தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 47. திருக்கடையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 47 வது தேவாரத்தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆகும். புராண பெயர்கள் திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் அமிர்தத்தை உண்ண வேண்டுமென்று அமிர்த குடத்தை இங்குக் கொண்டு வந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று பெயர் பெற்றது. மூலவர் அமிர்தகடேஸ்வரர் வேறு பெயர் அமிர்தலிங்கேசுவரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். உற்சவர் காலசம்காரமூா்த்தி. அம்பாள் அபிராமியம்மன். வேறு பெயர்கள் அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள் என பல பெயர்கள் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் கால சக்தி பீடம் ஆகும். தல விருட்சம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் என்ற ஜாதிமுல்லை. தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் குகாம்பிகையாக அருள் பாலிக்கிறாள்.

ஒருசமயம் பிரம்மதேவர் ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர் விதைத்த வில்வ விதை இத்தலத்தில் 24 நிமிடத்தில் மரமாக வளர்ந்தது. இங்கு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக சிவனே ஆதி வில்வநாதராக தனிசன்னநிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியில் விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர் அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின் புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். அட்டவீரட்ட தலங்களில் இத்தலம் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். முருகப் பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இந்த வினாயகர் துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரக பூஜைகள் இங்கு கால சம்கார மூர்த்திக்கே செய்யப்படுகிறது.

திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது 50 ஆம் திருமண விழா பூஜையும் 59 வயது பூர்த்தியாகி 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும் 60 வயது பூர்த்தியாகி 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும் 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜையும் 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் 90 வயது பூர்த்தியாகி 91 வயது தொடங்குகிறவர்கள் கனகாபிஷேகம் பூஜையும் 100 வயது தொடங்குகிறவர்கள் பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த பூஜைகள் செய்பவர்கள் திதி நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. இந்த பூஜைகளை செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம். இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோக நிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளி மயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக் கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சன்னதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் சஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.

அபிராமி பட்டரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவு பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சன்னதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.

என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970 களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அனுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு. ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப் பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப் பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கிறார்கள்.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார்.

எமன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும் திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும் மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க முடியாது. பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் ஆகும். எமனுடன் இருப்பது உயிர்ப்பித்த அனுக்கிர மூர்த்தி கோலம் ஆகும். ஆக பீடம் திறக்கும் போது ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிர மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை சிறுமி வடிவில் இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக தினமும் காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்தது. பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் தற்போதும் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வது தலமாகும்.

திருக்கடையூரில் இருந்து தென்மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள திருமணல்மேட்டில் மார்க்கண்டேயருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு மூல சன்னதியில் மார்க்கண்டேயர் சிலை உள்ளது. அந்த இடத்தில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மகன் பிறக்க வேண்டி கடவுளை வழிபட்ட கோவிலும் உள்ளது.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவனது பெயர்கள் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் கோயிலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதற்கு திருக்கடையூர் ரகசியம் என்று பெயர். இக்கோயிலை தற்போது தரும்புரம் ஆதினம் நிர்வாகித்து வருகிறார்கள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இங்குதான் அவதரித்தார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். பிரம்மன் அகத்தியர் புலஸ்தியர் வாசுகி துர்க்கை பூமாதேவி முதலியோர் வழிபட்ட தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரியார் தனது திருப்புகழ் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 42 திருந்துதேவன்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 42 வது தேவாரத்தலம் திருந்துதேவன்குடி. நண்டாங்கோயில் திருத்தேவன்குடி திருவிசலூர் என வேறு பெயர்களும் உள்ளது. புராண பெயர் கற்கடேஸ்வரம் நண்டாங்கோயில். மூலவர் கர்க்கடகேஸ்வரர். கற்கடகம் என்றால் நண்டு என்று பொருள். உற்சவர் சோமாஸ்கந்தர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அம்பாள் அருமருந்தம்மை அபூர்வநாயகி அருமருந்துநாயகி. பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றார்கள். தல மரம் நங்கைமரம். தீர்த்தம் நவபாஷண தீர்த்தம் பங்கய தீர்த்தம் காவிரிநதி. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மற்றும் சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம் திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. நண்டான் கோயில் என்று தற்போது அழைக்கிறார்கள். அனைத்து சிவ ஆலயங்களிலும் சந்திரனுக்கு இருக்கும் தனி சன்னதியில் நின்ற நிலையில் இருப்பார். இக்கோவிலில் அமர்ந்த நிலையில் யோகத்தில் இருக்கிறார்.

