சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 227 வது தேவாரத்தலம் திருவாண்டார் கோவில். புராணபெயர் திருத்துறையூர். மூலவர் வடுகீஸ்வரர், பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு தலையில் தலைப்பாகையுடன் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். தலமரம் வன்னி. தீர்த்தம் வாமதேவ தீர்த்தம். இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்று மதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் தட்சிணாமூர்த்திக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர்க்கோலத்தில் இருக்கிறாள். முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும் பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா, தேவர்கள் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.
ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. படைப்புத்தொழிலுக்கு அதிபதியான பிரம்மா சிவனை போலவே ஐந்து தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன். ஒருசமயம் பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை சிவன் என நினைத்து மரியாதைகளைச் செய்தார். பிரம்மா மறுக்காமல் இருந்து விட்டார். இதைக்கண்டு கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். ஆணவம் அழியப்பெற்ற பிரம்மா சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவன் அவருக்கு மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக தலபுராணத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம். அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.