சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 247 வது தேவாரத்தலம் கூவம். புராணபெயர் கூவரம், திருவிற்கோலம். மூலவர் திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர், தீண்டாத் திருமேனி நாதர். இறைவனின் லிங்கத் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி. அம்பாளின் கருவறை விமானம் கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அக்னி தீர்த்தம். இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால் லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி பாலபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறார். ஆகையால் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் தவளைகள் வாழ்வதில்லை. வெளியில் இருந்து பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடும். தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை.
திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி திரிபுராந்தகர் என்றும் அம்பாளை திரிபுராந்தகி என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன் தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே இங்குள்ள சிவனுக்கு திருவிற்கோலநாதர் என்றும் தலத்திற்கு திருவிற்கோலம் என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சிணாமூர்த்தி உள்ளனர். மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர். திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன் திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவளிடம் சிவன் தான் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடப்போவதாகவும் அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள். இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் தர்க்க மாதா என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன் தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டது.
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள் அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர் அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல் தான் என உணர்ந்த சிவன் அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின் விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். திரிபுராதிகள் மூவருள் இருவர் வாயிலில் துவாரபாலகர்களாக இருக்கின்றார்கள். கோயிலுக்கு வெளியே திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட உடனே விடையாக இருந்து தாங்கிய கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது. கூரம் பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் கூரம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் கூவம் என்று மருவியது.
இந்த கோவிலிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்கின்றார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை. மேலும் 4 கி.மி தொலைவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து தீர்த்தம் கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் தவறான வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படருகின்றது. மூலவர் தீண்டாத் திருமேனி சுயம்பு மூர்த்திக்கு அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர். அதிக மழை வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும் போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்ற குறிப்புடன் திருஞானசம்பந்தர் தம் பாடலில் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.