ஒரு காலத்தில் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்து இருந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன் நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினார்கள். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வியந்த மன்னன் அவர்களிடம் தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும் அதனுள் ஐக்கியமானார்கள். மருத்துவர்களாக வந்தது சிவ பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பிய போது ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால் அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.

ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜைகளையும் பரிகாசிக்கும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர் அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான். தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன் தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தாமரை பயிரிட்டு தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்துவிட்டான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன் நண்டை கொல்ல முயன்றான். நண்டு சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன் லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள் லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும் என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும் இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது. சந்திரன் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளான். திருஞானசம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் தேவார பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 41 சேங்கனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 41 வது தேவாரத்தலம் சேங்கனூர். சத்தியகிரி குமாரபுரி சண்டேசுவரபுரம் என்று வேறு பெயர்களும் உள்ளது. புராண பெயர் சேய்ஞலூர் திருச்சேய்ஞலூர். சத்தியகிரி குமாரபுரி சண்டேசுவரபுரம் என்று வேறு பெயர்களும் உள்ளது. மூலவர் சத்தியகிரீஸ்வரர் சத்யகிரிநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சகிதேவியம்மை. தலமரம் ஆத்தி. தீர்த்தம் மண்ணியாறு சத்திய புஷ்கரணி. கோச்செங்கட்சோழன் கட்டிய இந்த மாடக்கோயில் கோயில் கட்டு மலையின் மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலை மேல் ஒரு பிராகாரமும் சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலம் ஆகையால் கோவில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவிலின் மேலே ஒரு பிரகாரம் மற்றும் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மேலே மூலஸ்தானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர் நால்வர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சுப்பிரமணியர் கஜலட்சுமி சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மகா மண்டபத்தில் தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது. கந்தபுராணம் வழிநடைப்படம் பகுதியில் இதுதலம் பற்றிய வரலாறு உள்ளது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும் முருகன் வழிபட்டதால் சேய் – முருகன் நல் ஊர் – சேய்ஞலூர் என்ற பெயர் பெற்றது. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதார தலம் இது. கோவிலின் எதிரே இவருக்கு கோயில் உள்ளது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது. ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும் மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பட்டது.

அனைத்து சிவன் கோயில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். எச்சதத்தன் என்கிற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசருமர் (சண்டிகேஸ்வரர்). இவர் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். பசுக்கள் மேய்ச்சலின் போது விசாரசருமர் அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து பால் அபிஷேகம் செய்து வந்தார். இதை பார்த்த ஊர்மக்களும் தந்தையும் கண்டித்தும் மீண்டும் மீண்டும் பால் வீணாவதை கண்டித்த தந்தையை பக்தி மயக்கத்தால் செய்வதறியாது அருகில் இருந்த கோலால் அடிக்க தந்தை இறந்தார். விசாரசருமர் முன் தோன்றிய தேவியும் பரமேஸ்வரரும் சிவபூசை தடைபட கூடாது என்பதற்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்கு தந்தையாய் இருப்பேன் எனக்கூறி கொன்றை மாலை ஒன்றை அனிவித்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கே உரித்தானவை. என்னை வழிபட்டவர்கள் உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். சண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். இவர் இத்தலத்தில் வேறெங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். சிவன் காட்சி கொடுத்ததால் சண்டேஸ்வரரே பிறை சடை குண்டலம் கங்கையுடன் காட்சி தருகிறார். சிவன் நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருக்கிறது. சண்டிகேஸ்வரரின் வரலாற்றை தேவாரம் பாடல் பெற்ற சிவ தலம் 40 யிலும் அறிந்து கொள்ளலாம்.

பிரணவமந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரமனை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும்படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால் தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சீடனாகவும் மகன் குருவாகவும் இருக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதை போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

சிபிச்சக்கரவர்த்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று. நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் சிபிச்சக்கரவரத்தி அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7 வது பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 40 திருவாய்ப்பாடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 40 வது தேவாரத்தலம் திருவாய்ப்பாடி. புராண பெயர் வீராக்கண் திருஆப்பாடி. மூலவர் பாலுகந்தநாதர் பாலுகந்த ஈஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பிருகந்நாயகி பெரியநாயகி. தலமரம் ஆத்தி மரம். தீர்த்தம் மண்ணியாறு தீர குண்டம். கோவிலில் கொடிமரம் இல்லை.

கோவிலுக்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஷப வாகனத்தில் இறைவனும் இறைவியும் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும் முருகரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்து முதல் பிரகாரத்தை அடையலாம். இங்கு நந்தவனமும் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபமும் உள்ளது. பலிபீடம் நந்தி ஆகியவற்றைக் கடந்து முன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபம் வெவ்வால் நெற்றி அமைப்புடையது. மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உட்பிரகாரம் நுழைந்து வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர் முருகர் மகாலட்சுமி விநாயகர் சுப்ரமணியர் சனீஸ்வரர் பைரவர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடும் முறையில் தனிக் கோயிலில் உள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருக்கிறது. மகா மண்டபத்தில் பைரவர் சூரியன் சனிபகவான் நடராஜர் சபை பைரவர் சன்னதிகள் உள்ளன.

எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் விசாரசர்மர் விளையாடிக்கெண்டு இருந்தார். அப்போது ஒருபசு தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. இடையன் தன் கையிலுள்ள அப்பசுவை அடித்தான். விசாரசர்மரை அவனைக் கண்டித்து அவ்வூர் வேதியர்களின் அனுமதியுடன் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். விசாரசர்மரால் அன்பாக மேய்க்கப்பட்ட ஆநிரைகள் அதிகமான பாலைச் சொரிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப் பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் ஆ (பசு) மேய்த்த தலமாதலால் ஆப்பாடி ஆனது. 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

ஆப்பாடியில் இருந்த இடையர் குலத்தை சேர்ந்த ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வழியில் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பால்குடம் கவிழ்ந்தது. தினந்தோறும் இது போல் நடப்பதால் கோபம் கொண்ட இடையன் கையிலிருந்த அந்த இடத்தை அரிவாளால் வெட்டினான். அந்த இடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதி படிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தத்தை தணித்த இறைவன் இன்னருள் புரிந்தார். இந்த இடத்திலே இருந்து வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு கோவில் எழுப்பப்பட்டது.

சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் பழமையானத் திருக்கோயில். கல்வெட்டில் இறைவன் பெயர் ஆப்பாடி உடையார் என்றுள்ளது. சண்டேசுவரர் வழிபட்டுள்ளார். திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 39 திருப்பனந்தாள்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 39 வது தேவாரத்தலம் திருப்பனந்தாள. மூலவர் செஞ்சடையப்பர் தாலவனேஸ்வரர் ஜடாதரர் அருணஜடேஸ்வரர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. அம்பாள் பிருகந்நாயகி பெரிய நாயகி தாலவனேஸ்வரி. தலமரம் பனைமரம் தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்துள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டுள்ளார். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஐராவத தீர்த்தம் தாடகை தீர்த்தம். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார். புராண பெயர் தாடகையீச்சரம். கோயிலுக்கு தாடகையீஸ்வரம் தாடகேச்சுரம் என்றும் உள்ளது. தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. பனையின் தாளின் (அடிப்பகுதி) இறைவன் எழுந்தருளியிருத்தலாலும் பனைமரம் தலமரமாதலால் ஊரின் பெயர் பனந்தாள் என்று பெயர் பெற்றது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம் கிழக்கில் 5 நிலை கோபுரம் மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தெற்கு பக்கம் குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர் கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறு கால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும் குங்குலியக்கலய அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும் அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும் நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன. சுப்ரமண்யர் உற்சவருக்குப் பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்றது சிற்பமாக செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப்பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. 1942 இல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர். வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் சுதை உருவத்திற்கு எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன.

தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய் என்று அருளினார். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாமல் விதிப்படி இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை உலகத்திற்கு வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை விலகச் செய்தனன். ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறதே இன்னும் கைகள் இருந்தாள் இறைவனுக்கு மாலை சாத்தலாமே என்று அப்பெண் வருந்தி துதித்து வழிபட்டாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மேலு இறைவன் அவளுக்கு தரிசனம் கொடுத்து 16 கைகளை கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக் கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன். 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப் புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும் இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.

முன்னொரு கற்பத்தில் அம்பாள் இறைவனை வணங்கி ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும் எனப் பிரார்த்தித்தாள். அதற்கு இறைவன் நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம் என்று உரைத்தனர். அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்துக்கு வந்து எதிர்முகமாக வடக்கு திசையில் அமர்ந்து தவம் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்பாளுக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இக்காரணத்தால் இறைவர் மேற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருக்கிறார். அம்பாள் உபதேசம் பெறுவதற்கு முன்பாக பாலாம்பிகை எனவும் உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் அழைக்கப்படுகிறாள்.

