிபட்டாள். தியானத்தில் இருந்தபோது வெள்ளம் லிங்கத்தை சூழ்ந்தது. லிங்கத்தை காப்பாற்றுவதற்காக அவள் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த லிங்கமே இப்போது இக்கோயிலில் இருக்கிறது. பார்வதி லிங்கத்தை காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும் அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருந்ததால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இன்னொரு அதிசயத்தையும் இந்த லிங்கத்தில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும். இத்தலத்தை திருவூறல் என நாவுக்கரசரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இவ்வூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில்கள், ஏழு கிராம தேவதை கோயில்கள் உள்ளன. சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என தலபுராணம் கூறுகிறது. காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

Image result for தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 244 திருமால்பூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 244 வது தேவாரத்தலம் திருமால்பூர். புராணபெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு. மூலவர் மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் தீண்டாத் திருமேனி ஆவார். அம்பாள் அஞ்சனாட்சி, கருணாம்பிகை. தலமரம் வில்வம். தீர்த்தம். சக்கர தீர்த்தம். இக்கோயில் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம் இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே உயரமான பீடத்தின் மீது பலிபீடம், கவசமிட்ட கொடிமரம், நந்தி தனித்தனியே உள்ளனர். உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற திருக்கோலத்திலும் செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் விநாயகர், சிதம்பரேசுவரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்ட்கேசுவரர், நடராஜர், கஜலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் மணிகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி ஆதலால் இத்தலத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் தான் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. வல்லபை விநாயகர் பத்துக்கரங்களுடன் காட்சி தருகின்றார். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். நடராஜ சபையில் மாணிக்கவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு லிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது செம்பால் செய்யப்பட்ட கவசம் சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். இக்கோயிலில் பிரம்மோற்ஸவ காலத்தில் பெருமாளுக்குரிய கருடசேவை நடக்கிறது. பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள். வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பம் உள்ளது.

குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன் திருமாலின் பக்தியை சோதிக்க பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன் தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால் தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன். இதனால் உன்னை பதுமாஷன் என அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறு என அழைக்கப்படும் எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம் நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன் என்று அருளினார். இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும் இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் திருமால் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 243 திருவல்லம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 243 வது தேவாரத்தலம் திருவல்லம். புராணபெயர் திருவலம். மூலவர் வில்வநாதேஸ்வரர், வல்லநாதர். இறைவன் இத்தலத்தில் கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை அகழி அமைப்புடையது. அம்பாள் தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை. தல மரம் வில்வம். தீர்த்தம். நீவாநதி, கவுரி தீர்த்தம். நீவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம் அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன் தூரத்தில் இருந்த நதியை நீ வா என்றழைக்க இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நீவா நதி எனப்பெயர் பெற்றது. இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. கோயிலுள் கௌரி தீர்த்தம் என்ற தீர்த்த கிணறும் உள்ளது. இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும் அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும் சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன.

அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக பலாமரம் ஒன்றுள்ளது. சிவானந்த மவுன குரு சுவாமி இந்த பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு மறைக்கின்றது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும். இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அருணகிரிநாதர் இந்த முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஒரு காலத்தில் வில்வக்காடாக இருந்த இப்பகுதியில் ஒரு பாம்புப் புற்றில் நாள்தோறும் பசு ஒன்று வந்து இப்புற்றில் பாலை சொரிந்தது வழிபட்டது. அதனால் புற்று சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்பட்டது. இவரே வில்வநாதேஸ்வரர். தெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார். விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்றார். தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில் இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம். கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த அசுரன் நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் பூமியை தோண்டினால் சிவலிங்கங்கள் கிடைக்கின்றது.

கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர் தைப்பொங்கல் கழித்த 3ம் நாள் கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல் கோயில் வாசலை நோக்கி திரும்பி இருக்கின்றார். காஞ்சனகிரி மலையில் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் தீக்காலி அம்பாள், ஜடாகலாபாம்பாள் என்ற பெயருடன் உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார். இங்குள்ள இறைவனை விஷ்ணு வழிபட்டதால் விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது. கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது. கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளது. திருஞானசம்பந்தர் பதிகத்தில் திருவல்லம் என்றும் அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 242 திருப்பனங்காடு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 242 வது தேவாரத்தலம் திருப்பனங்காடு. புராணபெயர் வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு. மூலவர் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்களும் கிழக்கு நோக்கி உள்ளார்கள். இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன்உ ற்சவர் சோமஸ்கந்தர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கிருபாநாயகி, அமிர்தவல்லி என இரண்டு அம்பாள்கள் உள்ளார்கள். அமிர்த வல்லி உயரமாகவும், கிருபாபுரியம்பாள் சற்று உயரம் குறைந்தவளாகவும் இருக்கின்றனர். தலமரம் பனைமரம். தீர்த்தம் ஜடாகங்கை, சுந்தரர் தீர்த்தம், ஊற்று தீர்த்தம். கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை. அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்த போது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி காட்சி தருகின்றார். அகத்தியர் தான் ஸ்தாபித்த இறைவன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக உள்ளது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.

அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும் சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும் யானை மீது ஐயப்பன் அமர்ந்திருக்கின்றார்.

அகத்தியர் தெற்கு நோக்கி வரும்போது இவ்விடத்தில் சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சிவனை மானசீகமாக எண்ணி வழிபட்டார். அப்போது அருகிலுள்ள ஒரு வேம்பு மரத்தின் அடியில் தான் சுயம்பு லிங்கமாக இருப்பதாக சிவன் அசரீரியாக ஒலித்தார். அகத்தியர் அங்கு சென்று பார்த்தபோது வேம்பு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அகத்தியரைக் கண்ட முனிவர் அவரிடம் வேம்பு மரத்தின் அடியில் இருந்த சுயம்பு லிங்கத்தை காண்பித்து விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. அகத்தியரின் மனதை அறிந்த சிவன் தன் தலையில் இருந்து கங்கை நீரை இவ்விடத்தில் பாய விட்டார். அந்நீர் தீர்த்தமாக அருகில் தேங்கியது. இப்போது இந்த தீர்த்தம் ஜடாகங்கை தீர்த்தம் என்ற பெயரில் கோயிலுக்கு அருகில் இருக்கிறது. அதில் இருந்து நீரை எடுத்த அகத்தியர் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினார். பின் சிவனுக்கு படைக்க பழங்கள் இல்லாததால் அருகில் பழம் இருக்கிறதா என்று தேடினார் அகத்தியர். சிவன் அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து கனிகளை உதிரச்செய்தார். அகத்தியர் அதனை சுவாமிக்கு படைத்து வணங்கினார். அகத்தியரின் பூஜையில் மகிழ்ந்த சிவன் அவருக்கு காட்சி தந்தருளினார். பனங்காட்டில் எழுந்தருளியவர் என்பதால் தாளபுரீஸ்வரர் (தாளம் என்றால் பனை என்று பொருள்) என்று பெயர் பெற்றார்.

