சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 19 வது தேவாரத்தலம் திருநின்றியூர். புராண பெயர் திரிநின்றவூர். மூலவர் மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் லோகநாயகி, உலகநாயகி. தலமரம் விளாமரம், வில்வம். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், நீலப்பொய்கை.
கோவில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் உள்ளார். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார்.
சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் இருக்கும் ஊர் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் சிதம்பரம் சென்ற போது காவலாளிகள் கொண்டு வந்த விளக்கு திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப் போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் ஏதேனும் நிகழுமா எனக்கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே கோயில் எழுப்பி வழிபட்டார். இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் கோடரி வெட்டிய தழும்பு இருப்பதைக் காணலாம். திரி அணைந்த தலம் என்பதால் திரிநின்றியூர் என்று பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி உள்ளார்கள்.
பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும் பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். மகரிஷியான ஜமதக்னியின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினான். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவளை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டனர். லட்சுமி, பரசுராமர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
சுந்தரரின் இரண்டு பதிகங்களில் 1 முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன. இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.
2 வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.
3 வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.
4 வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.
5 வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும் அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.
7 வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டு யானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்பு இருந்த வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.
இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல மூன்று குளங்கள் உள்ளது. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம் பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.