தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 259 திருக்கச்சூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 259 வது தேவாரத்தலம் திருக்கச்சூர். புராணபெயர் நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில். மூலவர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர். இறைவன் சிறிய பாணம் சுயம்புலிங்கமாக அருள்பாளிக்கிறார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் அமைப்பில் உள்ளது. உற்சவர் அமிர்த தியாகராஜர். அம்பாள் அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி அம்மன், கன்னி உமையாள். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. தலவிருட்சம் கல்லால மரம், வேர்ப்பலா, ஆல், மருந்துமலை. தீர்த்தம் கூர்மதீர்த்தம். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள இக்கோவில் மலைமேல் ஒரு சிவனும் அடிவாரத்தில் உள்ள கோவிலில் மூலவராக ஒரு சிவனும் கோவிலுக்குள் தனிச்சன்னதியில் ஒரு சிவனும் இருக்கின்றனர். திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்த போது இக்குளத்தை உருவாக்கியுள்ளார். இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் சதுர்முக சண்டேசுவரராக காட்சித் தருகின்றார். வடக்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும் விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது. முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இவரை அருணகிரியாதர் தனது திருப்புகழில் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவிலில் நவக்கிரக சன்னதி இல்லை.

ஒருசமயம் இந்திரன் தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகையைத்தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க அவர் மருந்துமலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும் அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அசுவினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவன் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. சிவன் அசுவினி தேவர்களிடம் மருந்து இருந்த இடத்தை காட்டிய போதிலும் அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்தில் தவித்த அவர்களின் மனநிலையை கண்டு இரக்கம் கொண்ட அம்பாள் மூலிகையின் மீது ஒளியை பரப்பி அதனை சூழ்ந்திருந்த இருளை அகற்றி அருள்புரிந்தாள். இதனால் அம்பாளை இருள்நீக்கியம்பாள் என பெயர் பெற்றாள். தேவர்கள் பலா, அதிபலா எனும் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர்.

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார் அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு கச்சபேஸ்வரர் என்ற பெயரும் தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம் கல்வி இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில் தியாகராஜராக அஜபா நடனம் ஆடிக் காட்டியுள்ளார். உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடக்கிறது.

சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டு வர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிட்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகி முதுவாய் ஓரி கதற எனத் தொடங்கி பதிகம் பாடினார். சுந்தரருக்காக இரந்த(பிட்சை எடுத்து) சிவன் இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலும் விருந்து படைத்த சிவன் விருந்திட்டீஸ்வரர் என்ற பெயரில் பிரகாரத்தில் தனிச்சன்னதியிலும் காட்சி தருகிறார். சுந்தரர் இவரையும் கச்சபேஸ்வரரையும் சேர்த்து ஒரே பாடலில் பதிகம் பாடியுள்ளார். இரு கோயில்களிலும் கருவறைக்கு நேரே வாயில்கள் இல்லை. மலையில் மருந்தீஸ்வரர், அடிவாரத்தில் இரந்தீஸ்வரர், விருந்தீஸ்வரர் என மூன்று கோலங்களில் சிவன் இங்கு அருள் செய்கின்றார். காஞ்சிப்புராணத்தில் ஆதி காஞ்சி என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.