சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 231 வது தேவாரத்தலம் பனையபுரம். புராணபெயர் திருப்புறவார் பனங்காட்டூர். மூலவர் பனங்காட்டீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சத்யாம்பிகை, புறவம்மை, மெய்யாம்பாள். அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். தலமரம் பனை. பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் இத்தலமும் ஒன்று. தீர்த்தம் பத்ம தீர்த்தம். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும் பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன. நான்கு நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோபுர வாயில் நுழைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதி வெளிப் பிரகாரத்திலுள்ளது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் சன்னிதிகள் உள்ளன. திருநீலகண்டர் தம் மனைவியுடன் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கின்றார்.
சிவபெருமானை நிந்தித்து தக்கன் செய்த வேள்விக்கு சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன் வீரபத்திரரால் தாக்கப்பட்டு ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். இதற்குச் சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பதற்காக தன் கண்களை அளித்தான். இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சி தந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.
இந்த ஆலயத்தின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தவை இதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. இவரது பெயராலேயே பரவைபுரம் என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது. இத்தலத்தில் முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்களின் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் கடாரம் (இன்றைய மலேசியா) வென்றதை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார் பனங்காடுடையார் கோவில் எனவும் இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இறைவனை திருஞான சம்பந்தர் புறவார் பனங்காட்டீசன் என்று அழைக்கிறார். இருப்பினும் இங்குள்ள கல்வெட்டு களில் இறைவனின் திருநாமம் கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவன், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.