தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 236 திருஓணகாந்தன்தளி, ஓணகாந்தேஸ்வரர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 236 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. புராணபெயர் திருவோணகாந்தன் தளி. மூலவர் ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் காமாட்சி. தலவிருட்சம் வன்னியும், புளியமரமும். தீர்த்தம் ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம். கோவில் 3 நிலை இராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும் மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.

அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 2 வது பாடலில் குறிப்பிடுகிறார். மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இருப்பதில்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை.

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான். இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும் லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன் பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய இறைவன் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க சுந்தரர் அவற்றைப் பெற்றார். பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 235 திருக்கச்சிமேற்றளி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 235 வது தேவாரத்தலம் திருக்கச்சிமேற்றளி. மூலவர் திருமேற்றளீஸ்வரர், திருமேற்றளிநாதர், இரண்டாவது மூலவர் ஓதவுருகீஸ்வரர். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் இறைவன் அருள்புரிகிறார். அம்பாள் திருமேற்றளிநாயகி.. தலவிருட்சம் மா, தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இத்தலத்தின் தலவிநாயகர் சித்திவிநாயகர். கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. மேற்கு நோக்கிய சிவதலம் ஆகையால் மேற்றளி எனவும் திருமால் சிவனை நோக்கி தவமிருந்ததால் (மேலான-தளி) மேற்றளி என அழைக்கப்படுகிறது.

திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும் கோயிலின் ராஜகோபுரமும் பிரதான வாசலும் ஓதவுருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருக்கிறது. இக்கோவிலின் தெருக்கோடியில் நின்று பாடிய திருஞானசம்பந்தர் அவ்விடத்திலேயே தனிச்சன்னதியில் இருக்கிறார். அனைத்து கோவிலிலும் கையில் தாளத்துடன் காட்சி தரும் சம்பந்தர் இங்கு வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஆளுடைப்பிள்ளையார் சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி பிள்ளையார் பாளையம் என்றழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு பச்சிமாலயம் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. திருநாவுக்கரசர் இத்தலத்தை கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால் என்று குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். இறைவன் காட்சி தந்து நின்ற போது திருமால் சிவசாரூப நிலையை வேண்ட திருஞானசம்பந்தர் இங்கு வருகைதந்து பதிகம் பாடும்போது அது கிடைக்கும் என்றும் அதுவரை இங்கிருந்து தவம் செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். சிவதல யாத்திரையில் இக்கோவில் வந்த திருஞானசம்பந்தர் தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்ற போது திருஞானசம்பந்தர் பாடலை முடித்தார். இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும் அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். திருஞானசம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். கோயில் உள்ள இத்தெருவின் நடுவில் உற்றுக்கேட்ட முத்தீசர் ஆலயம் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்து கேட்டதாக திருமேற்றளிக் கோயில் புராணவரலாறு உள்ளது. இக்கோயில் காஞ்சிபுரம் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர், புதன் வழிபட்ட ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 234 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 234 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. மூலவர் ஏகாம்பரநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் காமாட்சி ஏலவார்குழலி. தீர்த்தம் சிவகங்கை(குளம்), கம்பாநதி. தலமரம் மாமரம். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மாமரத்திற்கு ஆம்ரம் என்பது வடசொல் அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும் கம்பம் என்றும் மருவிற்று. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் ஏகாம்பரநாதர் என்று இப்பெயர் பெற்றார். முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது இத்தலம்.

இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. ஏகம்பரநாதருக்கு திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. இவரை பிருத்வி லிங்கம் என்று அழைப்பார்கள். இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும் எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது நிலத்தைக் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் இதுமுதல் தலம் ஆகும். உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன் எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார்.

அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க இத்தலத்திற்கு அனுப்பினார். இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்து வர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்து விடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இக்கோவிலில் அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. ஆழ்வார்கள் பாசுரம் பாடிய திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி கோவிலுக்கு உள்ளேயே உள்ளது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை என்பவள் பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு வெண்பாக்கம் என்னும் ஊரில் ஊன்றுகோல் கொடுத்த சிவன் இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் அருளிய இரண்டாம் காண்டம் காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் இயற்றிய ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, ஏகம்பரநாதர் அந்தாதி ஆகிய நூல்கள் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார். பின் குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. கிழக்கு ராஜகோபுரத்தையும் தெற்கு வாயில் பெரிய இராஜ கோபுரத்தையும் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார். மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயர் கட்டியுள்ளார். இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன் நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும் அது பிற்காலச் சோழர்களால் திருத்தி கட்டப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளியில் உள்ள மதில் சுவர் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. முன்மண்டபத்தில் ஆதித்த கரிகாலன் சிலை உருவம் உள்ளது. அதற்குத் தாடி இருக்கிறது. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி கி.பி.1250 சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், ராஜராஜன், விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் கி.பி. 1406 கல்வெட்டு மூன்று இருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் கி.பி.1469 ஏகம்பரநாதர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி கி.பி.1250 காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது. காஞ்சிபுரத்தை அச்சுதராயன் கி.பி.1534 ஆண்டு படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி உள்ளது. விஜயநகரமல்லிகார்சுனனுடைய கி.பி.1456 கல்வெட்டு இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 233 திருவண்ணாமலை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 233 வது தேவாரத்தலம் திருவண்ணாமலை. புராணபெயர் திருண்ணாமலை. மூலவர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள். தலமரம் மகிழமரம். தீர்த்தம் பிரம்மதீர்த்தம், சிவகங்கை. காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

கோவிலின் திசைக்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளது. 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும் மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும் வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர். மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம். ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. லிங்கமே மலையாக அமைந்த மலை பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது.

உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம். எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். 9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம். கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்று பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார். முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் திருவண்ணாமலை கிரிவலம் வருகின்றார்கள். பௌவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார். இதனால் பௌவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் சிறப்பு. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர். கிரிவலம் வரும் கிழமைகளும் அதன் பலன்களும் தலவரலாற்றின் படி ஞாயிறு கிரிவலம் வந்தால் சிவபதவிகள் கிடைக்கும். திங்கள் கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய் கிரிவலம் வந்தால் கடன் வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம். வியாழன் கிரிவலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம். வெள்ளி கிரிவலம் வந்தால் விஷ்ணு பதம் அடையலாம். சனி கிரிவலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அமாவாசை கிரிவலம் வந்தால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை) புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் உள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் அதிகம் உள்ள கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளில் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இது ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் ஆகும். பரம்பொருளான சிவனே பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சி தருவார். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. இக்கோவிலில் உள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர் வதம் செய்த போது அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு விநாயகர் சதுர்த்தி திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கின்றது. இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜைகள் நடக்கும். அவ்வேளையில் அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார். கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர் கம்பத்திளையனார் என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன் அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார் கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான் அவரது உடலை எரித்து விட்டான். எனவே வருத்தமடைந்த அருணகிரியாரை அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார் இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். கிளி கோபுரம் என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில் அருணகிரிநாதர் இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு அருணகிரி யோகேசர் என்று பெயர்.

இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. அருகில் பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு முகங்கள் உள்ளன. மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர் அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன் பாதாள லிங்கம் இருக்கிறது.

இக்கோவிலின் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாத ர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர் முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். அவன் வழிபட்டுவந்த காளிதேவி தான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர் அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில் மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலில் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி.

கார்த்திகை பௌர்ணமி தீபத்தன்று மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து வந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து இரண்டு நிமிட தரிசன காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். மலை மீது இருப்பவர்கள் உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். இவர்கள் ஏற்றிய இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணலாம். கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால் சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா. தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு. நெய் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள் கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால் பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுகின்ர். நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள் நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்து விடும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது. மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம். கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அடி முடி காணாத பரம் பொருள் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாதத்தை சுற்றியுள்ள துண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. ஒன்று இப்போது உள்ள சாலை வழி 2வது மலையை ஒட்டிச் செல்லும் பாறைகள் முட்கள் மிகுந்த கடினமான பாதை. மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதற்கான குறிப்புகள் சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள் செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள் அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்தார்.

