தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் #3 சிவபுரி, திருநெல்வாயில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 3 வது தேவாரத்தலம் ஆகும். மூலவர் உச்சிநாதேஸ்வரர் உச்சிநாதர், மத்யானேஸ்வரர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கனகாம்பிகை. கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம். சிவபெருமான் கிழக்கு பார்த்தும் அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். தல மரம் நெல்லி மரம். தீர்த்தம் கிருபா சமுத்திரம். சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் உள்ளது. சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி திருநெல்வாயில் என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோயில் அமைந்துள்ளது. சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது. திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது திருஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட அம்மா அப்பா என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன் பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் திருஞானசம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த திருஞானசம்பந்தர் வாயில் பால் வழியன் அமர்ந்து விட்டார்.

குளித்து விட்டு வந்த தந்தை பால் கொடுத்தது யார் யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா அபச்சாரம் செய்து விட்டாயே எனச்சொல்லி குச்சியால் திருஞானசம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள் உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில் மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். திருஞானசம்பந்தரும் அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன் கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கண்வ மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.