தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 219 திருநாவலூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 219 வது தேவாரத்தலம் திருநாவலூர். புராணபெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர். மூலவர் பக்தஜனேசுவரர் ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகின்றன. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மனோன்மணி நாவலாம்பிகை, சுந்தர நாயகி. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். தலமரம் நாவல்மரம். தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி. திருநாவலூர் சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர்.

கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. சுந்தரர் தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து சுந்தரர் கயிலாயம் சென்றபோது யானை மீது சென்றார். எனவே சுந்தரர் யானை வாகனத்தில் உள்ளார். கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளனர். கொடிமர விநாயகர் சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. நால்வர் இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது. வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே.

பிரகலாதனின் தந்தை இரண்யன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து மணம் புரிந்தார். இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும் ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன் சிவனை பூஜித்து விஷம் நீங்கியது இத்தலத்தில் தான். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார். சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார். சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் புராண பெயரான திருநாமநல்லூர் என்று ஊர்ப்பெயரையும் குறிப்பிட்டு தனது பாடல்களில் பாடியுள்ளார். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்கள் அசுரர்கள் போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள் இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது. இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி. பிரம்மா, விஷ்ணு, சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர், சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.