சிவதலயாத்திரை வந்த சுந்தரர் காஞ்சிபுரத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது நண்பகல் பொழுதாகி விடவே சுந்தரரும் அவருடன் வந்தவர்களும் பசியால் களைப்படைந்தனர். சிவன் ஒரு முதியவர் வடிவில் சென்று வழியில் ஓரிடத்தில் பசியாற உணவு கொடுத்தார். அவரிடம் சுந்தரர் உண்ண உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீர் தரவேண்டாமா என்றார். அம்முதியவர் உங்களுக்கு நீர் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். அவர் நின்றிருந்த இடத்தில் நீர் ஊற்றாக பொங்கியது. வியந்த சுந்தரர் முதியவரிடம் தாங்கள் யார் என்றார். அதற்கு முதியவர் உன் திருமணத்தில் வம்பு செய்த நான் பனங்காட்டில் குடியிருப்பவன் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். தனக்கு உணவு படைத்து பசியை போக்கியது சிவன் என அறிந்த சுந்தரர் மகிழ்ச்சி கொண்டார். அவ்விடத்தில் நந்தியின் கால் தடம் மட்டும் தெரிந்தது. அதனை பின்தொடர்ந்து வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்து சிவனை வணங்கி வம்பு செய்பவன் கள்ளன் என்று அவரை உரிமையுடன் திட்டி பதிகம் பாடினார். சுந்தரருக்காக சிவன் பாதத்திற்கு அடியில் உருவான தீர்த்தம் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. எப்போதும் நீர் வற்றாத இந்த தீர்த்தம் சுந்தரர் தீர்த்தம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. வடலூர் வள்ளளார் பாடலிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. விஜயநகர மன்னர்கள், முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து 22 கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டில் இறைவன் திருப்பனங்காடுடைய நாயனார் என்றும் ஊர்ப்பெயர் காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுத் திருப்பனங்காடு என்றும் குறிக்கப்படுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 241 செய்யாறு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 241 வது தேவாரத்தலம் செய்யாறு. புராணபெயர் திருவோத்தூர், திருஓத்தூர். மூலவர் வேதபுரீஸ்வரர், வேதநாதர்.. இறைவன் இத்தலத்தில் சதுர ஆவுடை வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தினந்தோறும் இறைவன் மீது சூரியஒளிக்கதிர் படும். அம்பாள் பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி. அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார். தலமரம் பனைமரம். தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம், சேயாறு. சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் செய்யாறு என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும் 2வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. நந்தி சுவாமியை நோக்கியில்லாமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது.

இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருந்தார். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இத்தலமும் ஒன்று. கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் அனைவரையும் தரிசிக்கலாம். சண்டேஸ்வரர் ஒரு காலை மடக்கி ஒரு காலைத் தொங்கவிட்டு ஒருகையில் மழுவுடன் ஒரு கையை மடக்கிய காலின் தொடை மீது வைத்தவாறு காட்சி தருகிறார். சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை திருஞானசம்பந்தர் மீது ஏவினர். திருஞானசம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகலிங்கத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதற்கு மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை, அதற்கு மேல் 11 சர்ப்பம், அதற்கு மேல் லிங்கம் அதற்கு மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றது. கோவிலில் உள்ள 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கின்றார். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

ஒத்து என்றால் வேதம் மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர் சிவனடியார்களிடம் எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இது பற்றி கூறினர். உடனே திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது திருஞானசம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்குகின்றன. தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். விசுவாவசு என்னும் மன்னனிடம்தோற்று ஓடி காட்டில் திரிந்த தொண்டைமான் என்னும் மன்னன் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி விசுவாவசுவுடன் போரிட்டு வெற்றி பெருமாறு பணித்தார். இதனை கேட்ட மன்னன் எங்ஙனம் போரிடுவேன் என்று அஞ்சியபோது நந்தி உனக்கு படைத் துணையாக வருவார் நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக என்றார். மேலும் நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றேன் நீ போய்ப்பார் அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார் என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க அவனுக்கு படைத்துணையாகும் நிலையில் மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப அவனும் அவ்வாறே சென்று விசுவாவசுவை வென்றான்.

ராஜாதிராஜன், குலோத்துங்கன், ராஜேந்திரன், விக்ரமசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இறைவன் ஓத்தூர் உடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும் நிவேதனத்திற்கும் அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 240 திருமாகறல்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 240 வது தேவாரத்தலம் திருமாகறல். உற்சவர் சோமாஸ்கந்தர், நடராஜர். மூலவர் திருமாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர், உடும்பீசர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகம்வாழ்வித்தவர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இறைவன் உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கிறார். அம்பாள் திரிபுவனநாயகி, புவனநாயகி. தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தலமரம் எலுமிச்சை. தீர்த்தம் அக்னி. செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி விநாயகர் மறுபுறம் சுப்பிரமணியர், துவாரபாலகர்கள் உள்ளனர்.

இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி உள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி மாகறலீசர் என்று மாறியது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார்.

மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப்பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.

ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன் நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.

காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளது. கல்வெட்டுக்களில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்றும் கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்டச் செய்திகளும் குறிக்கப்பட்டுள்ளன. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை போற்றிப்பாடிய பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 239 திருகுரங்கனில் முட்டம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 239 வது தேவாரத்தலம் திருகுரங்கனில் முட்டம். புராணபெயர் திருக்குரங்கணின் முட்டம். மூலவர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர். இறைவன் இத்தலத்தில் சிறிய லிங்க உருவில் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மிகச் சிறியதாக உள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் இறையார் வளையம்மை. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்கள். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாள். எனவே அம்பாளுக்கு இப்பெயர் வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். தலமரம் இலந்தை. தீர்த்தம் வாயசை தீர்த்தம், காக்கைமடு தீர்த்தம். இந்த தீர்த்தம் எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய தீர்த்தம்.

இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இந்த அமைப்பு விநாயகரை சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் ஆகும். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை.

தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர் சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் சிவன் பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன் காகம் வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன் தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும் அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும் கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன் அணில் வடிவில் பூலோகம் வந்தான். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன் இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன் இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் குரங்கு அணில் முட்டம் என்றானது. (முட்டம் என்றால் காகம் என்று பொருள்).

கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். கல்வெட்டில் இத்தலம் காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும் கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது. திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை குரங்கணின்முட்டம் என்றும் பறவாவகைவீடு (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 238 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 238 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் கச்சிநெறிக்காரைக்காடு. மூலவர் சத்தியநாதசுவாமி, சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர், காரை திருநாதேஸ்வரர், சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர். இறைவன் இத்தலத்தில் இறைவன் மேற்கு பார்த்து சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். உற்சவஅம்பாள் பிரமராம்பிகை. காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாள் இல்லை. இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை. அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. தலமரம் காரைச்செடி. தீர்த்தம் இந்திர, சத்யவிரத தீர்த்தம். இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி காடாக இருந்த காரணத்தால் காரைக்காடு என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி திருக்காலிமேடு என்ற பெயருடனும் இவ்வாலயம் திருக்காலீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது.

ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும் அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன. துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது. இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. தட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது.

தாய் தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார். இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன் அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர் ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர் அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி காரைத்திருநாதர் என்ற பெயரும் பெற்றார். இந்திரன், புதன், திருஞானசம்பந்தர் வழிபட்டுள்ளனர். .திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 237 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 237 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். புராணபெயர் திருக்கச்சி அனேகதங்காவதம். மூலவர் கச்சி அனேகதங்காவதேஸ்வரர், கச்சி அநேகதங்காபதம், அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தீர்த்தம் தாணு தீர்த்தம். அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார், கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சிபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும் கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. ராஜகோபுரமும் கிடையாது. இந்த வாயில்கள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவாரம் பாடிய மூவர் சந்நிதி உள்ளது. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி அநேகதங்காவதேஸ்வரர் எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு. விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவனின் திருக்கயிலாயத்தை அடைவார்கள் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி தடாகத்தில் நீராடச்சென்றபோது நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு வல்லபை என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அப்போது அம்பிகை சிவனிடம் விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும் முன்பு இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார். சிவன் அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே பெரிய மூர்த்தியாக இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. குபேரன் தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால் அருந்தமனின் மகனாப்பிறந்து அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. குபேரன், விநாயகர், சுந்தரர் வழிபட்டுள்ளனர். சுந்தரர் சிவனை கச்சி அநேகதங்காவதமே என்று பதிகம் பாடியுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.