சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 230 வது தேவாரத்தலம் கிராமம். புராணபெயர் திருமுண்டீச்சரம், திருக்கண்டீச்சரம். மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை. தலமரம் வன்னிமரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், முண்டக தீர்த்தம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடம் முதலில் மகாமண்டபம், பின் அர்த்த மண்டபம் உள்ளது. நுழைவு வாசலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் உள்ளது. ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரும் வீற்றுள்ளனர். தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். கோயிலின் அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன் திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு பொக்களம் கொடுத்த நாயனார் என்ற பெயரும் ஆற்றின் கரையில் கோயில் இருப்பதால் ஆற்றுத்தளி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம் எனப்பட்டது. துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே, தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கல்வெட்டில் மவுலி கிராமம் என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். இக்கோயில் கி.பி.943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இத்திருக்கோயில் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. பிரமன், இந்திரன் ஆகியோரும் இத்தலத்தில் சிவலோகநாதரை வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆலயங்களில் இக்கோவிலும் ஒன்று. திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.