சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 16 வது தேவாரத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். புராணபெயர் திருப்புள்ளிருக்குவேளூர். புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – ரிக் என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் வந்தது என்று புராண வரலாறு உள்ளது. மூலவர் வைத்தியநாதர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தையல்நாயகி, தைல நாயகி. தலமரம் வேம்பு. தீர்த்தம் சித்தாமிர்த குளம். இத்தலத்தீர்த்தம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது. வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.
நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும் ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்பமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவன் கோவிலை தரிசித்த பலன் கிடைக்கும். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத் தரும் என்கிறது புராணம். பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான் தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும் அமிர்தசஞ்சீவியும் வில்வத்தடி மண்ணும் வைத்து 4448 வியாதிகளையும் தீர்க்கின்றார். இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.
மூலவருக்கு முன் தங்கம் வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும் சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன. முருகப் பெருமான் செல்வமுத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன் அருள்கின்றார், சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேச பூஜைகள் சந்தன அபிஷேகம் நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குகின்றார்கள். மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் கிழக்கே பைரவர் மேற்கே வீரபத்திரர் தெற்கே விநாயகர் வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.
தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு வருபவர்கள் உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும், செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும். இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு தவளை இருப்பதில்லை.
முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். ராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம். இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி ராமபிரான் இத்தலத்தில் சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தி என்ற வியாதியினால் பீடிக்கப்பெற்ற சித்திரசேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான். நவகிரக தலங்களில் அங்காரகன் தலமாகும் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. செவ்வாய் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), ராமர், லட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை, பரசர், துருவாசர், சிவசன்மன் வணங்கியுள்ளனர், திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்கள் பாடியுள்ளனர்.