சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 14 வது தேவாரத்தலம் சீர்காழி. புராணபெயர் திருக்காழி. மூலவர் சட்டைநாதர், பிரமபுரீஸ்வரர், தோணியப்பர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால் சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார். அம்பாள் பெரிய நாயகி, திருநிலைநாயகி. தலமரம் பாரிஜாதம், பவளமல்லி. தீர்த்தம் பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி என்று 22 தீர்த்தங்கள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர். சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் நடுவே திருஞானசம்பந்தர் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கணநாத நாயனார் அவதரித்த தலம். கோவில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது
இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு.
1, பிரம்மபுரம் – பிரம்மன் வழிபட்டதால் இப்பெயர்.
2, வேணுபுரம் – இறைவன் மூங்கில் வடிவில் தோன்றினான்.
3, புகலி – சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.
4, வெங்குரு – குரு பகவான் வழிபட்டது.
5, தோணிபுரம் – பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததால் இப்பெயர்.
6, பூந்தராய் – பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.
7, சிரபுரம் – சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.
8, புறவம் – புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.
9, சண்பை – சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம் குலத்தவர்களால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் வழிபட்டது.
10, சீகாளி (ஸ்ரீகாளி) – காளிதேவி சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க வழிபட்டது.
11, கொச்சைவயம் – மச்சகந்தியைக் கூடிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டது.
12, கழுமலம் – மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.
சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில். இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்கம் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார். கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. சட்டைநாதர் பெயரிலேயே தேவஸ்தானம் விளங்குகிறது. குறுகலான வழியே நுழைந்து மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும்.
ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து ஓம் என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி உமா மகேஸ்வரராக வருகையில் ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார். மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும் ஆணவங்களை அழிப்பவராக சட்டை நாதராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் திருஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்திருக்கின்றார்கள். இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக உள்ளது. உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். நடு அடுக்கில் உமாமகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர் என அழைக்கிறார்கள். கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால் விஷ்ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்.
காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி வடை மாலை அணிவித்து பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது. உரோமச முனிவர் கயிலை சென்று சிவனை நோக்கி தவம் செய்து இறைவா பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும் என வேண்டினார்.
ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்க கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.
சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும் இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். திருஞானசம்பந்தர் பிறந்து நடந்து மொழி பயின்ற அவரது வீடு திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது. பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன, இரண்டாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார். பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று அப்பர் எனப் பெயர் பெற்ற தலம். சுந்தரர் இங்கு வந்தபோது திருஞானசம்பந்தப்பெருமான் அவதரித்த இடம் என்று மிதிப்பதற்கு அஞ்சி ஊர் எல்லையில் நின்று பாட சுந்தரருக்கு அங்கேயே இறைவன் காட்சி தந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.