தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 234 காஞ்சிபுரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 234 வது தேவாரத்தலம் காஞ்சிபுரம். பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. மூலவர் ஏகாம்பரநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் காமாட்சி ஏலவார்குழலி. தீர்த்தம் சிவகங்கை(குளம்), கம்பாநதி. தலமரம் மாமரம். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மாமரத்திற்கு ஆம்ரம் என்பது வடசொல் அது தமிழில் வழங்கும்போது தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும் கம்பம் என்றும் மருவிற்று. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் ஏகாம்பரநாதர் என்று இப்பெயர் பெற்றார். முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது இத்தலம்.

இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. ஏகம்பரநாதருக்கு திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது. காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. இவரை பிருத்வி லிங்கம் என்று அழைப்பார்கள். இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும் எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது நிலத்தைக் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் இதுமுதல் தலம் ஆகும். உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன் எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார்.

அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க இத்தலத்திற்கு அனுப்பினார். இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்து வர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்து விடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது. இக்கோவிலில் அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. ஆழ்வார்கள் பாசுரம் பாடிய திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி கோவிலுக்கு உள்ளேயே உள்ளது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை என்பவள் பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு வெண்பாக்கம் என்னும் ஊரில் ஊன்றுகோல் கொடுத்த சிவன் இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் அருளிய இரண்டாம் காண்டம் காஞ்சிப்புராணம், கச்சியப்பமுனிவர் இயற்றிய ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, ஏகம்பரநாதர் அந்தாதி ஆகிய நூல்கள் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார். பின் குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்.

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. கிழக்கு ராஜகோபுரத்தையும் தெற்கு வாயில் பெரிய இராஜ கோபுரத்தையும் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார். மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயர் கட்டியுள்ளார். இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன் நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும் அது பிற்காலச் சோழர்களால் திருத்தி கட்டப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளியில் உள்ள மதில் சுவர் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. முன்மண்டபத்தில் ஆதித்த கரிகாலன் சிலை உருவம் உள்ளது. அதற்குத் தாடி இருக்கிறது. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி கி.பி.1250 சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், ராஜராஜன், விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் கி.பி. 1406 கல்வெட்டு மூன்று இருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் கி.பி.1469 ஏகம்பரநாதர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி கி.பி.1250 காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது. காஞ்சிபுரத்தை அச்சுதராயன் கி.பி.1534 ஆண்டு படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி உள்ளது. விஜயநகரமல்லிகார்சுனனுடைய கி.பி.1456 கல்வெட்டு இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.