கோயில்களில் சுவாமியை அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வார்கள் இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளார். எத்தனையோ மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் வல்லாள மகாராஜாவின் பக்தி காரணமாக பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி கி.பி. 1343 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம் ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை வன்னி குலத்தினில் வருமன்னா என்று குறிப்பிடுகிறது.

வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிடையாலை நிகழ்த்தினார். திருவண்ணாமலையில் இருந்த எல்லா தேவதாசிகள் வீட்டுக்கும் சிவகணங்களை அனுப்பிய சிவபெருமான் வல்லாள மகாராஜாவிடம் சைவத் துறவி கோலத்தில் வந்து தனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். வல்லாள மகாராஜாவும் தேவதாசியை அனுப்புவதாக வாக்களித்தார். ஆனால் ஊரில் உள்ள எல்லா தேவதாசிகளும் சிவகணங்களுடன் இருந்ததால் வல்லாள மகாராஜாவால் தேவதாசியை கொண்டுவர முடியவில்லை. மன்னனின் கவலை அறிந்த வல்லாள மகாராஜாவின் இளைய ராணி தானே தேவதாசியாக சிவனிடம் செல்ல முன்வந்தார். துறவி வேடத்தில் சிவன் இருந்த அறைக்குள் ராணி நுழைந்த போது குழந்தையாக சிவபெருமான் காட்சியளித்தார். ராணியும் மகாராஜாவும் சிவபெருமானை தமது குழந்தையாக ஏற்றனர். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் இன்றும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார்.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு சார்த்திய வேல் இன்றுமுள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறிய போது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதியில் திருஞானசம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் பாடல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல் இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு காலையில் எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது.

இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இக்கோவில் தலபுராணம் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார். அண்ணாமலை வெண்பா குருநமசிவாயர் பாடியது. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா மற்றும் தேவாரம், திருவாசகம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம், கந்தபுராணம், திருப்புகழ், சோனசைலமாலை, திருவருணைக்கலம்பகம், அருணாசல புராணம், அருணாசல மகாத்மிய வசனம், அருணகிரி அந்தாதி, அண்ணாமலை வெண்பா, திருவருணை அந்தாதி, அண்ணாமலை சகதம், சாரப்பிரபந்தம், கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, சோணாசல சதகம், திருவருணைக்கலிவெண்பா, திருவருட்பதிகம், அருணாசலேசுவரர் பதிகம் -1, அருணாசலேசுவரர் பதிகம் – 2, உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேசர் நவகாரிகை மாலை, உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம், அருணாசல சதகம், அருணாசல அட்சரமாலை, அண்ணாமலையார் வண்ணம், திருவண்ணாமலைப் பதிகங்கள், அண்ணாமலைப் பஞ்ச ரத்னம், திருவருணைத் தனி வெண்பா, அட்சரப் பாமாலை, அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை, அருணசல அட்சரமாலை, அருணாசலநவ மணிமாலை, அருணாசல பதிகம், அருணாசல அஷ்டகம், அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவரும்.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. 6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின.

முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது. 12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கினார்கள். 14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார். 15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றினார். அவர் மற்ற மன்னர்கள் போல ஒன்றிரண்டு திருப்பணிகள் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில. 1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

குறுநில மன்னர்கள் பலரும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்திருக்கின்றனர். மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை பார்க்கிறோம் என்றால் அதற்கு பல மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது. அருகிலேயே அருணகிரிநாதரின் திருவெழுகூற்றிருக்கை கல்வெட்டில் உள்ளது. விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் மேலும் பல சித்தர்கள், முனிவர்கள், வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

OLYMPUS DIGITAL CAMERA

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 232 திருவாமாத்தூர்

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 232 திருவாமாத்தூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 232 வது தேவாரத்தலம் திருவாமாத்தூர். புராணபெயர் கோமாதுபுரம், திருஆமத்தூர். மூலவர் அபிராமேஸ்வரர், அழகியநாதர்.. இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இறைவனின் கருவறை அகழி அமைப்பில் உள்ளது. அம்பாள் முத்தாம்பிகை, அழகிய நாயகி. அம்பாள் முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். தலமரம் வன்னி, கொன்றை. ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தின் தல விருட்சமாக சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே அருள்பாலிக்கிறார். தீர்த்தம் ஆம்பலம்பூம்பொய்கை (குளம்), தண்ட தீர்த்தம் (கிணறு), பம்பை (ஆறு), சக்கர தீர்த்தம். பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும் எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்பாளின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர்.

பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இறைவன் கோவில் கோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி சுற்று மதிலுடன் உள்ளது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி உள்ளார். இறைவன் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும் தனிக் கோயிலாகவுள்ள சண்முகர் சந்நிதியும் ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன.

தென் மேற்கு மூலையில் வட்டப்பலகை என்னும் சத்திய மண்டபம் உள்ளது. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்கிறது தலபுராணம். திருவட்டப்பாறை என்ற சிவலிங்க மூர்த்தி உள்ளார். இவர் முன் அமர்ந்து ராமனும், சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக புராணவரலாறு உள்ளது. சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்பாளின் சாந்நித்யரூபம் உள்ளது. தற்போது இச்சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது.

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திருஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

வட்டப்பாறை அம்மனைப்பற்றிய ஒரு புராணவரலாறு உள்ளது. அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை எல்லாம் அவனிடமே உள்ளது என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன் இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினான். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.

ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்துள்ளார். சூரபத்மனை அழிப்பதற்காக முருகன் இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இத்தல இறைவனை விநாயகர், முருகன், பார்வதி, ராமர், சீதை, லட்சுமணன், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 231 பனையபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 231 வது தேவாரத்தலம் பனையபுரம். புராணபெயர் திருப்புறவார் பனங்காட்டூர். மூலவர் பனங்காட்டீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சத்யாம்பிகை, புறவம்மை, மெய்யாம்பாள். அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். தலமரம் பனை. பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் இத்தலமும் ஒன்று. தீர்த்தம் பத்ம தீர்த்தம். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும் பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன. நான்கு நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோபுர வாயில் நுழைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதி வெளிப் பிரகாரத்திலுள்ளது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் சன்னிதிகள் உள்ளன. திருநீலகண்டர் தம் மனைவியுடன் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கின்றார்.

சிவபெருமானை நிந்தித்து தக்கன் செய்த வேள்விக்கு சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன் வீரபத்திரரால் தாக்கப்பட்டு ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பதற்காக தன் கண்களை அளித்தான். இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சி தந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை இதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. இவரது பெயராலேயே பரவைபுரம் என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது. இத்தலத்தில் முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்களின் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் கடாரம் (இன்றைய மலேசியா) வென்றதை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார் பனங்காடுடையார் கோவில் எனவும் இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இறைவனை திருஞான சம்பந்தர் புறவார் பனங்காட்டீசன் என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 230 கிராமம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 230 வது தேவாரத்தலம் கிராமம். புராணபெயர் திருமுண்டீச்சரம், திருக்கண்டீச்சரம். மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை. தலமரம் வன்னிமரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடம் முதலில் மகாமண்டபம், பின் அர்த்த மண்டபம் உள்ளது. நுழைவு வாசலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் உள்ளது. ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் வீற்றுள்ளனர். தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். கோயிலின் அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு பொக்களம் கொடுத்த நாயனார் என்ற பெயரும் ஆற்றின் கரையில் கோயில் இருப்பதால் ஆற்றுத்தளி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம் எனப்பட்டது. துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே, தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கல்வெட்டில் மவுலி கிராமம் என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். இக்கோயில் கி.பி.943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இத்திருக்கோயி­ல் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. பிரமன், இந்திரன் ஆகியோரும் இத்தலத்தில் சிவலோகநாதரை வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆலயங்களில் இக்கோவிலும் ஒன்று. திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 229 திருப்பாதிரிபுலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 229 வது தேவாரத்தலம் திருப்பாதிரிபுலியூர். புராணபெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம். மூலவர் பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான, பாடலேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி. தலமரம் பாதிரிமரம். தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரைதீர்த்தம் படித்துறைகளுடன் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், நந்தியை தரிசிக்கலாம். உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தியும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் திருநாவுக்கரசர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கன்னி விநாயகர் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்) இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன் (கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயமாக பார்த்து அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருக்கின்றது. மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மீது மேலே ஏறுவதற்கு வசதியாக இருக்க தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட சித்தராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரை நீர் மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன் மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு பிரம்பு ஒன்றை ஏவி அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர் இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.

பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் வந்த ஈசன் கை வைத்ததால் சிவகரை தீர்த்தம் உருவானது. சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் பாதுகைகளாக ஆகமங்களும் இருந்தன. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்து விட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி பாதங்கள் நிலத்தில் பதியாமல் அரூபமாக (உருவமில்லாமல்) தவமிருந்து இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது. இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். மங்கண முனிவர் பூசித்து தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

திருநாவுக்கரசை முதன்முதலில் அப்பர் என்று திருஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான். காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதும் சமமானது என்றும் திருவண்ணாமலையில் 8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்றும் தல வரலாறு கூறிப்பிடுகின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை அம்பாளின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். இங்கு இறைவனின் சன்னதியில் பள்ளியறை உள்ளது. திருப்பாதிரிப்புலியூரின் பெருமைகளை தேவி மூலமாக உலகம் அறிய வேண்டும் என்பதற்காக இறைவன் தூர்ச்சடி, பிரமசன்மன் என்ற சிவகணத்தவரை அனுப்பி வைத்தார். அவர்கள் மனித உருவில் குருவாகவும் சீடனாகவும் வந்து திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு வாய்ந்த சிவதலம் என்பதை மக்களிடையே எடுத்துரைத்தனர். சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன. சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம் வேறு இரு கல்வெட்டுக்களும் உள்ளது. இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது. பிற்காலத்தில் இந்த கோவில் பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டிய வம்சத்தினரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டுகள் மூலம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோயில் என்பது தெரியவருகிறது. இந்த கோவிலின் நான்கு சுவர்களிலும் திருநாவுக்கரசரின் கருத்துக்கள் உள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 228 திருமாணிகுழி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 228 வது தேவாரத்தலம் திருமாணிகுழி. மூலவர் வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி. தலமரம் கொன்றை. தீர்த்தம் சுவேத, கெடில நதி. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் உள்ளனர். இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக தலவரலாறு உள்ளது. கோயில் கெடில நதியின் தென் கரையில் ஓர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால் இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. இறைவனும் இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால் இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார். தீபாராதனையின் போது மட்டும் 3 வினாடிகள் திரையை விலக்குவார்கள் சற்று நேரம் மட்டும் சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம் இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் 11 ருத்திரர்களில் ஒருவரான பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை பூஜைகள் அனைத்தும் முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களும் உள்ளது. சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ளன. திரைக்கு பின் சுவாமியும் அம்பாளும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்திதேவர் வழக்கமான தலை சாய்த்த நிலையில் இல்லாமல் நேர் திசையில் உள்ளார். மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்பாளின் அம்புஜாட்சியில் ஆட்சி நடக்கிறது. அம்பாளிடம் இரண்டு கைகளிலும் ஒன்றில் தாமரை மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும் அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.

மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் திருமாணிக்குழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் உதவி என்றே குறிக்கப் பெறுகின்றது. பெரிய புராணத்தில் சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன் என்றும் உதவிமாணிகுழி என்றும் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் அம்மனுக்கு உதவி நாயகி என்ற பெயரும் உண்டு. சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது. சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 227 திருவாண்டார் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 227 வது தேவாரத்தலம் திருவாண்டார் கோவில். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் வடுகீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு தலையில் தலைப்பாகையுடன் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் வாமதேவ தீர்த்தம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்று மதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர்க்கோலத்தில் இருக்கிறாள். முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும் பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா, தேவர்கள் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை சிவன் என நினைத்து மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக தலபுராணத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம். அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.