சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 255 வது தேவாரத்தலம் திருமுல்லைவாயில். புராணபெயர் திருவடமுல்லைவாயல். மூலவர் மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் கொடியிடை நாயகி, லதாமத்யாம்பாள். அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால் கொடியிடைநாயகி எனப்படுகிறாள். தலவிருட்சம் முல்லை. கொன்றை. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம். இத்தலத்தில் உள்ள உயரமான சுயம்புலிங்கம் சதுரபீட ஆவுடையார் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும். இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள். ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. மூலவரின் விமானம் யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது.
இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும் திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும் துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும் கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி உள்ளார். அவருக்குப் பின்னால் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் மன்னருக்கு துணையாகச் சென்றதால் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆன ரசலிங்கம் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர் ராமரின் பிள்ளைகள் லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர் உள்ளனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
பல்லாண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன் ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன் யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய் கீழே இறங்கி பார்த்தபோது மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில் உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மன்னனுக்கு காட்சி தந்தார் வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும் வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம் என்றும் கூறி அருள் செய்து நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன் அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து மாசிலாமணீஸ்வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம். மேலூரில் வீற்றிருக்கும் திருவுடையம்மன், திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மன், இத்தலத்து கொடியிடையம்மன் மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்கிறது தலவரலாறு. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.