சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 212 வது தேவாரத்தலம் திருவட்டத்துறை. புராணபெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை. மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி. தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி. ஒரு முறை வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது. இதனால் இன்றும் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளது. தலவிருட்சம் ஆலமரம். தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடன் இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்பறம் உள்ளது. திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். திருஞானசம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது செல்வதை விட்டு நடந்தே சென்றார். திருஞானசம்பந்தர் தன் கால்கள் வழ்க்க நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் திருஞானசம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி திருஞானசம்பந்தர் கால்கள் வலிக்காமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை திருஞானசம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று திருஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.
மறுநாள் காலை திருநெல்வாயில் கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று திருஞானசம்பந்தரிடம் கொடுத்து அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். திருஞானசம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார். வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் நீவா என்று அழைத்துள்ளார்கள். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது. இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்டுள்ளார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் பாடல்கள் பாடியுள்ளனர்.