தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 214 திருக்கூடலையாற்றூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 214 வது தேவாரத்தலம் திருக்கூடலையாற்றூர். புராணபெயர் தட்சிணப்பரயாகை. மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. மூலவர் நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் பராசக்தி, ஞானசக்தி. இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. தீர்த்தம் பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள், சங்கம தீர்த்தம். தலமரம் கல்லாலமரம். வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது.

இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. நடராச சபையில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் உள்ளார். இக்கோவிலில் சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் பொங்கு சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் நாடு மனைவி மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு வியாதியுள்ள ஓரு நாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால் திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்பாள் அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார். சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது இத்தலத்தை வணங்காமல் சென்றார். இறைவன் அந்தணராக வந்து சுந்தரர் முன்செல்ல சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்டார். அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் வந்த அந்தணர் சிவபெருமானே என்று அறிந்து இறைவன் திருவருளை வியந்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூடலையாற்றூர் இறைவன் தன் முன் வந்த அதிசயத்தை தான் அறிந்து கொள்ளாமல் போனதை குறிப்பிடுகிறார். தனது பாடல்கள் பத்தினையும் பாடுபவர்களது வினைகள் பற்றுகள் அனைத்தும் கெடுவது உறுதி என்று கடைசி பாடலில் குறிப்பிடுகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.


உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.