சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 213 வது தேவாரத்தலம் பெண்ணாகடம். புராணபெயர் தூங்கானை மாடம். மூலவர் சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர். இங்கு இறைவன் சதுர ஆவுடையாரக மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி. தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு. தலமரம் செண்பகம். முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பதைக் காணலாம். அதையடுத்து 5 நிலை இராஜகோபுரம் உள்ளது. கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கலாம். தேவகன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, வெள்ளை யானையாகிய கடம் (பெண்-ஆ-கடம்) இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.
ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டு வரச்சென்ற தேவகன்னியர் திரும்பி வாராததால் இந்திரன் காமதேனுவை அனுப்ப தானும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபட்டு இங்கேயே தங்கி விட்டது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப யானையும் இறைவனை வணங்கி திறந்த வெளியில் இருக்கும் இறைவனை மறைத்து வெயில் படாமல் பார்த்துக்கொண்டு இங்கேயே தங்கிவிட்டது ஒன்றும் புரியாத இந்திரன் தானே புறப்பட்டுத் தேடிவந்து பெருமானை வழிபட்டான். ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பநாயனார் இவ்வூரில் வாழ்ந்தவர். தன் மனைவியுடன் இணைந்து வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார். சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்பாள் தனியாக உள்ளார். திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமண நெறியிலே வாழ்ந்து வந்த இந்த உடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார். தன் உடலில் திரிசூல முத்திரையும், ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்ற சிவன் இத்தலத்தில் அவருக்கு முத்திரையை பொறித்தார். கலிக்கம்பநாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.