தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 217 திருச்சோபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 217 வது தேவாரத்தலம் திருச்சோபுரம். புராணபெயர் தியாகவல்லி. மூலவர் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சோபுரநாயகி, தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி. தலமரம் கொன்றை. தீர்த்தம் கிணற்று தீர்த்தம். மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், சிவன், அம்பாள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன. இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கயிலாயத்தில் சிவன் அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால் எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர் அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள லிங்கத் திருமேனியுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடம் இருக்கிறது. லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பில் கங்காதேவி உள்ளார். அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் குங்கும வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும் பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் சொல்லப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த காரணத்தால் தியாகவல்லி என்று பெயர் பெற்றது. இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின் ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர். கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும் இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இடது கையில் நாகம் வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல் வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.