சக்தி பீடத்தில் 18 ஆவது கோயில் கவுகாத்தி நகரில் உள்ள காமாக்யா கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மன்மதனை (காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும் காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் காமரூப் எனவும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யா தேவியின் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூல தெய்வமாக காமாக்யா அருள் பாலிக்கிறாள். இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இக்கோயில் காமகிரி சக்தி பீடமாகும். 51 சக்தி பீடங்களில் சதிதேவியின் யோனி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் தேவியின் சிலை இல்லை. இங்கே மூலஸ்தானத்தில் ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது. மிகவும் இருண்ட கர்ப்பகிரஹத்தில் தானாக மேலெழும்பும் நீரூற்று வடிவத்தில் அம்பாள் உக்ர தேவதையாக அருள் பாலிக்கிறாள். வருடத்தில் ஒரு முறை நடைபெறும் அம்புபச்சி மேளா திருவிழாவின் போது மட்டும் இந்த நீருற்று சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது. கோயில் தீர்த்தம் பிரம்மபுத்திரா.
கோயில் அமைப்பு வித்தியாசமான கூம்பு கோபுர அமைப்பும் கலசமும் வெளிர் மஞ்சள் வண்ணத்தில் உள்ளது. கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் போல தோன்றும். உள்ளே சென்றால் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். உள்ளே சென்றால் கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேரு என்று பெயர். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க் கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. காமாக்யாவின் யோனி பீடத்தின் அருகே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் சிறு வெளிச்சத்தில் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது. அந்த விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாகப் வழங்கப்படுகிறது. அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர். மேடையின் கீழ் ஓடும் தண்ணீரை சவுபாக்யகுண்ட் என்று அழைக்கிறார்கள். குகையிலிருந்து வெளியேறும் போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
தச மஹா வித்யாக்கள் எனப்படும் பத்து தேவியரான திரிபுரசுந்தரி மாதங்கி மற்றும் கமலா ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகள் கோயிலின் உள்ளே தனி சன்னதியிலும் மீதி ஏழு தெய்வங்களான காளி, தாரா, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஆகியோருக்கு கோயிலுக்கு வெளியே தனித்தனி கோயில்களில் சிலைகள் உள்ளது. கோயில் வளாகத்தில் காமேஸ்வரர் (உமானந்தா), சித்தேஸ்வரர், அம்ரடோகேஸ்வரர் (ஹெருகா), அக்ப்ரா மற்றும் கோட்டிலிங்கம் (தத்புருஷா) என்ற பெயருடைய ஐந்து சிவன் கோவில்கள் உள்ளன. கோயிலின் அருகே மூன்று விஷ்ணுவின் கோவில்களும் உள்ளன. அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு அஷ்வகிரந்தா என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும் சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன. இத்தலத்தின் மறுகரையில் மயில் மலை அல்லது பஸ்மாசல மலை எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த காமதகனம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் உமானந்த சிவா கோயில் ஒன்றும் இருக்கிறது. அருகில் அனுமன் கோயில் இருக்கிறது. பைரவருக்கும் சனி சன்னதி இருக்கிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான் என்ற வரலாறு உள்ளது.
பூமியை இரண்யாட்சகன் அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்த போது மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம் இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான். அதனால் கொல்லவும் படுவான் என்று எச்சரித்தார். அப்போது நரகாசுரன் தன் தாயின் கைகளால்தான் தனக்கு மரணம் என்னும் வரத்தை கேட்டு பெற்றான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார். பல வரங்களைப் பெற்று வலிமையுடன் இருந்த நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். சக்தி தேவியின் மாயா வடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன். இந்த நிலையில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும் போர் நடந்த நிலையில் வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் கிருஷ்ணரை கண்டு சிரிக்க கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது.
தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது. அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரத்தில் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது. இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில் சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக்கு என்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது காமாக்யா தேவி கோவில் ஆகும்.
அம்புபச்சி மேளா என்ற பண்டிகை கோயிலின் புனித பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. அம்பு என்றால் தண்ணீர் பச்சி என்றால் மலர்ச்சி என்று பொருள். ஜூன் மாதத்தில் இத்திருவிழா ஆஷாத் என்று வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். காமாக்யா கோயிலின் கதவுகள் இந்த மூன்று நாட்களிலும் மூடப்படும். மேலும் நீலாஞ்சல் மலைப் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களும் மூன்று நாட்களும் மூடப்படுகின்றன. இந்த மூன்று நாளும் பக்தர்கள் கோயிலை சுற்றி தங்கி வழிபாடு நடத்துகிறார்கள். இந்த நேரத்தில் கோயிலின் தீர்த்தமான பிரம்மபுத்திரா சிவப்பு நிறமாக மாறுகிறது. காமாக்யா கோவிலுக்குள் மூலஸ்தானத்தில் உள்ள இடத்தை தினமும் குளிப்பாட்டி கோவிலின் பூசாரிகளால் சிகப்பு நிற துணிகள் ஆடைகள்ளாக அணிவிக்கப்படும். இந்த துணிகள் நான்காம் நாள் கோயில் திறக்கப்படும் போது அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்படும். இந்த நிகழ்வு 5000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு தாந்திரீக முறையில் செய்யப்படுகிறது. இந்த திருவிழாவின் போது தற்போது 1 லட்சம் பக்தர்கள் வரை வந்து வழிபட்டு செல்கிறார்கள். இந்த திருவிழா சமயத்தில் இரண்டு வாரங்கள் இந்த மலைகள் உயிர் பெற்று விழித்திருந்து இறைவியிடமிருந்து சக்தியை பெற்று அனைவருக்கும் சக்தியை கொடுக்கின்றன. ஆகவை இந்த மூன்று நாட்களும் இறைவனை அடைய தாந்திரீக முறையில் பூஜை செய்பவர்கள் இங்கு வந்து தங்கி வழிபட்டு செல்வார்கள். துர்க்கா பூஜை மற்றும் மானஷா பூஜை ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப் படுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட காமாக்யா கோவில் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கிபி1565 இல் மீண்டும் கட்டினார். 1665 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயில் உள்ள மலை மீது செல்ல 600 படிகள் உள்ளது. சாலை வழியாக செல்ல மலைப்பாதையில் உள்ள சாலையில் 3 கிமீ பயணித்து கோவிலை அடையலாம். மகாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பு உள்ளது. காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆமைகள் குரங்குகள் மற்றும் ஏராளமான புறாக்கள் கோயிலைச் சுற்றி வசிக்கின்றன. இவற்றிற்கு பக்தர்கள் உதவியுடன் கோயில் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது.