இராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை மேற்கொண்டு கானகம் செல்ல தயாரானார். கானகம் சென்று விடுவதால் தன்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவு செய்து அனைத்தையும் தானமாக கொடுத்தார். யாத்திரை செல்வதற்கு முன்பு தன்னிடம் உள்ள பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதினால் இதற்கு யாத்ரா தானம் என்று பெயர் வந்தது. அன்று முதல் வந்ததுதான் யாத்ராதானம். யாத்ரா என்ற வார்த்தை வடசொல். தமிழில் யாத்திரை என்று பெயர். யாத்திரை செல்லும் சமயம் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்கிறோம். அப்போது பயணத்தில் தேவைப்படுகின்ற பொருட்களை மட்டுமே கொண்டு செல்கிறோம். மீதி பொருட்களை வீட்டில் பூட்டி விட்டுத்தான் செல்கிறோம். வீட்டில் பூட்டி வைத்திருக்கும் பொருட்கள் பயணத்திற்கு பயன்படாது. அது போலவே இறைவன் இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய புண்ணியம் மட்டுமே தேவை. நம்மிடம் இருக்கும் எந்த பொருட்களும் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லும் பயணத்திற்கு உதவாது. நம்முடைய இறுதி காலத்திற்கு பின்னும் இந்த பொருட்கள் நம்முடன் வருவதுமில்லை. ஆகவே தானங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொண்டல் அந்த புண்ணியம் நம்மை இறைவனிடத்தில் அழைத்துச் செல்லும்.
இராமர் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட தன்னிடம் உள்ள எந்த பொருளை கேட்டாலும் அனைத்தையும் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வயது முதிர்ந்த ஒரு அந்தணன் வந்தார். அவன் பெயர் திரிசடன். அவருக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை எடுத்து அதிலே ஜீவனம் செய்து வந்தார். இராமர் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவரது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று இராமர் கானகம் செல்லும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார். நீங்களும் அவர் இருக்குமிடம் என்று ஏதாவது பொருள் தானமாக வாங்கி வாருங்கள். நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார். ஆகவே சென்று வாருங்கள் என்றாள். அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான். அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த இராமரை கண்டார். இராமரை பணிந்து தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது. நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் தங்களது ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் வயல் வரப்பில் தானே விழும் நெல்லை நம்பியே வாழ்ந்து வருகிறோம். என்மீது கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான். உடனே ராமர் அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கு முதலிலேயே கொடுத்து விட்டேன். தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என்று கேட்டார்.
இராமரின் கேட்டதும் நூறு பசுக்கள் கேட்கலாமா? இருநூறு பசுக்கள் கேட்கலாமா? அல்லது அதற்கும் மேலும் கேட்கலாமா? என்று அந்தணன் யோசித்தான். பின் புத்திசாலிதனமாக எனது வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் வாழ எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நீங்களே கொடுங்கள் என்று இராமரின் விருப்பத்திற்கு விட்டு விட்டான். இரமரும் அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள். அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை அனைத்தையும் உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள் என்றார். இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன. நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான். தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான். தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது. அவனுடைய பேராசையை எண்ணி இராமர் சிரித்துக் கொண்டார். பொருளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண்டார். உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார். அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான். யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு இராமர் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் சுகமாக வாழ்ந்தான்.
இதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் வெளியூர் பயணம் அல்லது கோயில்களுக்கான யாத்திரை அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள். அதனால் எந்த ஒரு துன்பமும் இல்லாமல் பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்கள். அந்தணரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் இவராக கேட்டிருந்தால் 100 அல்லது 200 பசுக்கள் மட்டுதே கேட்டிருப்பார். அவை மட்டுமே அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் இராமரிடமே எனக்கு என்ன வேண்டுமோ நீங்களே கொடுங்கள் என்று கேட்டதினால் அவனுடைய சக்திக்கு ஏற்றார்போல் அதிகமான பசுக்களையே கொடுத்தார். அதுபோல் நாமும் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதை விட எனக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது எதுவோ நன்மை கொடுக்க கூடியது எதுவோ அதனை எனக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. குழந்தைக்கு எது நல்லது என்று தாய்க்கு மட்டுமே தெரியும். அதுபோல் நமக்கு எது நன்மை தரும் எது மகிழ்ச்சி கொடுக்கக் கூடியது கூடியது அனைவருக்கும் தாயாக இருக்கும் இறைவனுக்கு மட்டுமே என்று தெரியும்.
