சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 256 வது தேவாரத்தலம் திருவேற்காடு. மூலவர் வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளார் அம்பாள் பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை. தலவிருட்சம் வெள்வேலமரம். தீர்த்தம் வேததீர்த்தம், பாலிநதி, வேலாயுத தீர்த்தம். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள யானையின் பின்பகுதி போன்ற கஜப்பிருஷ்ட அமைப்புடையது. கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. அவர் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது.
பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின் சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப்படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். முருகர் வழிபட்ட அந்த ஸ்கந்த லிங்கம் முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் இப்போதும் அந்த சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.
பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியிருக்கிறார். அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது. இதனால் இத்தலத்திற்கு விடந்தீண்டாப்பதி என்ற பெயரும் உண்டு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்துவிட்டு, தான் உண்பதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவருக்கு வறுமை ஏற்பட்டது. இதனால் தனக்கு தெரிந்த சூதாட்டத்தால் பலரிடம் வென்று வென்றதை மறுத்தவர்களை குத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து அடியவர்களுக்கு உணவளித்து வந்தார். இவரது மூர்க்க செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவியடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. பிருகு முனிவரின் சாபத்தால் திருமால் ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.
திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என தல புராணம் கூறுகிறது. சிவன் ஒரு முறை பார்வதியிடம் இத்தலத்தை மனதால் நினைத்தாலும் ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும் இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார் எனவும் தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி ஆகிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.