அசுரர்களின் கொடுமைக்கு உட்பட்ட தேவர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். இதனைக் கேட்ட இந்திரன் போர் புரிய ஐராவதத்தை வருமாறு அழைத்தான். ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுலகில் மந்தர மலையைக்கு வந்திருந்தது. இதனை அறிந்த இந்திரன் தக்க சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையை இழந்து மண்ணுலகத்தில் காட்டானையாக திரிவாய் என்று சாபமிட்டான். இதனால் காட்டில் ஐராவதம் காட்டுயானையாக திரிந்து கொண்டிருந்தது. அப்போது காட்டிற்கு வந்த நாரதரை வணங்கி சாபவிமோசணம் பெற அவரிடம் வழி கேட்டது. நாரதர் தாலவனேஸ்வரரை வணங்கினால் சாபத்தை போக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். அவரின் சொற்படி இத்தலத்திற்கு ஐராவதம் வந்து தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது.

குங்குலியக்கலய நாயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி கேட்டதும் இது இறைவன் செயல் என்று எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். அப்போது விநாயகர் அசரீரியாக நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுங்கள் என்று அருளினார். வினாயகர் அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி எடுக்க அவரது மகன் உயிர் பெற்று எழுந்தான். இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயு மூலையில் எழுந்தருளியுள்ளார்.

நாகலோகத்தில் வாசுகி தன் மகள் சுமதிக்கு திருமணம் செய்ய எண்ணினாள். சுமதி அதைப் பற்றிய முயற்சி எதையும் தற்போது செய்ய வேண்டாம் என்று கூறி கன்னி மாடத்தில் அமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி நீ தாலவனேஸ்வரரை பூசிப்பாய் என அருளினார். சுமதியும் அவ்வாறே அக்கோவிலின் கிணறு வழியாக இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தாள். அப்போது தல யாத்திரை செய்து வந்த அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தை வந்தடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் கிணற்றின் வழியாக வந்து அம்பாளுக்கு மேல்புறம் ஓர் தடாகம் அமைத்து தினந்தோறும் வழிபட்டு வந்தாள். அரித்துவசனும் ஆலயத்திற்குத் தெற்கு பக்கமு ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தி பெற்றார்கள்.

நாகுன்னன் என்பவர் அந்தணர் குலத்தில் உதித்தவன் பிதுர்க்கடனுக்காக வைத்திருந்த பொருள்களை அபகரித்ததால் நரகத் துன்பமடைந்து இறுதியில் வேடுவனாகப் பிறந்தான். வழிப்போக்கர்களின் பொருள்களைக் கவர்ந்து உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் தலயாத்திரை செய்து வரும் முனிவர்களுடைய பொருள்களை அபகரிக்க எண்ணி அவர்களைப் பின் தொடர்ந்து வந்தான். இத்தலத்து எல்லைக்கு வந்ததும் தனது நல்வினைப் பயனாலே வந்த காரியத்தை மறந்து மூன்று நாட்கள் தாலவனேஸ்வரரை பூசித்துத் திருவாதிரைத் திருநாளன்று சிவலோகம் சென்று அடைந்தான். சங்குகன்னன் என்ற வேடுவர் தலைவன் நாரதர் ஆணைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தங்களில் நீராடி தாலவனேஸ்வரரை பூசித்து விரும்பியபடி மகப்பேற்றை அடைந்தான்.

இக்கோயிலின் மண்டபங்களிலும் சுவர்களிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவைகளெல்லாம் தொல்பொருள் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன. இத்திருக்கோயிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருங்கல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை மேலும் பெரிதாக எடுத்துக் கட்டினான். கல்வெடுக்களில் இறைவன் பெயர் திருத்தாடகையீச்சரத்து மகாதேவர் திருத்தாடகேச்சரத்துப் பெருமான் திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது. இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி இக்கோயில் மகா மண்டபத்து வாசலில் தெற்கு பக்கம் உள்ள கல்வெட்டினால் தெரிந்து கொள்ளலாம். சோழ மன்னர்களும் அவர்களது சேனைத் தலைவர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி வந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தும் கோவில் பணியில் இருக்கும் பண்டாரத்தைச் சோதித்தும் வந்த செய்தி கல்வெட்டுக்களின் வழியாக தெரிந்து கொள்ளலாம். சோழமன்னர்கள் அதிராசேந்திர தேவன் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தில் கோயில் நன்கு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அக்காலத்தில் இக்கோயிலில் இருந்த தேவகன்மிகள் கோயிலில் இருந்த திருவாபரணம் பரிகலச் சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டார்கள். அதனைச் கண்டு பிடித்த மன்னன் அவர்களுக்கு அபராதம் விதித்தார். அவர்களால் அபராதம் கட்ட முடியாமையால் அவர்கள் தங்கள் கோயில் உரிமையை விற்று அபராதம் செலுத்தியதையும் கல்வெட்டால் அறியலாம். இவ்வூரில் பாயும் மண்ணி ஆற்றிற்கு குஞ்சர மல்லன் எனவும் ஊருடையப்பர் கோயிலுக்கு அசனீச்சரம் எனவும் குங்கிலியக் கலயனார் மனைவி பெயர் நீலாயி எனவும் பெயர் வழங்கியமை கல்வெட்டுக்களால் புலனாகிறது.

