தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 27 திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 27 வது தேவாரத்தலம் திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு). புராணபெயர் கர்மநாசபுரம், மேலைக்காழி, கருப்பறியலூர். கோவிலின் பெயர் கொகுடிக்கோயில். கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. மூலவர் குற்றம் பொறுத்தநாதர், அபராதசமேஸ்வரர். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார், அம்பாள் கோல்வளை நாயகி, விசித்ர பாலாம்பிகை. தலமரம் கொகுடி முல்லை. தீர்த்தம் இந்திர தீர்த்தம், சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்திற்கு மேலைக்காழி என்றும் பெயர். கோவிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும் இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார். கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கோவில் அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்று அழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும் ஆதித்யபுரி என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது. 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். எனவே தான் இத்தலம் கருப்பறியலூர் என வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. பிறவி இல்லாமல் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள்.

ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய சிவன் தோன்றி அனுமனே நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது திருக்குரக்கா என வழங்கப்படுகிறது.

ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான். இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர் எனப்படுகிறார். அதே போல் ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் தன் முன் நிற்பது இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது. வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன் ஆகியோர் வழிபட்டடுள்ளனர், இக்கோவிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை கொகுடிக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.