சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 246 வது தேவாரத்தலம் எலுமியன்கோட்டூர். புராணபெயர் இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர். மூலவர் தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தெய்வநாயகேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய செம்மண் நிறத்தில் தீண்டா திருமேனியாக உள்ளார். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன. இறைவன் லிங்கத்தில் பெரிய ஆவுடையாராக அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். இத்தலத்தில் சிவனை வருடத்தில் ஏப்ரல் 2 முதல் 7 ம்தேதி வரையும், செப்டம்பர் 5 முதல் 11ம் தேதி வரையும் சூரிய ஒளி படுகிறது. அம்பாள் கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை. இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள். தலமரம் மரமல்லிகை. தீர்த்தம் மல்லிகா புஷ்கரிணி.
ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும் அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு இருக்கின்றார். இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.
தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான். தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன் தெய்வநாயகேஸ்வரர் என்றும் அரம்பையர்களுக்கு அருளியதால் அரம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இதனால் அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தேவகன்னியர் தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவகுரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர் அம்மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார். அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள் தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால் அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன் அவரிடம் இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடுமாறும் கூறினார். அதன்படி இங்கு வந்த திருஞானசம்பந்தர் சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன் தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின் திருஞானசம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார். 1983-ஆம் ஆண்டு இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.