தாழம் பூவை சான்றாகக் காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மனுக்கு அதனால் ஏற்பட்ட பாவம் மற்றும் இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாவம் கெளதமர் மனைவியைக் களவாட முயற்சித்ததால் சேர்ந்த தோஷம் தக்கனுடன் கூடி இறைவனுக்கு எதிராக யாகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு உண்டான பாவம் குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகம் ஆகிய பாவங்ளை இத்தல இறைவன் போக்கியுள்ளார். இத்தல இறைவனை வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகை மற்றும் அகத்தியர் ஆதிசேஷன் பார்வதி சங்கு கன்னன் நாகு கன்னன் நாக கன்னியர் பிரம்மன் திருமால் இந்திரன் ஐராவதம் அகத்தியர் சூரியர் சந்திரன் ஆதிசேஷன் நாககன்னிகை தாடகை குங்கிலியக்கலய நாயனார் பூசித்து வழிபட்டுள்ளார்கள். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஐயடிகள் காடவர்கோன் நம்பியாண்டார் நம்பி அருணகிரிநாதர் சிதம்பர முனிவர் காளமேகப்புலவர் செஞ்சடை வேதிய தேசிகர் தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 38 திருமங்கலக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 38 வது தேவாரத்தலம் திருமங்கலக்குடி. மூலவர் பிராணவரதேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மங்களநாயகி மங்களாம்பிகை. தலமரம் வெள்ளெருக்கு கோங்கிலவு கோங்கு. தீர்த்தம் மங்கள தீர்த்தம் காவிரி. இத்தலம் பஞ்சமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 1. ஊரின் பெயர் மங்கலக்குடி 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தல தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம் 5. இத்தல விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரை விட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது. அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான் மலர் வைத்து பூஜித்தார். நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்யம் படைத்து வலம்புரி சங்கில் பால் பன்னீர் தேன் சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள். இதுதவிர சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

ஒரே கோயிலே இரட்டைக் கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக உள்ளது. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிசேகம் செய்கின்றனர். சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது.

அனைத்து கோயில்களிலும் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன்பின் திருமண விருந்தும் நடக்கும். நவராத்திரியின் போது அனைத்து கோயில்களிலும் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வார்கள். ஆனால் இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம் ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக் காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப் போல அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார். கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயில் (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டுள்ளனர். எனவே இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார. கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பப் பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவநாயகன்)என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளினர்கள். இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில் மனிதன் விலங்கு பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்துள்ளார். இக்கோயிலில் சோழர் பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. காளி சூரியன் திருமால் பிரம்மா அகத்தியர் அம்பாள் ஆகாசவாணி பூமாதேவி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 37 திருக்கோடிகா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 37 வது தேவாரத்தலம் திருக்கோடிகா. புராண பெயர் வேத்ரவனம். இத்தலம் 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட உள்ளது. மூலவர் கோடீஸ்வரர் வேத்ரவனேஸ்வரர் கோடிகாநாதர் கோடிநாதர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி வடிவாம்பிகை. தலமரம் பிரம்பு. தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம் காவிரிநதி. ஆனி 19 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் சூரியபகவான் தன் கதிர்களை இறைவனை மீது செலுத்தி வழிபாடு செய்கிறார். மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது. சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும் துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் பாலசனி என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. இவ்வூரை ஒட்டி காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் கரையேற்று விநாயகர் கற்சிலை நடராஜர் சப்தரிஷிகள் அகத்தியர் சித்திரகுப்தர் யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.

கா என்றால் சோலை எனப் பொருள்படும். கா என முடியும் ஐந்து சிவத்தலங்களை பஞ்ச காக்கள் என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்) திருநெல்லிகா (திருத்துறைப் பூண்டி) திருகுறக்குக்கா (நீடுர் அருகில்) மற்றும் இக்கோயில் திரு கோடிக்கா ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்துள்ள ஊர் என பொருள் கொள்ளலாம்.

திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலத்தில் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர் மத்தளம் அடிப்போர் தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ளபூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி அகத்திய முனிவர் தட்சிணாமூர்த்தி அத்ரி முனிவர் பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் உள்ளது. ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன் நீதி வரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் உள்ளனர்.

