சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 215 வது தேவாரத்தலம் ராஜேந்தரப்பட்டினம். புராணபெயர் எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர். மூலவர் திருக்குமாரசாமி, சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மார்ச் மாதம் 16 முதல் 20 வரை 5 நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் வீராமுலைஅம்மன், நீலமலர்கண்ணி அம்மை, அபின்னகுசநாயகி, அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை. தீர்த்தம் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம். தலமரம் வெள்ளேருக்கு.
தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தில் பறவையாகவும் மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும் மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள் என கூறி மறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது. ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் உள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், லட்சுமி சந்நிதிகள் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான். இத்தலத்தின் எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு. கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால் அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன் தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். இக்குற்றத்திற்காக சிவன் முருகனை மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு உருத்திரசன்மர் என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் குமாரசாமி ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது. முருகப்பெருமான், வியாக்ரபாதர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.