சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 254 வது தேவாரத்தலம் பாடி. புராணபெயர் திருவலிதாயம். மூலவர் திருவல்லீஸ்வரர், வலிதாயநாதர், திருவலிதமுடையநாயனார். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்குப் நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் ஜகதாம்பாள், தாயம்மை. தலவிருட்சம் பாதிரி, கொன்றை. தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம். இறைவன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னப்பட புதிய திருவுருவம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து பின்னமான திருவுருவத்தை இறைவன் கருவறைக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கோவில் 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம் நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.
வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தில் சூரியன், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும்.
பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம் நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருக்கின்றது. வியாழன் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். வியாழபகவானின் மகனான பரத்வாஜர் சாபம் காரணமாக கரிக்குருவியின் பிள்ளையாக வலியன் என்னும் கருங்குருவியாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான் இத்தலம் திருவலிதாயம் என்றும் சிவன் வலியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், கருங்குருவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.