திருக்கோடீஸ்வரரின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை கரகம் அபயஹஸ்தம் தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும் தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் சுவாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது. திருக்கோடிகா கோயிலில் மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம் பன்னிரண்டு கைகள் கைகளில் நாககனி வில் பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி தேவானையுடன் அசுர மயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி தன் மகன் மாந்தி மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும் மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான ஜப தப தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன் யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

திருக்கோடீஸ்வரரின் வடபுற திருச்சுற்று சன்னதியில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம் பாணம் கட்கம் (கத்தி, சங்கு இடக்கைகளில் சக்கரம் வில் கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சன்னதி உள்ளது. ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம் ஹோமம் ஜபம் எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார். மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது.

திருக்கோடிகா ஊருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை திருமங்கலக்குடி திருக்குரங்காடுதுறை திருவாவடுதுறை திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடியவில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார். திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் மறுநாள் காலை நந்தி அம்பாள் சுவாமி விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில் அன்னமும் சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர்தான்.

ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை உயிர் பெறச் செய்வதில் இத்தலத்து விநாயகர் பேருதவி செய்ததால் கரையேற்று விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். திருக்கடையூரில் கால சம்ஹாரம் நடந்த பிறகு யமதர்மன் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து அனைத்தும் சிவத்திற்குள் அடக்கம் என்ற நிலையுணர்ந்து பிரம்புக் காட்டினுள் உறைந்துள்ள திருகோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்றுக் கிடந்தார். காலன் இயக்கமற்று விட்டதால் பூலோகத்தில் மரணம் நின்றுவிட்டது. இதனால் பூமி தன் பாரம் தாங்காமல் பூமாதேவி செயல்பட முடியாமல் சகல பூலோக காரியங்களும் முரண்பட்டு நிலை தடுமாறியது. விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட எண்ணி திருக்கோடிக்காவல் நோக்கி ஓடி வந்தனர். அப்போது கங்கைக்குச் சமமான காவிரி நதியைக் கடக்க எண்ணுகையில் திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர். ஈசனைச் சந்திக்கும் அவசர கதியில் முதற்கடவுளாம் விநாயகரைப் பூஜிக்காது வந்ததனால் ஏற்பட்ட சோதனை இது என்பதை உணர்ந்தனர். உடனே ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானது உருவத்தைச் சிருஷ்டி செய்து அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்க வேண்டினர். இதனால் மனமிரங்கிய விநாயகரும் ஆற்று வெள்ளத்தைத் தணித்துத் தேவர்களைக் கரையேற்றினார். அப்போது முதல் இத்தலத்து விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற நாமம் தாங்கி அருளி வருகிறார் ஆற்று மணலினால் ஆன திருமேனி என்பதால் அபிசேகங்கள் இவருக்குச் செய்யப்படுவதில்லை.

ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை. மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கடந்து வரமுடியாமல் ஆழ்வார்கள் சிரமப்பட்டபோது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வார்கள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம்பொருள் என்று சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாதபடி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவபெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று சுவாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை சுவாமியிடம் வரம்பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனை தனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார். துர்வாச மகரிஷி தட்சன சிதம்பரம் என அழைக்கப்படும் திருக்களர் ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சன்னதியைத் தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுரசுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன் வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணி விடுவாரோ என எண்ணி அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது என்று தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுத்தாள். இதை உணர்த்தும் வகையில் சுவாமி சந்நிதியில் திருக்கோடீஸ்வரருக்கும் துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை உள்ளது.

திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்ததால் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம். கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களைக் சொல்லிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகாசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப் பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது என்று துர்வாசர் சபித்தார்.

துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் திருக்கோடீஸ்வரர் அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும்படியும் ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள் துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திர தேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திர தேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம் நைமிசாரணியம் துவாரகை கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக் கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத் தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள் எனக் கூறுகிறார். மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும் என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக் கேட்டு கோபமடைந்த மந்திர தேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் நாராயணனைக் குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார்.

வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த உலகத்தில் பாவக சேத்திரம் ஒன்று உள்ளது அதில் அரசமரம் அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு சர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் திரிபுரசுந்தரி தேவியுடன் இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம் சித்ர குப்த தீர்த்தம் யம தீர்த்தம் வருண தீர்த்தம் குபேரதீர்த்தம் அக்னி தீர்த்தம் துர்கா தீர்த்தம் பூத தீர்த்தம் காளி தீர்த்தம் நிர்நதி தீர்த்தம் என்ற மகா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம அர்த்த காம மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் சித்தி பெற்றன. மேலும் சப்தரிஷிகளும் சனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பல பேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மகா ஹத்யாபாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது. இந்த சேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும்படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி அரச மரத்தை பிரதட்சணம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து,அசுவமேத யாகங்கள் செய்தார். இதனால் ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து நாராயணன் முன்தோன்றி அவரது விருப்பம் என்னவென்று கேட்டார். நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன் என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார்.

நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும்படி கூறுகிறார். மந்திர தேவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்கப் போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி துர்வாசருக்கு காட்சி கொடுத்தார். அவரிடம் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித் ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார்.

கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன சேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார். அந்த சமயத்தில் மகா காளியும் வீரபத்திரரும் மகாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திர தேவதைகளை மிகவும் துன்புறுத்தினார்கள். வேறு வழி தெரியாத மந்திர தேவதைகள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறிவிட்டு தமது சுய வடிவத்தைக் காட்டினார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள் உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார் என்று துர்வாசர் கூறிவிட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார்.

திரிகோடி மந்திர தேவதைகள் வேண்டுகோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித் தந்து சிவ பூஜை விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள் சாஸ்தா காளி துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர் திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ர நாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

த்ரிகோடிஸ்த:
த்ரி கோட்யங்க:
த்ரிகோடி பரிவேஷ்டித: என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். அகஸ்தியருக்கு சண்முகராலும் சண்முகருக்கு விநாயகராலும் விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்.

சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும் பார்வதியும் ஜலக்கிரீடை செய்யும்போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுரசுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாள். இத்தருணம் மகாகணபதி முக்கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றி தமது மூர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும்படி கூறுகிறார். அதன்படி மந்திர தேவதைகள் நந்திக்கு கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர் சண்டிபீடேஸ்வரர் கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திர தேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் பரமஸ்வரனிடம் சென்று நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். அதன்படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றினர். பிரபோ எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள் பிரம்மாதி தேவர்கள் சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ்வரரைத் துதிக்கத் தொடங்கினார்கள்.

பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய சேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது என்று அருளினார். சிறந்த சிவபக்தரான சுதர்சனன் என்ற வைஷ்ணவ சிறுவன் ஹரதத்தராக மாற திருவருள் கிடைத்த தலம். இத்தல அம்பிகை மகானான பாஸ்கரராயரை லலிதா சகஸ்ரநாமத்திற்கு தன் சன்னதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம்.

கிபி 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ பாண்டிய பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். கிபி 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லட்சுமி சரஸ்வதி கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கிபி 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விரு கல்வெட்டுகளில் இந்த அரசன் மாணிக்கவாசகர் சுவாமிகளின் உலோகச் சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளைத் தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது. தினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது சுவாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள் மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது. சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் மாதேவி எடைக்கு எடை பொற் காசுகளை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கத்தை தோற்றுவித்தார். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதில் சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ளது.

திருக்கோடிகா கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம். சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கிபி எட்டாம் நூற்றாண்டில் 750 ம் வருடத்தில் தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கிபி 950 – 957 க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தம சோழ மன்னர் ஆண்ட சமயம் அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆணைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன. ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்கிறது. அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்கிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ளவதற்காக செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். இக்கோவில் திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மா தேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது. சிவபெருமானின் 64 லீலைகளை பல்லவ கால சிற்பங்களில் இத்தலத்தில் காணலாம். பல்லவர்கள் முத்தரையர்கள் பாண்டியர்கள் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன. மூன்று கோடி ரிஷிகள் சேக்கிழார் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 36 திருக்கஞ்சனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 36 வது தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் அக்னீஸ்வரர். இங்கு இறைவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கற்பகாம்பிகை கற்பாகம்பாள். தலமரம் பலாசமரம் மற்றும் புரசு. தீர்த்தம் அக்கினி தீர்த்தம் பராசர தீர்த்தம். கம்சன் வழிபட்டதால் இத்தலம் கஞ்சனூர் என்று மாறியது. இத்தலத்திற்கு பலாசவனம் பராசரபுரம் பிரமபுரி அக்கினிபுரம் கம்சபுரம் முத்திபுரி என்று வேறு பெயர்கள் உள்ளது. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலை ரூபமாக இருக்கிறார். இத்தல இறைவன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார். பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது. சந்திரனின் சாபம் நீங்கியது. கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியது. கலிக்காமருக்கு திருமணம் நடந்தது. மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம்.

மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற நவக்கிரக தலங்களில் இத்தலத்திற்கு செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும் பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர் சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண் தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைய பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தை அடைந்தால் இடப்பாக்கம் விநாயகர் தரிசனம் வலப்பக்கம் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பக்கம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர் மயூர சுப்பிரமணியர் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர் கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர் சூரியன் சனிபகவான் சந்திரன் நவக்கிரக சன்னதி நால்வர் சன்னதிகள் உள்ளன.

கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை திருமங்கலக்குடி திருக்குரங்காடுதுறை திருவாவடுதுறை திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டார். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவ பக்தராக இருப்பதை அவ்வூர் மக்கள் விருப்பமில்லை. எனவே அவரை அவ்வூர் மக்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியில் அமர்ந்து சிவனின் மகிமையை உலகிற்கு காட்ட வேண்டும் இல்லையெனில் எந்த சிவன் கோவிலுக்கும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். ஊர் மக்கள் கட்டளையிட்டபடி பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மூன்று முறை கூறினார். அவருக்கு உடலில் எந்த விதமான தீக்காயங்களும் ஏற்படவில்லை. இதனைக் கண்ட ஊர் மக்கள் அவரின் மகிமையை அறிந்து அவரை சரணடைந்தார்கள். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. இவ்வூரின் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.

ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பது போல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வந்தர் அவரை தேடிச்சென்று வணங்கினார். ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்து விட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க அவர் செய்வதறியாது திகைத்தார். விருந்தினருக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ஒரு பாதி விதைக்கு ஒரு பாதி கறிக்கு என்று கூறி அருளினார். இறைவனின் ஆணைப்படி பாதி சுரைக்காயை விருந்தினருக்கு உணவு அளித்தும் பாதி விதைக்கும் பயன்படுத்தினார்.

பிராமணர் ஒருவர் புல் கட்டை கீழே போடும் போது தெரியாமல் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது. இதனால் பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பிராமணர் பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவ பஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும் என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டது. அனைவரும் பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை உணர்ந்து பிராமணரை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

பராசர முனிவர் பிரம்மா அக்கினி கம்சன் சந்திரன் விருத்தகாளகண்டன் சித்திரசேனன் மார்க்கண்டேயர் சுரைக்கா முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளார்கள். சோழர் விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் என்றும் இறைவன் பெயர் அக்னீஸ்வரம் உடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. சுந்தரர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 35 திருப்பந்தணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 35 வது தேவாரத்தலம் திருப்பந்தணைநல்லூர். புராணபெயர்கள் தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கணவராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மூலவன் பசுபதீஸ்வரர். சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் லிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது மூலவர் புற்றால் ஆனவர் என்பதால் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது. ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன. அம்பாள் வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை. அம்பாள் தவம் செய்யும் கோலத்தில் உள்ளதால் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாக உள்ளனர். தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் சூரியதீர்த்தம். சிவன் பசுவின் பதியாக வந்ததால் பசுபதீஸ்வரர் என பெயர் பெற்றார்.

கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு திருஞானசம்பந்தர் திருவாயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன. கோவிலுள் பிரமன் வாலி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக உள்ளனர். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர் உமையுடன் ஆயனாக வந்து இங்கு ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைத்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் ஆனது. பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார்,

பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க அதன் ஒருகால் குளம்பு புற்றின் மீது பட இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள். மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்பாள் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.

திருக்கோவிலில் காம்பீலி மன்னனின் மகன் பார்வை பெற்று திருப்பணிகளையும் செய்து வழிபட்டு இருக்கிறார் என புராண வரலாறு உள்ளது. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது. சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பசுபதிதேவர் என்றும் முதலம் ராசராசன் கல்வெட்டில் இத்தலம் பந்தணைநல்லூர் என்றும் குறிக்கப்படுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் ராசராசன் அரியணையேறிய 11-ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி ஒருவிளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன் வீதம் மூன்று விளக்குகளுக்கு பொன் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும் பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 34 மேலக்கடம்பூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 34 வது தேவாரத்தலம் மேலக்கடம்பூர். புராணபெயர் திருக்கடம்பூர், கடம்பைக் கரக்கோயில். மூலவர் அமிர்தகடேஸ்வரர். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் சோதிமின்னம்மை, வித்யூஜோதிநாயகி. தலமரம் கடம்பமரம். தீர்த்தம் சக்தி தீர்த்தம். கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது.

கோவில் 3 நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர் அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் ஆகின்றார்.

குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்கிறார். அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார், இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி இருக்கின்றனர். விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கிறார். இத்தல விநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுகின்றனர். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும் மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா – சரஸ்வதி, ஜோதி – லட்சுமி, நாயகி – துர்க்கை) என்று அழைக்கப்படுகிறாள். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயரும் உண்டு.

ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன் சித்திரகுப்தர் இருக்கின்றனர் அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக் கொண்டாடினார் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குகின்றது.

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான்.

அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்துச் செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்து கொண்டு இருக்கிறார். இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில். முருகப் பெருமான் இந்திரன் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.