சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 2 வது தேவாரத்தலம் திருவட்களம். மூலவர் பாசுபதேஸ்வரர். அம்பாள் நல்லநாயகி சமஸ்கிருத பெயர் சத்குணாம்பாள். அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது. தீர்த்தம் கிருபா தீர்த்தம். தலமரம் மூங்கில். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். மூலவர் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவர். சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர் சித்தி விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே உள்ளனர். நடராஜர் இங்கு மகுடமணிந்து காட்சி தருகிறார்.
திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் இத்தலம் வந்த போது திருவேட்களத்தில் தங்கியிருந்து தினந்தோறும் சென்று தில்லை நடராஜரைத் தரிசித்து வந்தார். திருவேட்களம் பற்றி திருஞானசம்பந்தர் பாடும் போது வேட்கள நன்னகர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ என்றும் அம்பிகையை பெண்ணில் நல்லாள் என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் முருகனாகவும் முருகன் நடராஜராகவும் இத்தலத்தில் தோன்றியுள்ளார்கள். கிராத மூர்த்தியாக பார்வதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. கோயிலின் எதிரில் நாகலிங்க மரம் உள்ளது.
பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன் நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார். இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே நீ லோகமாதா நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது என சமாதானப்படுத்தி சற்குணா (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபா கடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. சந்நிதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. திருநாவுக்கரசர் தனது பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும் என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் கவலைகளால் கட்டப்பெற்று வீழ்ந்திடாது விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக அப்படி தொழுதால் வல்வினைகள் அனைத்தும் கெடும் என்றும் பாடியிருக்கின்றார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.